அர்துணா
572
அர்பன்
தீவுக்கூட்டத்திலிருந்த மார்ட்டிநிக் (Martinique) என்னும் தீவில் தஞ்சம் புகுந்தார். அங்கிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு இவர் ‘புரட்சி’ (Ghadar–Revolution) என்னும் செய்தித்தாளை வெளியிட்டார். ஆங்கில வல்லாட்சிக்கெதிராக அமெரிக்க ஐக்கிய நாடு, செருமனி போன்ற நாடுகளின் உதவியைப் பெற இருமுறை அரும்பாடுபட்டார். ஆனால் இவர் இருமுறையும் தோல்வி கண்டார். 1938–ஆம் ஆண்டில் ஆங்கில அரசு இவரை இந்தியாவுக்குத் திரும்ப அனுமதித்தது. மீண்டும் இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு 1938–இல் இவர் காலமானார்.
அர்துணா (Arthuna) இராசசுதான் மாநிலத்தில் ‘பானசுவாரா’ நகரத்திற்கு மேற்கே 39 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர். இவ்வூரின் பழைய பெயர் ‘உத்தூண்கா’ என்பதாகும். தம்பரசிம்மன் என்ற அரசன் கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் இந்நகரைத் தனது தலைநகரமாக்கிக் கொண்டு ஆட்சி செய்தான். கி.பி. 11,12-ஆம் நூற்றாண்டுகளில் இவ்வூர், தாரா நகரில் அரசாண்ட பரமார அரசர்களின் கீழ் ஆட்சி செய்தவர்களின் தலைநகரமாக விளங்கியது. இங்குப் பன்னிரண்டு இந்துக் கோயில்களும் பல சமணக் கோயில்களும் உள்ளன. இவ்வூரில் ‘மண்டலேசா’ என்ற சிவன் கோயில் உள்ளது. இங்குச் சிவனடியார்கள் வாழ்ந்த மடங்களும் உள்ளன. அனுமன் கோயில், வராகர் கோயில், விட்டுணுக் கோயில் போன்றவை மிகத் தொன்மையான கோயில்களாகும்.
அர்பன் என்னும் பெயரில் எட்டுப் போப்பாண்டவர்கள் வாழ்ந்திருந்தார்கள். கிறித்தவ சமயவளர்ச்சியில் – குறிப்பாக உரோமன் கத்தோலிக்கச் வளர்ச்சியில் போப் (Pope) அல்லது போப்பாண்டவர்களுக்குப் பெரும் பங்குண்டு. புனித பீட்டர் (St. Peter) தொடங்கிப் பல்வேறு போப்பாண்டவர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமைக் குருமார்களாக விளங்கினர். அவர்களிற் பலர் அத்திருச்சபையின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும், பெருமைக்கும், புகழுக்கும் தோன்றாத் துணையாக நின்றுள்ளனர். தம் சமயப் பற்றாலும் தியாகத்தாலும் ஒழுக்க சீலத்தாலும் ஓயாத உழைப்பாலும் அவர்கள் கிறித்தவ சமயத்தை உலகச் சமயமாக மிளிரச் செய்துள்ளனர். ஆயினும் சிற்சில சமயங்களில் அதன் புகழ் மங்கவும் சீர்குலையவும் சிலர் காரணமாக அமைந்துவிட்டனர். இங்ஙனம் போப்பாண்டவர்களாக விளங்கியவர்களில் எண்மர் அர்பன் எனும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் பின்வருமாறு:
முதலாம் அர்பன் கி.பி. 222–230 இரண்டாம் அர்பன் கி.பி. 1088–1099 மூன்றாம் அர்பன் கி.பி. 1185–1187 நான்காம் அர்பன் கி.பி. 1261–1264 ஐந்தாம் அர்பன் கி.பி. 1362–1370 ஆறாம் அர்பன் கி.பி. 1378–1389 ஏழாம் அர்பன் கி.பி. 1590– — எட்டாம் அர்பன் கி.பி. 1623–1644.
முதலாம் காலிக்சுடசு என்பாரை அடுத்துப் போப்பாண்டவராகப் பதவியேற்ற முதலாம் அர்பன் காலத்திலும் திருச்சபையில் ஏற்பட்டிருந்த பிளவு தொடர்ந்தது. அவருக்குப் போட்டியாக, போப்பாக விளங்கியவர் இப்போலிடசு என்பார். எனினும் உரோமானியப் பேரரசர் அலெக்சாந்தர் செவாசு கிறித்தவச் சமய எதிர்ப்புக் கொள்கையைக் கடைப்பிடிக்காத காரணத்தால் முதலாம் அர்பனின் பதவிக்காலம் அமைதியாகவே கழிந்தது. ஆயினும் அவரது பணிகள் குறித்துத் தெளிவாக ஒன்றும் தெரியவில்லை.
இரண்டாம் அர்பன் பிரான்சு நாட்டவர். புகழ்மிக்க போப்பாண்டவர்களுள் ஒருவரான இவர் தொடக்கக் காலத்தில் புரூனோவின் சீடராக வாழ்ந்து பின்னர் உரோமாபுரியில் கார்டினலாகப் பணியாற்றினார். பிரான்சு, செருமனி போன்ற நாடுகளில் ஏழாம் விக்டரின் பிரதிநிதியாக (Delegate) இருந்து அவர்தம் திருச்சபைச் சீர்திருத்த முயற்சிகளுக்கு உறுதுணையாக விளங்கினார். கி.பி. 1088–இல் போப்பாண்டவராகப் பதவியேற்ற நாளிலிருந்து இவர் கிரகரியைப் போலவே குருமார்கள் திருமணம் செய்துகொள்ளலாகாது என்றும், திருசபைப் பதவிகளை விற்பனைப் பொருளாக்கக்கூடாது என்றும் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதில் விடாப்பிடியாக இருந்தார். ஆனால் இவர் அரசியலில் மிக்க ஈடுபாடு காட்டியமையால் பேரரசர் நான்காம் என்றியுடன் மோதல் ஏற்பட்டது. பேரரசரின் ஆதரவு பெற்ற மூன்றாம் கிளமண்ட்டு உரோமாபுரி நகரில் ஆகிக்கம் செலுத்தலானார். இரண்டாம் அர்பன் நாடுகடத்தப்பட்டுப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார். இருப்பினும் துன்பத்தில் துவண்டு விடாமல் துணிவுடன் செயல்பட்ட இவர் சமய மாநாடுகள் இரண்டினைக் கூட்டலானார். பேரரசரின் வன்மை குன்றியவுடன் உரோமாபுரியில் அர்பன் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டார்.
இரண்டாம் அர்பன் காலத்தில் சிலுவைப் போர்கள் (Crusades) தொடங்கின. உண்மையில் முதலாம் சிலுவைப் போருக்கு இவரே முதல் காரணமாகவும் தூண்டுகோலாகவும் விளங்கினார். கி.பி. 1095–இல் கிளர்மாண்ட் எனுமிடத்தில் கூட்டிய சமய மாநாட்டில் புனித நகரமாகிய எருசலத்தை முகமதியரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பது கிறித்தவர்களின் கடமை என அறைகூவல் விடுத்து, புனிதப் போரில் ஈடுபடுபவர்களுக்குச் சிலுவைகளை அடையாளச் சின்னங்களாக வழங்கினார். அதனால் ஐரோப்பா-