அயற் செலாவணி
548
அயற் செலாவணி
வரையறை: அயற் செலாவணி என்பது பன்னாட்டு வாணிகத்தில் பணம் மாற்றப்படும் விதத்தை விளக்கும் அறிவியலும் கலையும் ஆகும். உள்நாட்டு வழக்கத்தில் கடன் கருவிகள் (Credit Instruments) எவ்வாறு உலோக நாணயங்களைச் சிக்கனப்படுத்துகின்றனவோ, அவ்வாறே பன்னாட்டு வாணிகத்தில் தங்கத்தைப் பயன்படுத்துவதை அயற் செலாவணி சிக்கனப்படுத்துகிறது.
அயற் செலாவணி அங்காடியில் (Market) அயற் செலாவணி வாங்கவும், விற்கவும் படுகிறது. இந்தியாவின் அயற் செலாவணி அங்காடியில், அயற் செலாவணிகள் குறிப்பிடப்பட்ட வரைவோலைகளை (Drafts) உரூபாய்க்குப் பெற்றுக் கொள்ளலாம். அமெரிக்க தாலர், பிரான்சின் பிராங்கு, பிரிட்டனின் பவுண்டு இசுடெர்லிங்கு, சப்பானின் ‘என்’ போன்ற செலாவணிகளை உரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இத்தகைய விலைகளே அயற் செலாவணி வீதங்கள் அல்லது மாற்று வீதங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, ஒரு நாட்டின் பணம் மற்றொரு நாட்டின் பணத்திற்கு எந்தவிதெத்தில் மாற்றிக் கொள்ளப்படுகிறதோ, அதுவே அயற் செலாவணி மாற்று வீதம் எனப்படும். இந்தியாவின் அயற் செலாவணி அங்காடியில் அமெரிக்க தாலருக்கான தேவை கூடினாலோ, தாலரின் அளிப்புக் குறைந்தாலோ, தாலரின் உரூபாய் விலை அதிகரிக்கும். இது அயற் செலாவணி மாற்று வீதம் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டும். இதனால், இந்தியர்களுக்கு அமெரிக்கத் தாலரின் விலை அதிகமாகி, அமெரிக்கர்களுக்கு இந்திய உருபாயின் விலை குறைகிறது.
ஒவ்வொரு செலாவணிக்கும் பன்னாட்டு அளவில் அங்காடி இருக்கிறது. இவ்வங்காடியில் உலகின் பல்வேறு நிதி மையங்களுக்கிடையே பல விதங்களிலும் தொடர்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு நாடும், முந்திய இரவில் தொலைபேசி, தந்தி ஆகியவற்றின் மூலமாக வந்து சேரும் ஆணைகளுடன் (Orders) வாணிகம் தொடங்குகிறது. சில வேறுபாடுகளின் காரணமாக, பல அயற் செலாவணிகட்குத் தேவை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. உலகில் உள்ள பல்வேறு செலாவணி அங்காடிகளில் நிலவக்கூடிய மாற்று விகிதங்களைச் செலாவணி அங்காடியில் உள்ள வணிகர் பலரும் தெரிந்து கொள்கின்றனர். மேலும், ஒரு நாட்டின் செலாவணி அங்காடி மூடப்படும்போது, மற்றொரு செலாவணி அங்காடி திறக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இலண்டனில் அங்காடி பிற்பகல் 3 மணிக்கு மூடப்படும்போது நியூயார்க்கிலுள்ள செலாவணி அங்காடி திறக்கப்படுகிறது. நியூயார்க்கு அங்காடி திறக்கப்பட்ட 4 மணி நேரம் கழித்தே சான்பிரான்சிசுகோ அங்காடி திறக்கப்படுகிறது. தோக்கியோவிலுள்ள (Tokyo) அங்காடி திறந்து மூடும்போது பன்னாட்டுச் செலாவணி அங்காடி முற்றுப் பெற்ற நிலை அடைகிறது.
அயற் செலாவணிகளுக்கான கருவிகள்: அயற் செலாவணி அங்காடியில் கீழ்க்காணும் கருவிகள் வழக்கத்தில் உள்ளன. (1) அயல் வாணிக உண்டியல், பன்னாட்டு வணிகத்தில் கடனைத் தீர்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு கடன் கருவி அயல் வாணிக உண்டியல் (Foreign Bills of Exchange). எடுத்துக் காட்டாக ‘ஏ’ என்பவன் (எழுதுபவன்), ‘பி’ க்கு (எழுதப்படுபவன்) ஒரு குறிப்பிட்ட தொகையை அவனுக்கோ, அவன் சொல்லும் ஆளுக்கோ ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் தருமாறு எழுதிக் கொடுக்கும் கடன் கருவியாகும். (2) வங்கி வரைவோலை: தன்னுடைய கிளைவங்கிக்கோ, வேறு ஒரு வங்கிக்கோ காசோலை உடையவருக்கு, அதில் குறிப்பிட்ட தொகையைக் கேட்கும் காலத்தில் கொடுக்கப் பணிப்பதற்கான ஓர் ஆணை வங்கி வரைவோலை (Bank Draft) எனப்படும். (3) தொலைபேசி மூலம் பணம் மாற்றும் முறை: ஒரு வங்கி, தன் கிளை வங்கிக்கோ வேறு ஒரு வங்கிக்கோ, ஒரு குறிப்பிட்ட தொகையை, ஒரு குறிப்பிட்ட ஆளுக்குத் தனது வைப்புத் தொகையிலிருந்து தொலைபேசி மூலம் கொடுக்கச் சொல்லும் ஓர் ஆணை, தொலைபேசி மூலம் பணம் மாற்றும் முறை (Telegraph Transfer) எனப்படும். இது மிக்க விரைவில் பணம் செலுத்தும் முறையாகும். (4) கடனுறுதிக் கடிதம்: ஓர் ஆளுக்கு, ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒரு காசோலையையோ, உண்டியலையோ எடுத்துக் கொள்ளும் உரிமையை அளிக்கும் கருவி கடனுறுதிக் கடிதம் (Letter of Credit) எனப்படும். (5) பயணிகள் காசோலை: ஒரு வங்கியால் கொடுக்கப்பட்ட பயணிகளின் காசோலையைக் கொண்டு, ஒரு பயணி அதன் கிளை வங்கியிலோ, தொடர்புடைய வேறு ஒரு வங்கியிலோ பணமாக மாற்றிக் கொள்ளப் பயன்படும் கருவி பயணிகள் காசோலை (Traveller's Cheque) எனப்படும்.
அயற் செலாவணி வீதம் வரையறுத்தல் முறை: அயற் செலாவணி வீதம் வரையறுக்கப்படும் வகையினை விளக்க மூன்று கோட்பாடுகள் உள்ளன.
(1) தங்கச்சாலை கோட்பாடு: இரு நாடுகள் ஒரே திட்டத்தை மேற்கொண்டிருந்தபோது, இரு நாடுகளிலும் உள்ள இரு நாணயங்களின் தங்கச்சாலை விகிதங்களுக்குச் சமமாக மாற்றுவீதம் வரையறுக்கப்பட்டது. இரு நாடுகள் ஒரே திட்டத்தை மேற்கொண்டிருந்தபோது, வரையறுக்கப்பட்ட மாற்று வீதத்தை விளக்குகின்ற கோட்பாட்டிற்குத்