உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயற் செலாவணி

553

அயற் செலாவணி

அந்நாட்டின் செலாவணிக்கு மாற்ற விரும்புகின்றன. எனவே, அயற் செலாவணி அங்காடியில் பிற செலாவணிகளின் அளிப்புக் கூடி, குறிப்பிட்ட ஒரு நாட்டுச் செலாவணியின் தேவை மிகுதியாகிறது. ஆகவே, அந்நாட்டுச் செலாவணியின் மாற்று மதிப்பு உயருகிறது.

ஒரு குறிப்பிட்ட நாடு பாதகமான செலுத்து நிலையில் இருக்குமாயின், அந்நாட்டுச் செலாவணியின் மாற்று மதிப்புத் தாழ்ந்துவிடும். அந்நாட்டின் ஏற்றுமதி, அதன் இறக்குமதியை விடக் குறைவாக இருப்பதால், அந்நாடு பிற நாடுகளுக்குத் தரவேண்டிய தொகை மிகுதியாக இருக்கும். எனவே, தனது செலாவணி அங்காடியில், அந்நாட்டின் அளிப்புக் கூடி, பிற நாடுகளின் செலாவணிகளுக்கான தேவை அதிகரிக்கிறது. இவ்வாறு, அங்காடியில் குறிப்பிட்ட அச்செலாவணியின் மதிப்புக் குறைகிறது. காண்க: அயல்நாட்டுச் செலுத்து நிலை.

ஒரு செலாவணியின் மாற்று மதிப்பை அயற் செலாவணி அங்காடியின் ஊக வாணிகப் பேரங்களும் (Speculative Dealings) வரையறுக்கின்றன. ஒரு செலாவணியின் மாற்று மதிப்பு உயரக் கூடிய நிலையிலிருந்தால் வணிகர் அதனைப் பெருமளவில் வாங்கி வைக்க முற்படுவர். இதன் காரணமாக, அச்செலாவணியின் மாற்று மதிப்பு மேலும் உயரக்கூடும். மாறாக, ஒரு செலாவணியின் மாற்று மதிப்புக் குறைவதாகத் தெரிந்தால், வணிகர் அச்செலாவணியை விற்க முற்படுவர். எனவே, அதன் அளிப்புக் குறைந்து, அதன் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையக் கூடும்.

மூலதனப் பெயர்ச்சிகளும் ஒரு செலாவணியின் மாற்று மதிப்பை மாற்ற வல்லவை. ஒரு நாட்டுக்குள் அயல்நாட்டு மூலதனம் வருகையில், அந்நாட்டுச் செலாவணிக்கான தேவை அதிகரிக்கிறது. எனவே, அதன் மாற்று மதிப்பும் உயருகிறது. மாறாக, ஒரு நாட்டினின்று மூலதனம் வெளியேறும் போது, அந்நாட்டின் செலாவணியும் வெளியேறி, பன்னாட்டுச் செலாவணி அங்காடியில் அதன் அளிப்புக் கூடுகிறது. எனவே, அதன் மாற்று மதிப்புக் குறைகிறது.

ஒரு நாட்டின் வட்டி வீத மாற்றங்களினாலும் அந்நாட்டுச் செலாவணியின் மாற்று மதிப்புப் பாதிக்கப்படலாம். எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டின் வங்கி வீதம் (Bank Rate) உயர்ந்து, அதனைத் தொடர்த்து அங்காடி வட்டி வீதங்களும் உயரும்போது, வெளிநாட்டு மூலதனம் அந்நாட்டுக்குள் மிகுதியாக வந்து சேருகிறது. மாறாக, வட்டி வீதங்கள் குறையும்போது அந்நாட்டின் மூலதனம் வெளியேறக் கூடும். இவ்வாறு வட்டி வீத மாற்றங்களையொட்டி மூலதனம் நாட்டுக்குள் வருகையில், அந்நாட்டுச் செலாவணி மதிப்பு உயருகிறது. மூலதனம் வெளியேறுகையில், அந்நாட்டுச் செலாவணி மதிப்புக் குறைகிறது.

ஒரு நாட்டில் இறக்குமதி வரிகள் கூட்டப்பட்டாலோ, அன்றி இறக்குமதி வரி வீதங்கள் உயர்த்தப்பட்டாலோ, இறக்குமதிகள் குறைந்து அந்நாட்டுச் செலாவணியின் மதிப்பும் உயரக் கூடும். மாறாக, இறக்குமதி வரிகள் வெகுவாகக் குறைக்கப்பட்டால், இறக்குமதிகள் பெருகி, அந்நாட்டுச் செலாவணியின் மதிப்புக் குறையக்கூடும்.

ஒரு நாட்டில் நிலவும் விலைகளின் போக்கும் அந்நாட்டுச் செலாவணியின் மதிப்பைப் பாதிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டில் பணவீக்கப் போக்கு (Inflation) நிலவுமாயின், ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி கூடி, அந்நாட்டுச் செலாவணியின் மதிப்புக் குறையும், விலைகள் இறங்குமுகமாக இருக்கும் போது, ஏற்றுமதி கூடி, இறக்குமதி குறைந்து, அந்நாட்டுச் செலாவணி மதிப்பு உயரும். இவ்வாறு, ஒரு நாட்டுச் செலாவணியின் மாற்று மதிப்பு, மேற் குறிப்பிட்ட பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படுகின்றன.

ஒரு நாட்டின் செலாவணி மாற்று வீதம், மாறாமல் நிலையாக இருக்க வேண்டுமா, நெகிழ்வுள்ள செலாவணி மாற்று வீதமாக இருக்கவேண்டுமா என்பதில் கருத்து வேறுபாடு பொருளியல் அறிஞர்களிடையே இருந்து வருகிறது. சில வல்லுநர்கள் நிலையான செலாவணி மாற்று வீதம் (Stable Exchange Rate) இருக்க வேண்டும் என்று, பின்வரும் காரணங்களால் வலியுறுத்துகின்றனர்: (1) நிலையான செலாவணி மாற்று வீதம், பன்னாட்டு முதலீடுகளையும், வாணிகத்தையும் தூண்டி, வளர்ச்சி பெற உதவுகிறது. (2) பன்னாட்டு வாணிகத்தில் ஈடுபட்டிருக்கும் வணிகர்கள் மத்தியில், நிலையான மாற்று வீதம் நம்பிக்கையை உண்டாக்குகிறது. அயல் நாடுகளிலிருந்து பொருள்களைப் பெறும்போது, தாம் எவ்வளவு பணம் தர வேண்டும் என்பதையும், அயல்நாட்டுக்குப் பொருள்களை அனுப்பும்போது, தமக்கு எவ்வளவு அயற் செலாவணி வரும் என்பதையும் வணிகர்கள் நுட்பமாகத் தெரிந்து கொள்கின்றனர். (3) நிலையான செலாவணி மாற்று வீதம், ஒரு நாட்டின் தொழில்களை வளர்த்து, பொருளாதாரத்தை விரைவில் முன்னேற்றம் அடையச் செய்கிறது. (4) பன்னாட்டு வாணிகத்தையே பெரிதும் நம்பி இருக்கும் நாடுகளுக்கு, நிலையான செலாவணி வீதம் பெரிதும் உதவுகிறது. (5) ஒரு நாட்டின் வேலைவாய்ப்பு, கடன், வட்டி வீதம் ஆகியவை சீரான நிலையில் செலாவணி இருக்க உதவுகிறது. (6) நிலையான மாற்று வீதங்கள், ஒரு நாட்டிலிருந்து மூலதனம் வெளியேறுவதைத் தடை செய்கிறது. விரைவான

1–70