அரசாங்க அமைப்பு
585
அரசாங்க அமைப்பு
பெற்றிருக்கும் ஒரே சட்டமன்றமாகும். வேறு சட்டமன்றங்கள் அந்நாட்டில் இல்லை. மைய ஆட்சியானது ஊரக ஆட்சி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தவோ மாற்றியமைக்கவோ முழுமையாக ஒழிக்கவோ உயர் அதிகாரம் பெற்றுள்ளது. இது போன்றுதான் பிரான்சு நாட்டிலும் ஒற்றையாட்சி நிலவுகிறது.
ஆனால், ஐக்கிய அமெரிக்க நாடுகள், சோவியத்து உருசியா, இந்தியா, சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளில் கூட்டாட்சிமுறை நிலவுகிறது. மையச் சட்டமன்றமும், மைய அரசாங்கமும் மட்டுமன்றி, இந்நாடுகளில் மாநிலச் சட்ட மன்றங்களும், மாநில அரசுகளும் உள்ளன. இவை அரசாங்க அமைப்பின் வாயிலாகத் தத்தமக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டமியற்றும் அதிகாரங்களையும், செயல்துறை அதிகாரங்களையும் கொண்டுள்ளன. அரசாங்க அமைப்பை மாற்றாமல் ஒன்றையொன்று ஒழிக்கவோ மாற்றியமைக்கவோ இயலாது. அரசாங்க அமைப்பானது இறைமை வாய்ந்தது. மைய அரசாங்கமோ மாநில அரசாங்கங்களோ அரசாங்க அமைப்பு வரம்புகளை மீறுமானால் அல்லது அதற்கான முயற்சியை மேற்கொண்டால் பாதிக்கப்பட்ட அரசாங்கம் உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து, வரம்பு மீறுதலைத் தடுக்கலாம்.
இந்தியக் கூட்டாட்சியில் 22 மாநிலங்களும், ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கூட்டாட்சியில் 50 மாநிலங்களும், சுவிட்சர்லாந்தில் 22 மாநிலங்களும், சோவியத்து உருசியாவில் 15 மாநிலங்களும், சில சுயாட்சியுள்ள பிரதேசங்களும் உள்ளன. பொதுவாக நோக்குங்கால் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கூட்டாட்சியில் எஞ்சியுள்ள (Residuary) அதிகாரங்கள் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதால் மாநிலங்கள் வலிமை பெற்றவையாக உள்ளன. இந்தியாவில் கூட்டாட்சி அரசாங்கம் வலிமையுள்ளதாகவும், மாநில அரசாங்கங்கள் வலிமை குறைந்தவையாகவும் காணப்படுகின்றன. சோவியத்து உருசியாவில் மாநிலங்களுக்கு மற்ற எந்தக் கூட்டாட்சியிலும் அளிக்கப்படாத பிரிந்து செல்லும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்நாட்டு அரசாங்கம் செயற்படும் விதத்திலிருந்து, இவ்வுரிமையை எந்த ஒரு மாநிலமானது செயற்படுத்த அனுமதிக்கப்படுமா என்பது பெருத்த ஐயத்திற்கு உட்பட்டதாகும்.
நிருவாகத்துறை சட்டங்கள் வடிவில் ஆக்கப்பட்டுள்ள மக்களின் விருப்பத்தை நடைமுறைப் படுத்துகிறது. அது உண்மை நிருவாகத்துறை, பெயரளவு நிருவாகத்துறை என இருவகைப்படும். மேற்கோளாகப் பிரிட்டன் நாட்டு அரசர் அல்லது அரசியார், இந்தியக் குடியரசுத் தலைவர் ஆகியோர் பெயரளவு நிருவாகத் துறை வகையைச் சேர்ந்தவர்கள். அரசாங்கச் செயல்கள் அனைத்தும் அவர்களின் பெயரால் நடைபெற்றாலும், உண்மையில் அவற்றிற்கான முடிவுகளை அவர்கள் எடுப்பதில்லை. அரசாங்கச் செயல்களுக்கு அவர்கள் பொறுப்பு உடையவர் ஆகார். எல்லா முடிவுகளும் தலைமை அமைச்சராலும், அவருடைய துணை அமைச்சர்களாலுமே எடுக்கப்படுகின்றன. ஆகவே, அவற்றிற்கு அவர்கள்தாம் பொறுப்பு வாய்ந்தவர்களாவார்கள்.
மேலும், உண்மை நிருவாகத் துறையைப் பாராளுமன்றமுறை நிருவாகத்துறை, குடியரசுத் தலைவர் நிருவாகத்துறை, பன்மை நிருவாகத்துறை என வகைப்படுத்தலாம் இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் பாராளுமன்றமுறை நிருவாகத்துறை அமைந்துள்ளது. உண்மை நிருவாகத்துறைத் தலைவரான தலைமை அமைச்சரும் அவருடைய துணை அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினரிடையே இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வலிமை பெற்றிருக்கும் கட்சியைச் சார்ந்தவர்களாகவும் அதன் ஆதரவு பெற்றவர்களாகவும் இருக்கவேண்டும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைத் தொடர்ந்து பெற்றிருந்தால்தான் பதவியில் நீடிக்கமுடியும், அரசாங்கத்தை எதிர்த்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றுவது. கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவது, நிதி மசோதா போன்ற சிறப்பான மசோதாக்களை நிராகரிப்பது, அமைச்சர்களின் ஊதியத்தைக் குறைக்கும் தீர்மானம் நிறைவேற்றுவது போன்றவற்றால் நிருவாகத்துறை உறுப்பினர்களைப் பாராளுமன்றம் நீக்கம் செய்யலாம். அமைச்சர்களை வினாக்கள் கேட்பது, விவாதங்களின்போது கருத்துக்கள் தெரிவிப்பது போன்றவற்றின் வாயிலாகச் சட்டமன்ற உறுப்பினர்கள் நிருவாகத்துறையைத் தம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம். பாராளுமன்ற முறை நிருவாகத் துறையில் தலைமை அமைச்சருக்கு அதிகாரங்களும் செல்வாக்கும் மிகுதி. பெரும்பான்மைக் கட்சியின் தலைவராக விளங்கும் அவர், தம் துணை அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கவும் பதவி விலக்கவும் அதிகாரம் பெற்றிருக்கிறார். அவர் பதவி விலகினால் அமைச்சரவை முழுவதும் பதவி விலகியதாகப் பொருள்படும். சில சமயங்களில் சட்டமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தல் நடத்துமாறு பெயரளவு நிருவாகத்துறைத் தலைவருக்கு அவர் கருத்துரைக்கலாம்.
ஐக்கிய அமெரிக்க நாடுகளில் உண்மை நிருவாகத் துறைத் தலைவரான குடியரசுத் தலைவர் நேரிடையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருடைய பதவி சட்டமன்றத்தில் அவர் பெற்றிருக்கும்
1–74