உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/619

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசவில்லி

583

அரசாங்க அமைப்பு

களைக் கொண்ட இவர் செந்தமிழ், விவேகபானு, ஞானசாகரம், ஞானசித்தி, விவேகோதயம் என்னும் ஏடுகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் சொற்பொழிவு, நூலாய்வு, உரைகள், மறுப்புகள் ஆகிவற்றில் ஆர்வமும் முயற்சியும் காட்டினார்.

அரசஞ் சண்முகனார்


டாக்டர் உ.வே. சாமிநாதையர், மறைமலையடிகள், பாண்டித்துரைத் தேவர், மு.ரா. அருணாசலக் கவிராயர், ரா. இராகவையங்கார், மு. இராகவையங்கார், பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார், ந.மு. வேங்கடசாமி நாட்டார், மு.ரா. கந்தசாமிக் கவிராயர் ஆகிய பெருமக்களுடன் நெருங்கிய நட்பும் தொடர்பும் கொண்டு தமிழ்த் தொண்டாற்றினார். 47 ஆண்டுகள் வாழ்ந்த இவர், 1915 சனவரி 11–ஆம் நாள் மறைந்தார்.

அரசஞ்சண்முகனார் படைப்புகளாவன: முப்பது கொச்சகக் கலிப்பாவிலான சிதம்பரவிநாயகர் மாலை, நோய்தீரும் வகையில் சொக்கலிங்கப் பெருமான்மேல் பாடிய பத்துப் பதிகங்கள், மாலை மாற்று மாலை, ஏகபாத நூற்றந்தாதி, நவமணிக் காரிகை நிகண்டு, தொல்காப்பியப் பாயிர விருத்தி, தொல்காப்பிய விருத்தி, இன்னிசையிருநூறு, வள்ளுவர் நேரிசை, பஞ்ச தந்திர வெண்பா, மதுரைச் சிலேடை நுண்பொருட் கோவை, திருக்குறளாராய்ச்சி, திருக்குறட் சண்முக விருந்தி, முதற்குறள் விருத்தி, மீனாட்சியம்மை சந்தத் திருவடி மாலை, சிதம்பர விநாயகர் மாலை, இசை நுணுக்கச் சிற்றுரை ஆகியனவாகும். நா.ஜெ.

அரசவில்லி என்பது ஓர் ஊர். ஆந்திரப் பிரதேசம் சீகாகுள மாவட்டத்தில் உள்ள சமய, சுற்றுலாச் சிறப்பு மிக்க ஒரு மையம், சீகாகுளம் நகருக்கு ஏறக்குறைய இரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சீகாகுளத்திலிருந்து பேருந்து வழியாகச் சென்று இவ்வூரை அடையலாம். இவ்வூரின் பெயர் ஆந்திர வரலாற்று ஏடுகளில் காணப்படுகிறது. கல்வெட்டுகளில் இதனை அர்சவல்லி என்று குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்க அமைப்பு அரசியல் கலையில் சீரிய இடத்தைப் பெறுகிறது. இன்றைய நிலையில் எல்லா அரசாங்கங்களும் நிருவாகம், சட்டமியற்றுதல், நீதி செலுத்துதல் ஆகிய பணிகளை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகின்றன. பண்டைக் காலத்தில் மன்னனே இப்பணிகள் யாவற்றையும் ஆற்றி வந்தான். ஆனால், நாகரிக முதிர்ச்சி அடைந்துள்ள இக்கால நிலையில், ஒவ்வொரு அரசாங்கத்திலும் இப்பணிகளை ஆற்ற நிருவாகத் துறை, சட்டமன்றம், நீதித்துறை ஆகிய மூன்று தனிப்பகுதிகள் அமைந்துள்ளன. இப்பகுதிகளும், அவற்றின் அமைப்பு, அதிகாரங்கள், அவற்றிடையே நிலவும் தொடர்புகள் ஆகியவற்றைக் குறித்து ஒவ்வொரு நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திலும் விவரிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் மட்டும்தான் அதன் அரசாங்க அமைப்பு, தொன்றுதொட்டு வழங்கிவரும் வழக்காறுகளாலும் பாராளுமன்றம் அவ்வப்போது இயற்றிய சட்டங்களாலும் படிப்படியாக வளர்ச்சியடைந்திருக்கிறது. அதனால்தான் பிரிட்டனின் அரசாங்க அமைப்புக் குறித்து எந்த ஓர் ஆவணத்திலிருந்தும் முழுமையாக அறிய முடியாத நிலை உருவாகியுள்ளது.

அரசாங்க அமைப்புகளைப் பல்வேறு அடிப்படைகளைக் கொண்டு வகைப்படுத்தலாம். பண்டைக் கிரேக்க நாட்டு அறிஞர் அரிசுடாட்டில் அவர் காலத்தைச் சேர்ந்த பல்வேறு அரசாங்க அமைப்புகளை ஆராய்ந்து அவற்றை எண்ணிக்கை, குணம் ஆகிய இரண்டு அளவுகோல்களைக் கொண்டு வகைப்படுத்தினார். முதலாவதாக ஒரு மனிதனால் நடத்தப்படும் ஆட்சியை முடியாட்சி எனவும், உயர்குடியினரால் நடத்தப்படும் ஆட்சியை உயர்குடி ஆட்சி எனவும், எல்லா மக்களாலும் கட்டுப்படுத்துகிற ஆட்சியை அமைப்பொழுங்குடைய அரசியல் சமுதாயம் (Polity) எனவும் வகைப்படுத்தினார். இவற்றை அரிசுடாட்டில் இயல்பான அரசியல் அமைப்புகளாகக் கருதினார். இவ்வமைப்புகள் நெறி கோணிய நிலையை அடைந்தால் அரிசுடாட்டில் அவற்றை முறையே கொடுங்கோலாட்சி, சிறுகுழுவாட்சி, கும்பலாட்சி என வகைப்படுத்தினார். ஆனால், இக்கால அரசாங்க அமைப்புகள் அதிக சிக்கல் வாய்ந்தவையாக உள்ளதால் அரிசுடாட்டிலின் பாகுபாட்டுக்குள் இன்றைய அரசாங்க அமைப்புகளைக் கொண்டுவர இயலாது.