உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/628

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசாங்கக்‌ கொடையும்‌ உதவிகளும்‌

592

அரசாங்கக்‌ கொடையும்‌ உதவிகளும்‌

கலந்து, ஆராய்ந்து, முடிவு எடுக்கின்றன. மைய அரசும் மாநில அரசுகளும் ஒரு திட்டமிட்ட வளர்ச்சிக்கான பொறுப்பை ஏற்று, அதனைச் செயல்படுத்த இந்தக் கொடைகள் வகை செய்கின்றன.

மைய அரசு, மாநிலங்களுக்கிடையே சிறப்பிடம் பெறுவதும், பொருளாதார முறையில் சிறப்பிடம் பெறுவதுமான பணிகளை எல்லா மாநிலங்களிலும் மேற்கொள்ளும். இத்திட்டங்கள், மாநில அரசின் நெருங்கிய தோழமையுடன் மைய அரசினால் நேரடியாகச் செயல்படுத்தப்படும். ஆனால், திட்டங்களுக்குத் தேவைப்படும் முழு நிதி வசதியையும் மைய அரசு, மாநில அரசுக்குக் கொடையாக வழங்கும். இதனை மைய அரசின் திட்டங்களுக்கான கொடைகள் என்று கூறலாம். மாநில அரசுகளின் திட்டங்களான வேளாண்மை வளர்ச்சி, பின்தங்கிய மக்கள், பின்தங்கிய பகுதிகளின் முன்னேற்றம், கல்வி, வீட்டு வசதி தொழிலாளர் வேலைவாய்ப்புப் போன்றவற்றின் செயல்பாட்டிற்கு மைய அரசு, அரசியலமைப்புச் சட்ட 282–ஆம் பிரிவின்படி வழங்கும் கொடைகள் மைய அரசின் உதவி பெற்ற மாநிலத் திட்டங்களுக்கான கொடைகள் எனப்படும்.

இக்கொடைகளைத் தன் விருப்பக் கொடைகள் (Discretionary Grants) என்று கூறுவது மிகவும் பொருந்தும். பாராளுமன்றம் இக்கொடைகளைக் கட்டுப்படுத்தாது. அவை மைய அரசின் முழு அதிகாரத்திற்கு உட்பட்டவை. திட்டக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் மாநிலங்களுக்கு அளிக்கக்கூடிய உதவித் தொகையைத் திட்ட முறையிலமைந்த கொடைகள் எனலாம். ஒவ்வொரு மாநிலத்தின் திட்ட அளவை முடிவு செய்த பின்பு, மாநில அரசு எவ்வளவு ஏற்றுக்கொள்ள முடியும் என்று கணித்த பிறகு, திட்டக் கொடையின் அளவு முடிவு செய்யப்படும். திட்ட அளவுக்கும் காலத்திற்கும் அப்பாற்பட்டுச் சில திட்டப் பணிகளுக்காகத் தொடர்ந்து ஏற்படும் செலவினங்களை ஏற்று நடத்த அளிக்கப்படும் கொடைகளைத் திட்டச் சார்பற்ற கொடைகள் என்று கூறலாம்.

இக்கொடைகள் சில குறிப்பிட்ட பணிகளுக்காக வழங்கப்படுபவை. அப்பணிகளின் மொத்தச் செலவில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டை மைய அரசு கொடையாக அளிக்கும். அதற்கு இணையான செலவினை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ளும். திட்டக்குழு முடிவு செய்யும் மாநிலச் செலவிற்கிணங்க இந்தக் கொடைகள் அளிக்கப்படும்.

ஈட்டுக் கொடைகள்: இவை மாநில அரசுகள் மேற்கொள்ளும் இழப்புகளை ஈடு செய்வதற்காக மைய அரசினால் அளிக்கப்படுபவை.

மைய அரசின் கொடைகளின் அளவு
1951–52 முதல் 1984–85 வரை

திட்டக் காலம் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட கொடைத்தொகை
(உரூபாய் கோடிக் கணக்கில்)
முதல் திட்டம் 214.8
இரண்டாம் திட்டம் 700.4
மூன்றாம் திட்டம் 1,302.9
நான்காம் திட்டம் 3,875.2
ஐந்தாம் திட்டம் 8,098.5
ஆறாம் திட்டம் (1983–84 வரை) 15,037.4
1984–85 மட்டும் 5,050.0
ஆதாரம்: மைய இருப்பு வங்கியின் அறிக்கைகள்.

இந்த அட்டவணையிலிருந்து ஒவ்வொரு திட்டக் காலத்திலும் மைய அரசின் கொடையளவு மிகுந்துள்ளதைக் காணலாம். இருப்பினும், மைய அரசு சிக்கனமாகக் கொடைகள் வழங்குவதாகவும், இதனால் மாநிலங்கள் வளர்ச்சி குன்றுவதாகவும், மாநில அரசுகள் பல காலமாகக் குறை கூறிவருகின்றன. இக்கருத்துப் பற்றி அண்மையில் தென்மாநில முதலமைச்சர்கள் கூடி ஆராய்ந்தனர். இதன் எதிரொலியாக மைய அரசு சர்க்காரியா ஆணையத்தை (Sarkaria Commission) நிறுவியுள்ளது. இருப்பினும், கொடைகளின் சிக்கல்களையும், மத்திய–மாநில உறவுகளில் ஏற்படும் சிக்கல்களையும் நிலையான அடிப்படையில் தீர்க்க ஒரு பொதுச் செலவு ஆணையம் (Public Expenditure Commission) அமைக்க அரசு ஆராய்ந்து வருகிறது.

மாநில அரசின் கொடைகளும் உதவிகளும்: இந்திய அரசியலமைப்பு 40-ஆம் பிரிவு மாநில அரசு, உள்ளாட்சி நிறுவனங்களை ஏற்படுத்தி, அவை தன்னாட்சி நடத்துகிற மண்டலங்களாக இயங்குவதற்குத் தேவையான அதிகாரங்களையும் நிதி வசதியினையும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் பணிக்கிறது. எனவே, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகளான மாவட்டம், வட்டம், ஊராட்சி ஒன்றியம், ஊரகங்கள் ஆகியவற்றிற்குப் பல உதவிகளையும் கொடைகளையும் அளித்து வருகிறது. அவற்றையும் அரசுக் கொடைகள் என்று கூறலாம். பணித் திறமையை ஊக்குவிப்பதற்காக மாநில அரசுகள் கொடைகள் வழங்குகின்றன. மாநில அரசு வழங்கும் கொடைகளைப் பல மாநிலங்களிலும் வெவ்வேறு வகையில் குறிப்பிடுகிறார்கள். மாநில அரசின் கொடைகளும் ஏறக்குறைய