உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயுக்தர்

560

அயோவா

குப் புறத்தில் ஒரு கதவும் இவ்வீடுகளில் காணப்படுகின்றன. தேர்ந்த தொழில் நுட்ப வல்லவர்களான அயினு பழங்குடிகள் பிரார்த்தனைக் குச்சிகளை ஒவ்வோர் இல்லங்களிலும் வைத்திருக்கின்றனர். இதனை இம்மக்கள் புனிதமான அடையாளமாகக் கொள்கின்றனர். இவ்வினப் பெண்களுக்கு வாயைச் சுற்றிப் பரந்த அளவில் பச்சை குத்துதல் வழக்கமாக உள்ளது. சப்பானிய அரசு இவர்களுடைய பொருளாதாரத்தை உயர்த்தப் பல திட்டங்களைச் செயற்படுத்தி வருகிறது.

அயுக்தர் என்போர் பணியாளர்கள். பாணினி, ‘அட்டாத்தியாயி’ என்னும் நூலில், அயுக்தர் என்ற பணியாட்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். கௌடில்யர் யுக்தர், உபயுக்தர் எனக் குறிப்பிட்டுள்ள பணியாட்கள் அயுக்தருடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம். கௌடிலியரின் கருத்துப்படி யுக்தர் எனப்படுவோர் அரசாங்கப் பணியாளர்களெனவும், உபயுக்தர் எனப்படுவோர் அவர்களுக்குக் கீழ்நிலையில் பணிபுரிந்த பணியாளர்கள் எனவும் கருதப்படுகின்றனர். அயுக்தர் என்போர், குப்தரின் கல்வெட்டுச் சாசனங்களில் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளனர். அயுக்தர் என்ற சொல்லும் அயுக்தகர் என்ற சொல்லும் நிலத்தீர்வை வாங்கும் பணியாட்களைக் குறிப்பதாகவும் கூறலாம். இச்சொற்கள் பொது நிருவாகத் துறைப் பணியாளர்களையும் குறிக்கும்.

அயூதியா என்பது ஒரு நகரினைக் குறிக்கும் பெயர். இந்நகரம், கி.பி. 14–ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் இரண்டு நூற்றாண்டுகள் வரை தாய்லாந்து நாட்டின் தலைநகராய் இருந்தது. இது அழிந்துபட்டதற்குப் பின்னர்ப் பாங்காக்குத் தலைநகரமானது. இந்நகரில் செழித்த அயூதியாக் (Ayuthia) கலை, கைத்தொழில் வேலைப்பாடுகள் மிக்கதொரு கலையாகும். இக்கலை இன்று நாடோடிக் கலையாக உருமாறியுள்ளது. தாய்லாந்து நாட்டின் ஓவியங்கள் புத்தரின் சாதகக் கதைகளைக் கொண்டு திகழ்கின்றன. அரக்குப் பூசிய பொருள்களில் ஓவியம் வரையும் கலை இணையற்றதாக இங்கு நிலவியது. பிற்காலத்தில் அயூதியாக் கலைஞர்கள் தீச்சுடரையும், புராணத் தேவதைகளையும், விலங்குகளையும் பெருமளவில் ஓவியங்களாக வரைந்தனர். அயூதியா என்னும் பெயர் அயோத்தியா என்னும் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.

அயோத்தி பண்டைய இந்திய நகரங்களுள் ஒன்று. இது உத்தரப்பிரதேச மாநிலத்தின் மையக் கிழக்குப் பகுதியில் பைசாபாத்து மாவட்டத்தில் அமைந்துள்ளது; இந்து, சமண, பௌத்த சமயங்களுடன் தொடர்புள்ள நகரம், முத்தி நகரங்கள் என்று கருதப்படும் ஏழு நகரங்களுள் இதுவும் ஒன்று. இதனை அயோசிகா, ஆயுத், அசொத்யா, வினிதா என்னும் பெயர்களாலும் குறிப்பர். பின்னர் இந்நகரைச் சாகேதம் என்று கூறினர். இந்த நகரத்தைச் சிறப்பாக ஆண்ட அரசர்களை இராமாயணமும் மகாபாரதமும், சமண, பௌத்த இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. இது கோசல நாட்டின் தலைசிறந்த நகரமாக இராமாயணத்தில் குறிக்கப்படுகிறது. பிற்காலத்தில் குப்தப் பேரரசர் இரண்டாம் சந்திரகுப்த விக்கிரமாதித்தரால் இந்நகர் வெற்றி கொள்ளப்பெற்றுச் சீர்மை பெற்றது. இராமர் பிறந்த இந்நகரில் பல கோயில்கள் உள்ளன. இராமன் அனுமன் ஆகியோருக்குக் கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. சமணக் கோயில்களும் உள்ளன. சமண சமயத் தீர்த்தங்கரர்களான இடபர், அசிதர். அபிநந்தனர், சுமதி, ஆதிகுரு, ஆனந்தர், அசலபானு போன்றோரின் பிறந்த ஊராக இது கருதப்படுகிறது. இவ்வூரில்தான் ஆதிகுரு ஞானம் பெற்றார். பல திருவிழாக்கள் இவ்வூரில் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. அயோத்தி, வடமதுரை, அரித்துவாரம், காசி, காஞ்சி, அவந்திகாபுரி, துவாரகை ஆகியவற்றை முத்திநகரங்கள் என்பர். அவற்றில் முதலில் கூறப்படுவது அயோத்தி. அயோத்தியை தைத்திரிய ஆரணியகம் என்னும் நூலும் குறிப்பிட்டுள்ளது.

அயோத்திதாச கவிராச பண்டிதர், வி., கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் சென்னையில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர். வல்லக காளத்தி நகர் அயோத்திதாச கவிராச பண்டிதர் என்ற வேறு பெயரும் இவருக்கு உண்டு. இவர் பல நூல்கள் இயற்றியுள்ளார். தன்வந்திரி பகவான் இயற்றிய ‘பால வாகடம்’ என்னும் ‘சிமிட்டு ரத்தினச் சுருக்கம்’ நூலை ஏட்டுப் பிரதிகள் கொண்டு ஆராய்ந்து கி.பி. 1869–இல் வெளியிட்டார். இதில் 360 பாடல்கள் அடங்கியுள்ளன. தா.ஜெ.

அயோவா என்பது அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள மாநிலங்களுள் ஒன்று. கூலங்கள் (தானியங்கள்)

அயோவா