உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசாங்க அமைப்பு

587

அரசாங்கக்‌ கடனுறுதிச்‌ சீட்டு

நடைமுறையைப் பின்பற்றித் தன்னுடைய கருத்தை நிலைநாட்டிக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.

நீதித் துறை அரசாங்க அமைப்பில் மூன்றாவது பிரிவாகும். அதன் பணி நீதி செலுத்துதல் ஆகும். அதாவது, சட்டமன்றம் இயற்றும் சட்டங்களுக்கு விளக்கம் கூறுவதும், அதன் முன்வரும் வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்குவதும் நீதித்துறையின் கடமையாகும். கூட்டாட்சி அமைப்புள்ள நாடுகளில் அரசாங்க அமைப்பு விதிகள் மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு மைய அரசாங்கத்தாலோ மாநில அரசாங்கத்தாலோ கொண்டுவரப்படும்போது, அவ்வீதிகளுக்கு விளக்கங்கூறி அந்து மீறுதலைத் தடுத்தலும் அதன் பணியாகும். மேலும், மக்களாட்சி நிலவும் நாடுகளில் மக்களின் அடிப்படை உரிமைகளை நிருவாகத் துறை, சட்டமன்றம் ஆகியவற்றின் தாக்குதலிலிருந்து பாதுகாத்தலும் நீதித்துறையின் பணியாகும்.

நிருவாகத்துறையினரால் நீதி மன்றங்களின் நடுவர்கள் நியமனம் செய்யப்பட்டபோதிலும், நடுவர்கள் முழுச் சுதந்திரத்துடன் இயங்கத் தக்க வகையில் அவர்களுடைய பதவிக்காலம், ஊதியம் ஆகியவை அரசாங்க அமைப்புகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவர்களை எளிதில் பதவியிலிருந்து நீக்க முடியாது. பிரிட்டன், அதனைச் சார்ந்த பொதுநல அரசு நாடுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஆகியவற்றில் சட்ட ஆதிக்கம் நிலைத்துள்ளது. ‘யாவருக்கும் ஒரே சட்டம்; யாவரும் சட்டத்தின் முன் சமம்’ என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் நீதித்துறை இயங்குகிறது. இந்நாடுகளில் ஒரே அமைப்புக் கொண்ட நீதி மன்றங்கள்தாம் இயங்குகின்றன.

ஆனால், பிரான்சு போன்ற சில ஐரோப்பிய நாடுகளில் சாதாரணச் சட்டம், அதற்கான நீதி மன்றங்கள். ஆட்சித் துறைச் சட்டம், ஆட்சித் துறை நீதி மன்றங்கள் என இரு வகையான சட்டங்களும், நீதிமன்றங்களும் இயங்குகின்றன. ஆட்சித்துறைச் சட்டமும், ஆட்சித்துறை நீதிமன்றங்களும், ஆட்சித்துறையைச் சேர்ந்தவர்களுக்கும், மற்ற குடிமக்களுக்கும் இடையே எழும் சட்டமீறுதல் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறப் பயன்படுகின்றன. இம்முறையில் ஆட்சித் துறையைச் சார்ந்தவர்கள், தங்கள் பணிகளை ஆற்றும் வகையில் சட்டமீறுதல் செய்தால், அதற்கான விளைவிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அதே வகையில், அது போன்ற சட்டமீறுதலால் பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கும் இழப்பீடு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு உலக நாடுகளின் அரசாங்க அமைப்புகள் தங்கள் வரலாற்றுப் பின்னணிக்குத் தக்கவாறு ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன. பாராளுமன்ற முறையும், அமைச்சரவை முறையும் முதன்முதலில் பிரிட்டனில் தோன்றின. அதன் ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட பெரும்பாலான நாடுகள் அந்நாட்டு அரசாங்க அமைப்பை ஏற்றுள்ளன. இதற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஓரளவு விலக்காகும். இந்தியா தன் அரசாங்க அமைப்பில் பிரிட்டனைப் பின்பற்றிய போதிலும் ஏனைய உலக நாடுகளிலிருந்தும் சில கூறுகளைப் பின்பற்றியுள்ளது குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து கூட்டாட்சி முறையைப் பின்பற்றியுள்ளது. என்.வி.கே.

துணை நூல்கள்:

Appadorai, A., “The Substance of Politics”, Oxford University Press, London, 1972.

Strong, C.F., “Modern Political Constitutions”, Sidwick & Jackson, London, 1972.

Wheare, K.C., “Modern Constitutions”, Oxford University Press, London, 1966.

அரசாங்கக் கடனுறுதிச் சீட்டு: கடன் தொகையைக் குறிப்பிட்ட காலத்தில் திருப்பிக் கொடுப்பதற்கும் குறிப்பிட்ட வட்டி வீதத்தில் வட்டியைக் கொடுக்கவும் உறுதி அளிப்பவை கடனுறுதிச் சீட்டுகள். இவை நிறுவனங்களால் அல்லது அரசுகளால் வெளியிடப்படுகின்றன; தனிப்பட்டவர்களால் ஒப்பு அளிக்கப்பட்ட கடன் சீட்டுகளினின்றும் வேறானவை. அரசால் வெளியிடப்படும் கடனுறுதிச் சீட்டுகள் (Govt. Bonds) அரசின் முத்திரையுடன் வெளியிடப்படுகின்றன. சட்டப்படி ஓராண்டிற்கும் கூடுதலான முதிர்வுக் காலத்தையுடைய கடனுறுதிச் சீட்டுகள் பொதுவாக நீண்டகாலச் சீட்டுகளாகவே இருக்கின்றன.

அரசின் மேலுள்ள நம்பிக்கையினாலும் அரயின் உறுதிமொழி காப்பாற்றப்படும் என்ற எதிர்பார்ப்பினாலும் மக்கள் கடனுறுதிச் சீட்டுகளை வாங்குகின்றனர். அன்றியும் அரசுக்கு வரி வாங்கும் உரிமை இருப்பதால், கடன் தொகையைத் திருப்பிக் கொடுக்கும் ஆற்றல் போதுமான அளவிற்கு இருக்கிறது என மக்கள் நம்புகின்றனர். இந்நம்பிக்கையின் அடிப்படையில்தான் அரசாங்கக் கடனுறுதிச் சீட்டுகள் மக்களால் வாங்கப்படுகின்றன.

அரசின் வரவு–செலவுத் திட்டம் சமநிலையானதாக எப்பொழுதும் அமைவதில்லை. உபரி வரவு–செலவுத் திட்டத்தின்போது அரசின் செலவை விட வருவாய் கூடுதலாக இருப்பதால், நாட்டின் வருமானப் பெருக்கம் தடைப்படுகிறது. பற்றாக்குறை வரவு–செலவுத் திட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் வருவாயை விடக் கூடுதலாகச் செலவு செய்யப்படுவதால் வருமானம் பெருக்கம் ஊக்குவிக்கப்படுகிறது. நிதிக்