உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயிசா

556

அயினி அக்பரி

தகாதன தவிர்த்துச் செல்வர். இதை விடுத்துக் கண் மூடித்தனமாக மரபுவழித் தடத்தில் செல்வதும், வேரறுந்த புரட்சிப் பாதையில் தறிகெட்டு ஓடுவதும் கல்வியின் தோல்விக்கு அடையாளமாகும். இத்தகைய, தன்வயத்தைத் தூண்டி வளர்க்கும் கல்வி தான் பழையன கழிந்து புதியன புகுதற்கும் சமுதாயம் தேய்ந்து அழியாமல் உடைந்து குலையாமல் தழைத்துவளர்தற்கும், தனி மனிதன் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் பிறவிப் பேறுகளை அடைதற்கும் உதவும். வீடு பேற்றை அடைவது, அயன்மையை உறுதியாகவும் இறுதியாகவும் கடக்கும் வழியாகும்.

அயன்மை என்னும் கோட்பாடு தமிழுக்குப் புதியதன்று. அயன்மை அனுபவம் மனித இன முழுமைக்கும் பொது. “கூலிக்கு மாரடித்தல்”, “இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன?”, “அழுதாலும், பின்னை அவளே பெறவேண்டும்” என்னும் தமிழ்ப் பழமொழிகள், இந்த அனுபவத்தின் பல்வேறு வகைகளையும் பகுதிகளையும் தமிழர் உணர்ந்திருந்த பான்மைக்குச் சான்றுகளாகும். திருமூலர், மாணிக்க வாசகர், தாயுமானவர், வள்ளலார் போன்ற சமய குரவர்கள் அயன்மை நிலையைக் கடந்து, உலகெலாம் தன்மயமான வீடுபேற்று நிலையை எய்திப்பெற்ற அனுபவத்தைத் தமிழ்மொழியில் அழியாத இலக்கியமாக விட்டுச் சென்றிருக்கிறார்கள். சமய குரவர்கள் இன்புற்றுப் பாடி வைத்தவை அயன்மை கடந்த அரிய ஆராய்ச்சிக் கருப்பொருள்கள் ஆகும். இரா.க.

அயிசா (கி.பி. 614–678) இசுலாம் சமயத்தை நிலைநாட்டிய நபிகள் நாயகத்தின் அன்புக்குப் பாத்திரமான அவருடைய மனைவியார் அயிசா அம்மையார். இவ்வம்மையாரின் தந்தையார் அபுபக்கர். இவர் நபிகள் நாயகத்தின் முதன்மை ஆலோசகர். அயிசா கி.பி. 614–ஆம் ஆண்டளவில் மெக்காவில் பிறந்தார். அவர் கி.பி. 622–ஆம் ஆண்டில் மதீனாவிற்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் நபிகள் நாயகத்திற்கு மணம் செய்விக்க உறுதி செய்யப் பெற்றார். திருமணம் கி.பி. 623–இல் நடந்தேறியது. அப்போது நபிகள் நாயகத்திற்கு 50 வயது; அவர்களுக்குப் பிள்ளைப்பேறு கிட்டவில்லை. நபிகள் நாயகத்திற்கு மனைவியர் பலர். எனினும் இறுதி நாட்களில் நபிகள் அயிசாவிடமே சென்று தங்கலானார். காலிபாக்களின் ஆட்சியின் போது அயிசா பங்கு கொள்ளவில்லை. மதீனாவில் அமைதியாகக் காலத்தைக் கழித்து, கி.பி. 678–ஆம் ஆண்டில் அயிசா காலமானார்.

அயினி அக்பரி ஒரு நூல். இது மொகலாய அரசர்களின் ஆட்சிமுறை பற்றி அறிந்து கொள்வதற்கு இப்போது சிறப்பாகக் கிடைத்துள்ள மூலநூல். வரலாற்றுக்குப் பெரிதும் பயன்படும் இதுபோன்ற நூல் இதற்கு முன்பு இந்தியாவில் எழுதப்பட்டதில்லை. பிற்காலத்தில் இந்நூலை எடுத்துக்காட்டாகக் கொண்டு பல நிருவாக வழிகாட்டி நூல்கள் தோன்றலாயின.

அயினி அக்பரி, தன் பெயருக்கு ஏற்றபடி, அக்பரின் ஆட்சிக்காலத்திலிருந்த எல்லாத் துறைகளையும் பற்றிய முழுமையான விளக்கங்களைத் தருகிறது. இந்நூல் அக்பரின் பண்புகளையும், அன்றாடப் பழக்க வழக்கங்களையும் எடுத்துரைக்கிறது. அக்பரின் அரண்மனைப் பகுதிகள், குதிரைக் கொட்டில், ஆடை அணிகள், படைக்கலங்கள், வேட்டையாடும் குழு, அக்பர் வெளியிடங்களுக்குச் செல்லும்போது பாசறை அமைக்கப்பட்ட முறை முதலியவை பற்றிய விளக்கங்கள் இந்நூலில் காணப்பெறுகின்றன.

இந்நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது. முதலிரண்டு பகுதிகள் வரலாற்றுக்கு மிகவும் பயன்படுவன. இப்பகுதிகள் ஆட்சிமுறை, நீதி, நிருவாகம் பற்றிய செய்திகளை அலுவலகங்களிருந்தும், அரசுப் பதிவேடுகளிலிருந்தும் தொகுத்துத் தருகின்றன.

இம்மாபெரும் நூலை எழுதுவதற்கும், பலவகையான புள்ளிவிவரங்களைத் தொகுப்பதற்கும் அபுல்பாசலும் அவருடைய துணையாளர்களும் ஏழாண்டுகள் கடுமையான முயற்சி மேற்கொண்டனர்.

பாரசீக மொழியில் எழுதப்பெற்ற அயினி அக்பரியை ஆங்கிலத்தில் மூவர் மொழி பெயர்த்துள்ளனர். அவர்கள் பிளாக்மன், காரட், கிளாட்வின் என்பவராவர். இவர்தம் மொழி பெயர்ப்புகளுள் தலை சிறந்தது பிளாக்மன் என்பவருடையதே. ஆனால் இவரது மொழிபெயர்ப்பு நூல் முழுமைக்கும் கிடைக்காமற்போனது வருந்தத்தக்கது.

ஆட்சியமைப்பு: அக்பரின் பேரரசு 15 சுபாக்களாக (மாநிலங்களாக)ப் பிரிக்கப்பட்டிருந்தது. ஏறக்குறைய மூவாயிரம் பர்கானாக்கள் இருந்தன (2–113). சுபாக்கள் சர்க்கார்களாகவும், சர்க்கார்கள் பர்கானாக்கள் அல்லது மகல்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன. சான்றாக, அலகாபாத் என்ற சுபாவானது 117 பர்கானாக்களையும், 10 சர்க்கார்களையும் தன்னுட் கொண்டதாக இருந்தது (2–160).

அரசுத்துறைத் தலைவர்கள்: ஒவ்வொரு சுபாவுக்கும் தலைவராகத் திவான்கள் இருந்தனர். அவர்கள் திவானி சசு என்று அழைக்கப்பட்டனர். சாகீர்களின் கணக்கு வழக்குகளைத் திவானி சசு என்பவர் கவனித்து வந்தார். பொது அற நிலையங்களைக் கண்காணித்து வந்தவர் திவானி சாதத் எனப்பட்டார். பல திவான்களுக்கும் தலைவராக இருந்த-