உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயல்நாட்டு வாணிகம்‌

538

அயல்நாட்டு வாணிகம்‌

அயல்நாட்டு மூலதனம், திட்டம் நிறைவேற்றலுக்கு இந்தியாவுக்கு உதவப்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளிலும் உற்பத்தித் திறன் உயர்ந்துள்ளது. ஆனால், அதற்காக நேரடியாகவும் மறைமுகமாகவும் உயர்ந்த செலவையும் வருந்தொகையை மீளச் செலுத்தும் நிலையையும் இந்தியா மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, அயல்நாட்டு மூலதனத்தைப் பெறுவதில் கவனத்துடன் செயற்பட வேண்டும். இயன்றவரை தன்னிறைவு பெற வேண்டும் என்ற ஐந்தாண்டுத் திட்டக் குறிக்கோளை அடைய இந்தியா முனைய வேண்டும். காண்க: அயல்நாட்டு உதவி, அயல்நாட்டுக் கடன். ச.கி.

துணை நூல்கள்:

ச. அன்சர் அலி, “இந்தியப் பொருளாதார வளர்ச்சிப் பிரச்சினைகள்”, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், முதற்பதிப்பு – 1972.

சபாநாயகம், எஸ்., “பொருளாதார முன்னேற்றமும் திட்டமும்”, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், முதற் பதிப்பு–1972.

இராக்னர் நர்க்சு, தமிழாக்கம், குமாரசுவாமி, மா., “வளர்ச்சி குறைந்த நாடுகளின் முதலாக்கம் பற்றிய சிக்கல்கள்”, தமிழ் வெளியீட்டுக் கழகம், தமிழ் நாடு அரசாங்கம், 1957.

ராவ், வி.கே. ஆர்.வி., தமிழாக்கம், சுப்பிரமணியம் எம்.கே., “பொருளாதார வளர்ச்சிக் கட்டுரைகள்”, தமிழ் வெளியீட்டுக் கழகம், தமிழ்நாடு அரசாங்கம், 1967.

Ruddar Datt, K.P.M. Sundaram, “Indian Economy”, S. Chand & Co. Pvt. Ltd., New Delhi, 1981.

Ishwar Dhiogra, C., “The Indian Economy Resources Planning & Development Problem”, Sultan Chand & Sons, 23 Daryar Ganj, New Delhi, 1983.

அயல்நாட்டு வாணிகம்: பொருள்களைக் கொள்முதல் செய்வதும் விற்பதும் ஒரு நாட்டிற்கும் பிற நாடுகளுக்கும் இடையில் நடைபெற்றால், அது அயல்நாட்டு வாணிகம் (Foreign Trade) அல்லது பன்னாட்டு வாணிகம் (International Trade) அல்லது புற வாணிகம் (External Trade) எனப்படும். ஒரு நாட்டின் தொழில் வளர, வேலை வாய்ப்புகள் பெருக, வணிக நடவடிக்கைகள் வளர வாணிகம் செழித்தோங்க வேண்டும். அயல்நாட்டு வாணிகம் மூன்று வகைப்படும். உள்நாட்டுப் பொருளை வெளிநாடுகளுக்கு அனுப்புவது ஏற்றுமதியாகும். நாட்டில் கிடைக்காத பொருள்களை வெளிநாட்டிலிருந்து கொள்முதல் செய்வது இறக்குமதியாகும். ஒரு நாட்டிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்து, அவற்றையே மற்றொரு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் வாணிகம் மறு ஏற்றுமதி வாணிகம் (Entrepot Trade) எனப்படும். மறு ஏற்றுமதிக்காக இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது இறக்குமதி வரி செலுத்தாமல் இருப்பதற்கு அவற்றைப் பிணைப்பண்டகங்களில் வைக்க வேண்டும். இறக்குமதி வரி செலுத்தி இருந்தால் அவற்றை மறு ஏற்றுமதி செய்தவுடன் திரும்பப் பெறலாம். ஆனால், அவற்றை ஏற்றுமதி செய்யும்போது ஏற்றுமதி வரி செலுத்த வேண்டியதில்லை என்றாலும், கப்பல் பட்டியல் (Shipping Bill) அமைத்துச் சங்க அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.

நாடுகளில் இயற்கை வளங்களும் கனிச் செல்வங்களும் சம அளவில் இருப்பதில்லை. நாட்டிற்கு நாடு தட்பவெப்பநிலை, மக்கள் இயல்பு, வளங்களின் தரம் போன்றவை வேறுபடுகின்றன. எனவே, ஒவ்வொரு நாடும் ஒரு சில பொருள்களை உற்பத்தி செய்வதற்குச் சிறப்பிடம் தருகிறது. பிற நாட்டோடு உறவு கொண்டு தனக்குத் தேவையான பொருள்களை வாங்கவும், தான் உற்பத்தி செய்தவற்றைப் பிற நாட்டிற்குக் கொடுக்கவும் வேண்டிய நிலை ஏற்படுகிறது. எந்த நாடும் எல்லாத் தேவைகளையும் தானே உற்பத்தி செய்து தனித்து வாழ இயலாது. அயல் நாட்டு வாணிகம் மிகவும் பழைமையானது. ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பது தமிழ் முதுமொழி. முற்காலத்தில் ஒரு நாட்டு மக்கள் தங்கள் நாட்டுப் பொருள்களை மற்றொரு நாட்டிற்குப் பாய்மரக் கப்பல்களில் எடுத்துச் சென்று விற்றுவிட்டுத் தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கி வந்தனர். தமிழ்நாட்டில் சங்ககாலம் தொட்டே அயல்நாட்டு வாணிகம் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது. பூம்புகாரில் அராபியக் குதிரைகளும் அயல்நாட்டுப் பொருள்களும் மிகுதியாகக் காணப்பட்டதாகவும், கிரேக்க நாட்டின் பேரழகி கிளியோபாத்ரா தமிழ் நாட்டு முத்துகளை மிகவும் விரும்பியதாகவும் வரலாறு கூறுகிறது. இந்தியாவை 200 ஆண்டுகள் ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்களும் இங்கு வாணிகம் செய்யவே வந்தனர். எனவே, அயல்நாட்டு வாணிகம், பொருள் கொள்முதலிலும் விற்பனையிலும் மட்டும் அடங்காமல், நாகரிகத்தையும் பண்பாட்டையும் கல்வி அறிவையும் நல்லெண்ணத்தையும் நாடுகளிடையே பரப்பவும் செய்கிறது.

அறிவியல் வளர்ச்சியின் காரணமாக உலகில் காலமும் இடமும் குறுகிவிட்டன. நாகரிக வளர்ச்சி, மக்கள் பெருக்கம் போன்றவையும் சேர்ந்து அயல்நாட்டு வாணிகத்தின் அளவை உயர்த்தியுள்ளன. போக்குவரத்துத் தொடர்பு வசதி போன்றவைகளின் புரட்சியான வளர்ச்சி, பிற நாடுகளுக்கு நேரடியாகப்