உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயற்‌ செலாவணி

549

அயற்‌ செலாவணி

தங்கச்சாலைச் சமன்பாட்டு மாற்றுக் கோட்பாடு என்பது பெயர். இரு நாடுகள் தங்க நாணயத் திட்டத்தில் இருந்தபோது, இரண்டு நாடுகளுடைய நாணயங்களின் மாற்று விகிதத்திற்கு அடிப்படை, தங்கச் சாலைச் சமன்பாட்டு மாற்று வீதம் ஆகும். இதுவே சமநிலை மாற்று வீதம் (Par Exchange Value) ஆகும். அங்காடியிலுள்ள மாற்று வீதம், இந்தச் சமநியை மாற்று வீதத்திற்கு ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்கிடையே மாறாதிருந்தது. இந்த எல்லைகளுக்குத் ‘தங்கப் புள்ளிகள்’ (Specie Points) என்பது பெயர். இவை தங்க ஏற்றுமதிப் புள்ளி என்றும், தங்க இறக்குமதிப் புள்ளி என்றும் அழைக்கப்பட்டன. தங்கத்தை ஏற்றுமதி செய்வதில் ஏற்படக்கூடிய காப்புத் தொகை (Insurance), போக்குவரத்துச் செலவு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தங்க ஏற்றுமதி, இறக்குமதிப் புள்ளிகள் வரையறுக்கப்படுகின்றன.

தங்கச்சாலைக் கோட்பாட்டில் (Mint Par Value) சமன்பாட்டு மாற்று வீதம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது என்பதைக் கீழ்வரும் எடுத்துக்காட்டு விளக்குகிறது.

உரூபாய் 1 = 200 மில்லி கிராம்
(தங்கம் உள்ளடக்கியது)
அமெரிக்க தாலர் 1 = 1.5 கிராம்
(தங்கம் உள்ளடக்கியது)
1 தாலர் = 1500
200
= 7.5 உரூபாய்

எனவே, ஒரு தாலருக்கு உரூ. 7.50 சமமாகும். இக்கோட்பாடு இன்று நடைமுறையில் இல்லை. இதன் குறைபாடுகள் பின் வருமாறு:

(1) இன்று உலகின் எந்த நாடும் தங்கச் சட்டத்தை நாணய முறைக்கு அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை.

(2) பெரும்பான்மையான நாடுகள் தங்கத்தை ஏற்றுமதி செய்வதையோ இறக்குமதி செய்வதையோ அனுமதிப்பதில்லை.

(3) இன்று அனைத்து நாடுகளும் காகிதப் பண முறையையே (Paper Currency Standard) கொண்டுள்ளன.

2. வாங்குதிறன் சமன்பாட்டுக் கோட்பாடு: இப்போது எந்த நாட்டிலும் தங்கத் திட்டம் வழக்கில் இல்லை. எனவே, எந்த நாட்டுச் செலாவணியையும் தங்கமாக மாற்ற இயலாது. ஆகையால், செலாவணிகள் மாற்ற இயலாத பணத்தாளாக உள்ளன. மாற்ற முடியாத பணத்தாளாக உள்ள செலாவணிகளுக்கிடையே எவ்வாறு மாற்று வீதங்கள் வரையறுக்கப்படுகின்றன என்பதை, வாங்கும் திறன் கோட்பாடு (Purchasing Power Parity Theory) விளக்கம் தர முயலுகிறது. கசுடவ் காசல் (Gustav Cassel) என்பவர் 1916–ஆம் ஆண்டு நவீன முறைக்குப் பொருந்துமாறு இக்கோட்பாட்டைத் திருந்தியமைத்தார்.

இக்கோட்பாட்டின் அடிப்படைக் கருத்தாவது; ஒரு நாட்டிலுள்ள மக்களுக்கு அயற் செலாவணி தேவைப்படுகிறது. ஏனெனில், அச்செலாவணி அயல்நாட்டுப் பொருள்களையும் தேவைகளையும் வாங்கும் திறன் பெற்றுள்ளது. உள்நாட்டுச் செலாவணி ஒன்றை வெளிநாட்டுச் செலாவணியாக மாற்றும் போது, உள்நாட்டு வாங்கும் திறனும் வெளிநாட்டு வாங்கும் திறனும் ஒன்றுக்கொன்று மாற்றப்படுகின்றன. இதனால், இச்செலாவணிகளுக்கிடையே மாற்று வீதம் வரையறுக்கப்படுவதில் வாங்கும் திறன் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இரு செலாவணிகளுக்குமிடையே உள்ள சமநிலை மாற்று வீதமானது, சம அளவிலுள்ள வாங்கும் திறன்களினுடைய மாற்று வீதத்தைக் கொண்டிருக்கும். ஆகவே, செலாவணிகளுடைய வாங்கும் திறன்களுக்கிடையே உள்ள சமன்பாடுதான் மாற்று வீதத்தை வரையறுக்கும்.

வாங்கும் திறன் கோட்பாடு தனித் தனியான முறை, ஒப்பீட்டு முறை என இருவகைப்படும். அவை பின்வருமாறு:

தனித்தனி முறை: தனித் தனியான முறையில் செலாவணிகள், வாங்கும் திறன் இரு நாடுகளின் சமமாக இருக்கும் வண்ணம், மாற்று வீதம் வரையறுக்கப்படுகிறது. ஒரு செலாவணியின் வாங்கும் திறன் என்பது, செலாவணியினுடைய ஓர் அலகு (Unit) எவ்வளவு பொருள்களையும் சேவைகளையும் பெறுகிறது என்பதாகும். எடுத்துக்காட்டாக, இந்தியாவில் ஒரு உரூபாய், 1 அலகு கோதுமையை வாங்கினால், 1 உரூபாயின் வாங்கும் திறன் 1 அலகு கோதுமை. ஓர் அமெரிக்க தாலர் அமெரிக்காவில் 8 அலகு கோதுமையை வாங்கினால், அமெரிக்க தாலரின் வாங்கும் திறன் 8 அலகு கோதுமை. இந்தியாவில் 8 அலகு கோதுமையை உரூபாய் 8க்கு வாங்கலாம். எனவே, உரூ. 8-இன் வாங்கும் திறனும், 1 அமெரிக்க தாலரில் வாங்கும் திறனும் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கிறது. வாங்கும் திறன் சமன்பாட்டுக் கோட்பாட்டின்படி அமெரிக்க தாலர்– இந்திய உரூபாயின் மாற்று விகிதம் $ 1 = உரூ. 8. ஆகும்.

ஓர் அமெரிக்க தாலர் 8 அலகு கோதுமையை வாங்குவதற்குப் பதிலாக, அமெரிக்காவில் 10 அலகு கோதுமையை வாங்குவதாகவும், இந்தியாவில் ஒரு உரூபாய் அதே 1 அலகு கோதுமையை வாங்குவதாகவும் கொண்டால், வாங்கும் திறன் சமன்-