உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அர்மீனிய சோவியத்துக்‌ குடியரசு

575

அர்மீனிய சோவியத்துக்‌ குடியரசு

மாறாகத் தொலைநோக்காடியைக் கண்டு பிடித்த அறிவியல் மேதையான கலிலியோவை இவர் துன்புறுத்தினார். பூமி சூரியனைச் சுற்றி வருகின்றது என்ற கொள்கையைக் கலிலியோ கைவிடுமாறு செய்ததில் எட்டாம் அர்பனுக்குப் பெரும் பங்குண்டு. அதே போன்று சேன்சன் சமயப் (Jansenism) பிரிவினரின் கொள்கையைக் கண்டனம் செய்து, அவர்களைப் பல துன்பங்களுக்கு ஆளாக்கினார். இத்தகைய இவரது செயல்களாலும், கொள்கைகளாலும் பிற்காலத்தில் வந்தவர்கள் பல சிக்கல்களைச் சமாளிக்க வேண்டியிருந்தது. எனினும் அக்கால அரசியல் சூழ்நிலையை நன்குணர்ந்து ஹாப்சுபர்க்கு (Hapsburg)களின் செல்வாக்கைக் குறைத்துப் போப்பாண்டவரின் வலிமையையும் செல்வாக்கையும் வளர்ப்பதில் வெற்றி கண்டார். பல்வேறு ஆணைகள் வாயிலாகக் கத்தோலிக்கச்சமயம் பரவ வழி செய்தார். மேலும் இலாசரிசுட்டு புதிய மடாலயங்களை ஆதரித்துக் கத்தோலிக்க சமயத்திற்கு ஆக்கம் தேடினார். இவ்வாறு வலிவோடும் பொலிவோடும் வாழ்ந்து கத்தோலிக்க சமய மயத்தை வளர்த்த எட்டாம் அர்பன் கி.பி. 1644–இல் காலமானார்.

அர்மீனிய சோவியத்துக் குடியரசு என்பது சோவியத்து உருசியாவின் மிகச்சிறிய குடியரசுகளுள் ஒன்று. இதன் பரப்பளவு 29,800 ச.கி.மீ. இதன் வடக்கில் சார்சியா (Georgia)வும், கிழக்கில் அசர்பைசானும், தெற்கில் துருக்கியும், மேற்கில் ஈரானும் எல்லைகளாய் அமைந்துள்ளன. அர்மீனியக் குடியரசு மலைப்பாங்கான நாடு; எனினும் இங்குக் காடுகள் மிகக் குறைவு. கரை புரண்டோடும் கொந்தளிப்பான ஆறுகள் பலவற்றையும், மிக்க செழிப்பான மண் வகைகளையும் கொண்டிருத்தாலும் இக்குடியரசு வறட்சியும் மிக்கதாகும்.

அர்மீனிய சோவியத்து சோசலிசுடுக் குடியரசின் தலைநகர் ஏரவான் என்னும் நகரமாகும். இலெனினாகன் (Leninakan) கிரோவாகன் (Kirovakan) ஏனைய பெருநகரங்களாம்.

அர்மீனியா 1920–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29–ஆம் நாள் சோவியத்து சோசலிசுடுக் குடியரசாக அறிவிக்கப்பட்டது.

அரக்சு ஆற்றுப் பள்ளத்தாக்கு செழிப்பான விளை நிலங்கொண்டது. பருத்தி, பழவகைகள்–குறிப்பாகத் திராட்சை முதலியன சிறப்பான விளைபொருள்கள், உயரம் மிகுந்த பகுதிகளில், தானிய வகைகள், பீட்சர்க்கரைக் கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவை விளைகின்றன. செம்மறியாடு போன்ற ஆட்டினங்கள் சிறப்பான கால்நடைகள் ஆகும். செம்பு, வெள்ளி, எரிமலை சாம்பற் செறிவால் ஏற்படும் பாறைவகை முதலியவை சிறப்பான கனிமப் பொருள்களாம்.

அர்மீனிய சோவியத்து சோசலிசுடுக் குடியரசு

பண்டைய ஏரவானுக்கருகில் நீர் மின்திட்டம் உருவாக்கப் பெற்றமையால் இக்காலத்தில் இந்நகரம் சிறந்த தொழிற்சாலை நகரமாக உருமாறியுள்ளது. அலுமினியம், செயற்கை ரப்பர், இயந்திரங்கள் முதலானவை இங்குக் கிடைக்கும் பொருள்களுள் சில. உணவுப் பொருள்களைப் பதப்படுத்துதல், ஒயின், பிராந்தி தயாரித்தல், தகர அடைப்புகளில் பழங்களைப் பதப்படுத்தி அடைத்தல் ஆகியன அர்மீனியாவின் ஏனைய தொழில்களாகும். 1981–ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி அர்மீனியாவின் மக்கள் தொகை 31,20,000 ஆகும்.

அர்மீனிய சோவியத்து சோசலிசுடுக் குடியரசு என்பது பண்டைய அர்மீனிய அரசின் ஒரு சிறு பகுதியேயாகும். பண்டைய அர்மீனியா கருங்கடலுக்கும் காசுபியன் கடலுக்கும் இடைப்பட்ட உயர்ந்த மேட்டு நிலப்பகுதியின் குறுக்கில் விரிந்து பரந்து, மேற்கில் ஆசியாமைனர் வரை பரவியிருந்தது. மேட்டு நிலத்தின் பெரும்பகுதி இன்றைய மேற்கத்திய துருக்கியாக இருக்கிறது. இதன் பிறிதொரு சிறுபகுதி ஈரானில் இருக்கிறது. அராராத் மலைத்தொடர் விவிலியத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குத் துருக்கி, ஈரான், அர்மீனியா ஆகிய மூன்று பகுதிகளும் சந்திக்கின்றன.

அர்மீனியர்கள் தம்மை “ஆய்” (Hai) என்றும், தம் நாட்டை ஆயசுத்தான் (Haiastan) என்றும் கூறினர். ஆய்க் என்று கூறப்பெறும் தம் புராணகால மூதாதையின் பெயரில் தம்மையும் தம் நாட்டையும் கூறிக்கொண்டனர். பாரசீகர்கள் இதனை அர்மீனா என்று, ஆய்க்கின் வழித்தோன்றலான அரம் என்பாரின் பெயரால் அழைத்தனர். பண்டைய எபிரேயர்கள் இதனை அராராத் நிலம் என்றனர்.