உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயல்நாட்டு வாணிகம்‌

543

அயல்நாட்டு வாணிகம்‌

மதியாளரின் நாணயம் பற்றி அறிதல், ஏற்றுமதி, உரிமம், கப்பலின் ஆணை, சரக்குக் கட்டுதல், குறியிடுதல், அயற்செலாவணி, சுங்க முறைகள், கடல் காப்பீடு, கப்பலின் ஆவணங்கள், பணம் வாங்குதல், கப்பல் சீட்டுப் பெறுதல் போன்ற முறைகளைப் பின்பற்ற வேண்டும். அயல்நாட்டு இறக்குமதியாளரிடமிருந்து வரும் ஆவணங்களுக்கு முழு விவரம் தந்து பதிலெழுத வேண்டும். அதாவது, சரக்கு அனுப்பப்படும் காலம், பணம் செலுத்தும் முறை போன்றவற்றை உடனடியாக எழுத வேண்டும். தனது விலைப்புள்ளி (Quotation), விற்பனைக் கட்டுப்பாடுகள் (Terms of Sale) போன்றவற்றை அனுப்ப வேண்டும். மாதிரிப் பொருள் பட்டியலும் (Proforma Invoice) அனுப்புவதுண்டு. பல்வேறு கடிதப் போக்குவரத்திற்குப் பிறகு ஏற்றுமதியாளர் இறக்குமதியாளரின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கும்போது விற்பனை ஆணை வந்துவிடும். அதில் கட்டுதல், குறியிடுதல், விலை, காப்பீடு, பணம் செலுத்தும் முறை, இறக்குமதி உரிமம் போன்ற விவரங்கள் அடங்கியிருக்கும், மேற்கூறிய விவரங்கள் இல்லாமல் ஏற்றுமதியாளரின் பொறுப்பிலே விடப்பட்டிருந்தால் அது திறந்த விற்பனை ஆணை (Open Indent) எனப்படும்.

