உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயற்‌ செலாவணி

550

அயற்‌ செலாவணி

பாட்டுக் கோட்பாட்டின்படி அமெரிக்க தாலர்-இந்திய உரூபாயின் மாற்று வீதம் $ 1 = உரூ. 10 ஆகும்.

ஒப்பீட்டுமுறை: தனித்தனியான முறையிலுள்ள சில குறைபாடுகள் காரணமாக ஒப்பீட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோட்பாடானது, மாற்று வீதங்களை வரையறுக்கும் கடுமையான முறைக்கு மாறாக, பொதுவானதொரு போக்கை வலியுறுத்துகிறது. மற்ற நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, ஒரு குறிப்பிட்ட நாட்டில் விலைகள் உயருமானால், மாற்று வீதம் வீழ்ச்சி அடையும் போக்குத் தோன்றும், இதுபோல், மற்ற நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஒரு குறிப்பிட்ட நாட்டில் விலைகள் குறையுமானால், மாற்று வீதத்தில் உயரும் போக்குத் தென்படும்.

செலுத்துநிலைக் கோட்பாடு: மாற்ற முடியாத பண அமைப்பு முறையில் மாற்று வீதம் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது என்பதை விளக்கும் மற்றுமொரு கொள்கைக்குச் ‘செலுத்துநிலைக் கோட்பாடு’ (Balance of Payments Theory) என்பது பெயர். இரு செலாவணிகளின் வாங்கும் திறன்களும் சமமாகின்ற புள்ளியில் மாற்று வீதம் வரையறுக்கப்படுகிறது என்று, வாங்கும் திறன் சமன்பாட்டுக் கோட்பாடு வலியுறுத்திக் கூறுகிறது. பன்னாட்டு வாணிக நடவடிக்கைகனில், புலனாகும் இனங்களும் (Visible Items), புலனாகாத இனங்களும் (Invisible Items) அடங்கியுள்ளன. மாற்று வீதம் இவ்விரு இனங்களையும், அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஆனால், வாங்கும் திறன் சமன்பாட்டுக் கோட்பாடு புலனாகும் இனங்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது. அயல்நாட்டுச் செலுத்துநிலைக் கோட்பாடு இவ்விரு இனங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.

இக்கோட்பாட்டின்படி, அயற் செலாவணிக்கான தேவை ஒரு புறமும் (உள் நாட்டவர்களால்), அயற் செலாவணிக்கான அளிப்பு (வெளி நாட்டவர்களால்) மறுபுறமுமாக மாற்றுவீதம் வரையறுக்கப்படுகிறது. அதாவது, மாற்றுவீதத்திற்கும், அயற் செலாவணியின் தேவைக்கும் அளிப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று வலியுறுத்திக் கூறுகிறது. அயல் செலாவணிக்கான தேவையும் அளிப்பும் ஒரு புள்ளியில் சமமாகும்போது, மாற்று வீதம் சமநிலை அடைகிறது. எனவே, இக்கோட்பாட்டிற்கு ‘மாற்று வீதம் வரையறுப்பதற்கான தேவை அளிப்புக் கோட்பாடு’ என்ற வேறு பெயரும் உண்டு.

அயற் செலாவணிக்கான தேவையை வரையறுக்கும் காரணிகள்: இறக்குமதிகளின் மதிப்பு, மூலதனப் பெயர்ச்சியின் அளவு, வெளிநாட்டுக்குத் தரப்படும் கொடைகள், நன்கொடைகளின் அளவு ஆகிய காரணிகள் அயற் செலாவணித் தேவையை வரையறுக்கின்றன.

அயற் செலாவணிக்கான அளிப்பை வரையறுக்கும் காரணிகள்: ஏற்றுமதிகளின் மதிப்பு, நாட்டிற்குள் வரும் மூலதனத்தின் அளவு, ஏற்றுக் கொள்கிற கொடைகள், நன்கொடைகளின் அளவு ஆகிய காரணிகள் அயற் செலாவணிக்கான அளிப்பை வரையறுக்கின்றன. அயல்நாட்டுச் செலுத்துநிலைக் கோட்பாட்டின்படி, அயற் செலாவணிக்கான மொத்தத் தேவையும், மொத்த அளிப்பும் ஒன்றுக்கொன்று சமமாகும் புள்ளியில் மாற்று வீதம் வரையறுக்கப்படுகிறது. அயற் செவாவணித் தேவைக் கோடும் (Demand Curve), அயற் செலாவணி அளிப்புக் கோடும் (Supply Curve) ஒன்றுக்கொன்று வெட்டும் புள்ளியில் மாற்று வீதம் வரையறுக்கப்படுகிறது. இதனைக் கீழ்வரும் படம் காட்டும்.

அயற் செலாவணி அளவு

வரைப்படத்தில் ‘P’ என்பது சமநிலைப் புள்ளி ஆகும். ‘OR’ சமநிலை மாற்று வீதத்தைக் குறிக்கும் இந்த மாற்று வீதத்தில் அயற் செலாவணியின் தேவையும், அளிப்பும் ‘OQ’ இல் சமமாக இருக்கின்றன.

ஒரு நாட்டின் அயல்நாட்டுச் செலுத்துநிலைக் கணக்கில் தேவையின் பக்கம் உள்ள இனங்கள் செலவினங்களாகும். அளிப்புப் பக்கம் உள்ள இனங்கள் ஒரு நாட்டினுடைய அயல்நாட்டுச் செலுத்துநிலைக் கணக்கில் வரவினங்களைக் குறிக்கும். ஆகையால், அயற் செலாவணிக்கான தேவை அளிப்பு ஆகியவற்றுக்கிடையே ஏதாவது வேறுபாடு இருக்குமானால், அது நாட்டின் அயல்நாட்டுச் செலுத்துநிலையில் உபரியோ பற்றாக்குறையோ இருப்பதைக் காட்டும். தேவையைக் காட்டிலும், அளிப்பு அதிகம் இருந்தால், அது உபரி அல்லது அயல்நாட்டுச் செலுத்துநிலைக்குத் துணையாக (Favourable Balance of Payments) இருக்கிறது என்பது பொருள்.