உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அர்த்தநாரீசுவரர்‌

571

அர்தயாள்

காதில் மகரகுண்டலம் அல்லது பாம்புக் குண்டலமும் காட்சியளிக்கும். நெற்றிக் கண்ணில் பாதி, அர்த்தநாரீசுவரரின் வலப்பக்க நெற்றியில் காணப்படும். வலப்பக்கம் ஆணின் மார்பினைக் கொண்டு விளங்கும். வலப்பக்கம் முழுவதும் திருநீறு பூசப்பட்டு, இடை புலித்தோலாடையுடன் விளங்கும். பாம்பாலான பூணூல் வலப்பக்க மார்பில் காணப்படும். வலப்பக்கம் முழுமையும் ஆண்மைக்கே உரித்தான அமைப்புகளைப் பெற்று அச்சத்தைத் தருவதைப் போன்று காணப்படும். அர்த்தநாரீசுவரர் வலக்காலைச் சிறிது வளைத்து நின்றுகொண்டிருப்பார்.

இடப்பாகம் பெண்மைக்கு உரித்தான அழகினையும் பொலிவினையும் பெற்று, பார்வதியின் சிறப்புக் கூறுகளைக் கொண்டிருக்கும். இப்பக்கத்துத் தலையில் கரண்ட மகுடமும், நன்றாகச் சீவப்பட்டு ஒரு கயிற்றினால் கட்டப்பட்ட தலைமுடியும் காட்சியளிக்கும். இடப்பக்கக் காதுகளில் ‘வாலிகா’ என்னும் குண்டலம் இருக்கும். இடக்கண்ணில் மை பூசப்பட்டிருக்கும். இடப்பக்க நெற்றியில் பொட்டிடப்பட்டிருக்கும். இடப்பக்கக் கைகளில் பெண்களணியும் வளையல்களும் விளங்கும். இடப்பக்கம் பெண்ணின் உருண்டு திரண்ட பருத்த மார்பினைக் கொண்டு விளங்கும். இடப்பக்கக் கழுத்தில் பெண்கள் அணியும் கழுத்தணிகள் இருக்கும். பெண்கள் அணியும் வெண்மையான ஆடை இடப்பக்க இடையில் திகழும். இடப்பக்கக்கணுக்கால் சிலம்புடனும் பாதம் மருதாணியிட்ட சிவப்புடனும் காட்சியளிக்கும். பெண்மை உறுப்புகளைப் பெற்ற இடப்பக்கம் முழுமையும், கருநிறம் அல்லது கிளிப்பச்சை நிறங்கொண்டு விளங்கும். அர்த்தநாரீசுவரருக்கு அருகில் நந்தி காணப்படும்.

அர்த்தநாரீசுவரரின் சிற்பங்கள் நான்கு, மூன்று அல்லது இரண்டு கைகளைப் பெற்றுக் காணப்படுகின்றன. நான்கு கைகள் உள்ள அர்த்தநாரீசுவரரின் வலக் கைகளுள் ஒன்று மழு அல்லது குலத்தையும், மற்றொன்று வரத முத்திரை அல்லது அபய முத்திரையையும் கொண்டிருக்கும். இடப்பக்கக் கைகளுள் ஒன்று சிறிது வளைந்து சென்று நந்தியின் தலையினைத் தொட்டுக் கொண்டிருக்கும். மற்றொரு கை காடக முத்திரையுடன் நீலோற்பலம் எனும் மலரினைப் பெற்றிருக்கும். நான்கு கைகளுடைய அர்த்தநாரீசுவரரின் சிற்பம் பாதாமியில் உள்ள குடைவறைக் கோயிலிலும் மாமல்லபுரத்தில் உள்ள தருமராசா இரதக்கோயிலிலும் உள்ளன. சென்னை அருங்காட்சியகத்தில் காணப்படும் அர்த்தநாரீசுவரரின் வெண்கலச்சிலை, நான்கு கைகளைக் கொண்டது.

மூன்று கைகள் உள்ள அர்த்தநாரீசுவரரின் இரண்டு கைகள் வலப்பக்கமும், ஒரு கை இடப்பக்கமும் காணப்படும். வலப்பக்கக் கைகளில் சூலமும், அட்சமாலையும், இடப்பக்கக் கையில் மலர் அல்லது கண்ணாடி அல்லது கிளியும் இருக்கும். கும்பகோணத்திலுள்ள நாகேசுவர சுவாமி கோயிலின் அர்த்தநாரீசுவரரின் சிற்பமும், காஞ்சிக் கைலாசநாதர் கோயிலிலுள்ள அர்த்தநாரீசுவரரின் சிற்பமும் மூன்று கைகளையுடைய சிற்பங்களாகும்.

இரு கைகளுடனும் அர்த்தநாரீசுவரர் காணப்படுவார். அவ்வுருவச் சிலையின் வலப்பக்கக் கை வரதமுத்திரை அல்லது கபாலம் என்னும் மண்டை ஓட்டைக் கொண்டு விளங்கும். இடப்பக்கக் கை, கீழ் நோக்கி வளைந்து நந்தியின் தலையினைத் தொடுவது போல் அமைந்திருக்கும்.

மூன்று தலைகளையும், எட்டுக் கைகளையும் கொண்ட அர்த்தநாரீசுவரரின் உருவம் பாதாமியில் உள்ள கற்பாறையில் செதுக்கப்பட்டுள்ளது.

துணை நூல்கள்:

Gopinatha Rao, T.A., “Elements of Hindu Iconography”, Vol. II – Part I, Indological Book House, Varanasi, 1974.

Gupte, R.S., “Iconography of the Hindu & Buddhists and Jains”, Taraporevala Sons & Co., PVT, Ltd, Bombay, 1980.

அர்தயாள் (கி.பி. 1887–1938) என்பார் தலைசிறந்த தேசபக்தரும், புரட்சிவாதியுமாவார். கி.பி. 1887-ஆம் ஆண்டில் தில்லி மாநகரில் அர்தயாள் (Har Dayal) பிறந்தார். இவர் இலாகூரிலிருந்த பஞ்சாப் பல்கலைக் கழகத்திலும், ஆக்சுபோர்டு பல்கலைக் கழகத்திலும் கல்வி கற்றார். இவருடைய புரட்சிக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாத ஆங்கில அரசு இவரைக் கி.பி. 1908–ஆம் ஆண்டில் சிறைப்படுத்த விரும்பியது. ஆனால் இவர் சிறைப்படாமல் தப்பியோடி, மேற்கிந்தியத்

அர்தயாள்