ஏற்றுமதியாளர் இறக்குமதியாளரின் நாணயம் பற்றி விசாரித்து அறிய வேண்டும். அவர் இறக்குமதியாளர் மீது வரையும் மாற்றுச் சீட்டை அவர் தம் வங்கி ஒன்று ஏற்குமாறோ, பணம் செலுத்துமாறோ உள்ள அவரது நாட்டின் வங்கியிடமிருந்து வாணிக உறுதிக் கடிதம் ஒன்று பெற்று அனுப்புமாறு இறக்குமதியாளரைக் கேட்க வேண்டும். ஏற்றுமதியாளருடைய பொருள் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டிற்கு உட்படாத பொருளாக இருந்தால், அதாவது, திறப்புப் பொது உரிமப் பட்டியலில் உள்ள பொருளாக இருந்தால், தனி ஏற்றுமதி உரிமம் தேவை இல்லை. தம்மை ஓர் ஏற்றுமதியாளர் என்று பதிவு செய்து இருந்தாலே போதும். அவ்வாறில்லாமல் அப்பொருள் கட்டுப்பாட்டிற்குட்பட்டதாயின் உரிய விண்ணப்பம் செய்து அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி ஏற்றுமதி உரிமம் பெற வேண்டும். விற்கும் ஆணை பெற்றவுடன் சரக்கு அனுப்ப வேண்டிய காலத்திற்கு முன்னதாகவே தகுந்த கப்பலில் இடம்பெற முயற்சி செய்ய வேண்டும். அதற்காக அவர் கப்பல் கழகத்தோடு தொடர்பு கொண்டு ஒப்பந்தம் செய்த பின்னர்க் கப்பலின் ஆணையைப் பெற வேண்டும். ஏற்றுமதியாளருக்குக் கப்பலில் முழு இடமும் தேவை என்றால், அந்தக் கப்பலையே வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இத்தகைய ஒப்பந்தம் தனிக்கப்பல் வாடகை ஒப்பந்தம் (Charter Party) எனப்படும். சில நாடுகள் பொருள்களைத் தங்கள் கப்பல்களிலேயே ஏற்றிச் செல்ல வேண்டும் என்று கட்டளை விதிப்பதும் உண்டு. ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களை முறையாக, நன்றாகக் கட்டுதல் செய்ய வேண்டும். அது நன்கு அமையாவிட்டால், கப்பல் தலைவர், கப்பல் சரக்குச் சீட்டில் குறிப்பிடுவார். இறக்குமதியாளர் கட்டுதல் பற்றி ஒன்றும் கூறவில்லை என்றால், சரக்கிற்கேற்பப் பொருளைக் கட்டியனுப்புவது ஏற்றுமதியாளரின் கடமையாகும். அவ்வாறு கட்டப்பட்டுள்ள பொருள்கள் மீது ஒரு தனிக் குறியும், விற்கும் ஆணை எண்ணும், போய்ச் சேரவேண்டிய துறைமுகத்தின் பெயரும் எழுதப்பட வேண்டும். வட்டம், முக்கோணம், நீண்ட சதுரம் போன்றவடிவத்தில் தனிக் குறி இடலாம். இவ்வாறு கட்டுதல் செய்யப்பட்ட பொருள்களைக் கப்பலில் ஏற்றிச் சுங்க முறைகளை நிறைவேற்றிக் கப்பலில் ஏற்றும் பொறுப்பைத் தாமாகவே மேற்கொள்ளலாம் அல்லது அப்பொறுப்பை அவர் அனுப்பீட்டு முகவரிடம் (Forwarding Agent) ஒப்படைத்தும் விடலாம். ஏற்றுமதியாளர் ஏற்றுமதி மூலம் அவர் பெறும் அயற் செலாவணி முழுவதையும் மைய இருப்பு வங்கியிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அதற்காக அவர் 4 அரசு ஆணைப் படிவங்களை நிறைவு செய்து கையெழுத்திட வேண்டும். அப்படிவங்களில் ஒன்றை வைத்துக் கொண்டு ஏனையவற்றை நாணய மாற்று வங்கியிடம் தர வேண்டும். அவ்வங்கியும் அரசு ஆணைப் கொண்டு படிவம் ஒன்றை வைத்துக் ஏனையவற்றை மைய இருப்பு வங்கிக்கு அனுப்பிவிடும். நேபாளம், பூட்டான், திபெத்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இது தேவையில்லை. ஏற்றுமதி செய்த நாடுகளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அது பற்றிய மாற்றுச் சீட்டுகள் செலுத்தப்படாமலும், பணம் மைய இருப்பு வங்கியிடம் ஒப்படைக்கப்படாமலும் இருந்தால், அதன் காரணத்தை மைய இருப்பு வங்கிக்கு ஏற்றுமதியாளர் தெரிவிக்க வேண்டும். அவர் தரும் பதில் அவ்வங்கிக்கு நிறைவு தரவில்லை என்றால், பொருள்களை உடனடியாக விற்குமாறு அது ஆணை பிறப்பிக்கலாம். ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் வரி இல்லாதவை, வரிக்குட்பட்டவை, மறு ஏற்றுமதிக்கான அல்லது பிணையக் கிடங்குகளில் உள்ள சரக்குகள் என மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகைக்கும் ஒரு ஏற்றுமதிப் பட்டியல் அமைக்க வேண்டும். ஏற்றுமதியாளர் சுங்க அலுவலகம் சென்று தக்க படிவங்கள் பெற்று மூன்று படிவங்களாக அவற்றை அமைக்க வேண்டும். இப்பட்டியலில் பொருள் விவரம், அளவு, கட்டுதல், குறி, சேர வேண்டிய துறைமுகம், கப்பல் பெயர் ஆகியவைகளை எழுத வேண்டும். அதனுடன் ஏற்றுமதி உரிமத்தையும் அரசு ஆணைப்படிவத்தையும் இணைத்துச் சுங்க அலுவலகத்தில் தர வேண்டும். உரிய ஏற்றுமதி வரி செலுத்தியபின் ஏற்-