உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயற்‌ செலாவணி

554

அயன்மையும் கல்வியும்

மாற்றங்களும், முன்னேற்றமும் அடைந்து வரும் இவ்வுலகில், நிலையான செலாவணி வீதம் நடைமுறைக்கு ஏற்றதன்று. செலாவணி மாற்று வீதம், முன்னேறி வரும் நாட்டின் தேவைக்கு ஏற்ப, மாற்றிக் கொள்ளத் தக்கதாக இருக்க வேண்டும்.

நெகிழ்வுள்ள செலாவாணி மாற்று வீதங்கட்குப் (Flexible Exchange Rate) பொருளியல் அறிஞர்கள் பலரும், நிதி வல்லுநர்கள் பலரும் 1969–ஆம் ஆண்டிலிருந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். செருமனி 1969–இல் தனது செலாவணியை, அயற் செலாவணி அங்காடியில் மிதக்கவிட்டது. பிரிட்டன், ஆலந்து, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் தங்களுடைய செலாவணிகளை 1970–இல் மிதக்க விட்டன. அமெரிக்காவின் வலுவிழந்துவிட்ட செலுத்து நிலையைச் சீரமைக்க 1971–ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் நிக்சன் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகளில் மிதக்கும் செலாவணிக் கொள்கையும் (Floating Currency) ஒரு பகுதியாக விளங்கியது. இருப்பினும், பன்னாட்டு நிதிக் கழகம் நிலைத்த மாற்று வீத முறைக்கு வலுவான ஆதரவு தெரிவிக்கிறது.

நெகிழ்வுள்ள மாற்று வீதம் பல நன்மைகளைப் பெற்றுள்ளது. முதலில், இது ஓர் எளிமையான முறையாகும். ஒரு செலாவணிக்கான தேவையும், அளிப்பும் எப்படி இருந்தாலும் அந்தத் தேவை, அளிப்புகளைச் சமன் செய்ய ஒரு செலாவணி வீதம் நிலவவேண்டும். இந்த மாற்று வீதத்தில் ஏற்படும் மாற்றங்கள், தேவை, அளிப்புகளால் தூண்டப் பெற்றவையாக இருக்கும். இதன் காரணமாக, அந்த நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றில் தக்க மாற்றங்கள் ஏற்படலாம்; அல்லது, குறுகிய கால ஊக வாணிக அடிப்படையிலான மூலதனப் பெயர்ச்சி ஏற்படலாம்; அல்லது இவை இரண்டுமே ஏற்படலாம்.

அடுத்து, நெகிழ்வுள்ள மாற்றுவீத முறையில் செலுத்து நிலையில் தோன்றும் மாற்றங்கள், இணக்கமான சீரமைப்புப் பெறுகின்றன. இதனை நெகிழ்வற்ற மாற்று வீத முறையில் காண இயலாது. நெகிழ்வுள்ள மாற்றுவீத முறையின்கீழ், ஒரு பற்றாக்குறை நாட்டுச் செலாவணியின் மதிப்புத் தானாகக் குறைந்துவிடும். அதனைத் தொடர்ந்து, சீரமைவுச் சக்திகள் அயற் செலாவணி அங்காடி மூலமாகச் செயற்படத் தொடங்குகின்றன. இவ்விளைவுகள் பின்னர்ப் பொருளாதார அமைப்புக்குள் பரவுகின்றன.

அன்றியும், வேலை நிறைவுச் சூழ்நிலைவில், கட்டுப்பாடற்ற மாற்று விகிதங்கள் நிலவுவது மிகப் பொருத்தமாக இருக்கும். ஆனால், இன்றையப் பொருளாதார அமைப்புகளில், வேலை நிறைவுநிலை (Full Employment Level) நிலவினாலும், வருமான ஏற்றத்தாழ்வுகள் மூலமாகப் பொருளாதார அமைப்புச் சீரமைவு பெற இயலாது. எனவே, செலாவணி மாற்றுவீத மாற்றங்கள், அல்லது செலாவணிக் கட்டுப்பாடு முறைகள் ஆகிய இருவகை முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.

முடிவாக, நெகிழ்வுள்ள மாற்றுவீத முறையில் நாடுகளின் நீர்மைத் தேவை (Liquidity) வெகுவாகக் குறைக்கப்படுகிறது. எனவே, பன்னாட்டு நீர்மைச் சிக்கல் தவிர்க்கப்படுகிறது. இருப்பினும், நடைமுறையில் நெகிழ்வுள்ள மாற்று வீத முறையிலும் ஓரளவுக்கு மைய வங்கியின் குறுக்கீடு இருக்கத்தான் செய்யும். அன்றாட மாற்று வீதத்தை நிலைப்படுத்த இத்தகைய குறுக்கீடு இருக்கத்தான் செய்யும்.

சில நாடுகளின் அயல்நாட்டு வாணிக அமைப்பு, அவற்றின் செலாவணி மாற்றுவீதச் சீரமைவுக்கு ஏற்ப அமைந்திருக்கலாம். ஆனால், எல்லா நாடுகளின் வாணிக அமைப்பும் அவ்வாறு இருப்பதில்லை. அன்றாடம் மாறும் அளவிற்கு இருக்கக்கூடிய செலாவணி மாற்று விதிமுறை, பன்னாட்டு வாணிகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும். மேலும், அடிக்கடி மாறக் கூடிய செலாவணி மாற்று வீதங்கள், பன்னாட்டு மூலதனத்தின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. இந்தகைய முறையின்கீழ், பன்னாட்டு அளவில் மேற்கொள்ளப்படக் கூடிய கொடுக்கல், வாங்கல் ஒப்பந்தங்களுக்கு ஓர் அடிப்படையில்லாமல் போய்விடக் கூடும். கட்டுப்பாடற்ற செலாவணி மாற்று வீதத்தில், சில அங்காடிக் கூறுகள் பல்வேறு தீமைகளை உருவாக்கக் கூடும் எனவும் கருதப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட இரு மாற்று வீதங்களில், எந்த ஒரு முறையும் முற்றிலும் குறைபாடற்றதன்று. எனவே, எம்முறையில் நன்மைகள் மிகுதியாக இருக்குகின்றனவோ, அம்முறையை ஒரு நாடு மேற்கொள்வது நன்று. ந.து.

துணை நூல்கள்:

Bosdersten., “International Economics”, Mc. Millan, London, 1971.

Scammell. W.M., “International Trade and Payments”, Mc. Millan, London, 1974.

Srivasthava. S.K., “Monetary Economics”, Atmaram & Sons, New Delhi, 1972.

Mithani. D.M., “Introduction to International Economics”, Vota & Company, Bombay, 1979.

அயன்மையும் கல்வியும்: செருமானியத் தத்துவ அறிஞரான ஏகல் (Hegal) ‘அயன்மை’ என்னும் கோட்பாட்டை முதன் முதலாக விரிவாகவும் முறையாகவும் விளக்கினார். அவர் ‘அயன்மை’