உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசாங்கப்‌ ... ... ஒழுங்குகளும்‌

601

அரசாங்கப்‌ ... ... ஒழுங்குகளும்‌

ஒழுங்கு முறைகளும் (Govt. Control of Economy and Regulations) இன்றியமையாதவை என்பதைப் பொருளியல் அறிஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

கட்டுப்பாடுகளின் அளவு: அரசின் கட்டுப்பாடுகள் தேவை என்பதை அனைவரும் ஒப்புக் கொண்டாலும், எந்த அளவுக்குக் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்பதில் பெரிய வேறுபாடுகள் நிலவுகின்றன. சமநிலைச் சமுதாயவாதிகள் (Socialists) உற்பத்திக் காரணிகளின் சொத்துரிமை முழுவதும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்கிறார்கள். அதன் அடிப்படையில் அங்காடி நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்படும் எல்லாச் செயல்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும். இதற்கு எதிரிடையாக நோபல் பரிசு பெற்ற பிரைட்ரிக்கு வான் எய்க்கு (F.V. Hayek) மில்ட்டன் பிரைடுமேன் (Milton Friedman) போன்ற பொருளியல் வல்லுநர்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாடு எந்த அளவுக்குக் குறைந்திருக்கிறதோ, அந்த அளவுக்குப் பொதுமக்கள் நலம் விரிவடையும் என்னும் கருத்தினை விளக்குகிறார்கள். அமெரிக்காவில் அண்மைக் காலத்தில் புகழ்பெற்றுள்ள அளிப்புப் பொருளியல்வாதிகள் (Supply side Economists) இவர்களைவிட ஒருபடி மேலே போய், அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் தனியாருடைய ஊக்கத்தையும் தன்முயற்சியையும் குறைத்து, நாட்டின் செல்வம் வளர்வதைத் தடுக்கிறது என்று கூறுகிறார்கள். அமெரிக்க அதிபர் இரீகன் (Reagan) இந்த அடிப்படையில் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிற சில நடவடிக்கைகள் ‘இரீகனாமிக்சு’ (Reaganomics) அல்லது இரீகன் பொருளாதாரம் என்னும் பெயரைப் பெற்றுள்ளது.

அரசாங்கத் தலையீடு பற்றிச் சில கருத்துகள்: அரசாங்கப் பொருளாதாரத்தில் தத்துவ அடிப்படையிலும் நடைமுறை அடிப்படையிலும் சில சிக்கல்கள் உருவாகின்றன. ஏ.சி.பிகு (A.C. Pigou) அங்காடி இயக்கத்தின் காரணமாகப் பொதுப் பொருள்களின் அளிப்பு குறைவாகவே இருக்கும் என்று வாதிடுகிறார். அவர் தனிப்பட்டவரின் உற்பத்திச் செலவையும், அதிலிருந்து பெறக்கூடிய நன்மையையும் ஒப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக, சிமிண்டு உற்பத்தியாளர் அதன் உற்பத்திச் செலவைக் கணக்கிடும்போது, அதற்கான கச்சாப் பொருட்செலவு, உழைப்புக் கூலி, முதலுக்கு வட்டி, நிலத்துக்கு வாரம், நியாயமான ஆதாயம் ஆகியவற்றைத்தாம் கூட்டிக் கொள்கிறார்களே தவிர, சிமிண்டுத் தொழிற் சாலையிலிருந்து வெளியேறும் ஏராளமான தூசிகளால் சுற்று வட்டாரத்தில் வாழும் மக்களுக்கு நேரிடும் இடையூறுகள், நலக்குறைவு, தூய்மைக் குறைவு ஆகியவற்றினால் ஏற்படும் செலவுகளைக் கணக்கில் கொள்வதில்லை. இத்தகைய காரணங்களால் சமுதாயத்தின் செலவுக் கணக்கும், தனியார் செலவுக் கணக்கும் வேறுபடுகிறது. சமுதாயத்தின் செலவுக் கணக்கில் சிமிண்டுத் தொழிற்சாலையின் தூசி, மற்றும் புகையினால் ஏற்பட்ட தூய்மைக் கேட்டால் உண்டாகும் மருத்துவச் செலவு, சுற்றுப் புறத்தைத் தூய்மைப் படுத்துவதற்கான செலவு ஆகியவையும் சிமிண்டு உற்பத்திச் செலவுகளோடு கூட்டப்பட வேண்டியிருக்கும். இத்தகைய சூழ்நிலையில் தனியார் உற்பத்தி கூடுதலாகவும், இதற்கு மாறாகப் பொதுப் பொருள் உற்பத்தி குறைவாகவும் இருக்கும். எந்தெந்தப் பொருள்களில் தனியார் செலவைவிடச் சமுதாயச் செலவு மிகுதியாக இருக்கிறதோ, அப்பொருள்களின் அளிப்புக் குறைவாக இருக்கும். பிகு என்பவரின் இந்த வாதம் மிகுந்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த வாதத்தின் அடிப்படை உண்மை பெருமளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், தனியார் செலவுகள் சமுதாயச் செலவுகளைவிடக் குறைவாக உள்ள உற்பத்திப் பண்டங்களின் மீது வரிகள் விதித்து, சமுதாய நன்மை தனிப்பட்டவர் நன்மையை விட மிகுதியாக இருக்கும் பொருள்களின் உற்பத்தியைப் பெருக்குவதற்காக அந்த வரிப்பணம் செலவு செய்யப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, சிமிண்டு உற்பத்திமீது வரி விதித்து, அந்த வரிப் பணத்தை மருத்துவமனைகளைப் போற்றுவதில் செலவிட வேண்டும்.

கால்பிரெய்த்து (J.K Galbraith) கருத்துப்படி தனியார் பொருள்களை விற்பதற்காக ஏராளமான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. தனியார் அந்தப் பண்டங்களைப் பெருமளவில் வாங்குகிறார்கள் ஆனால், பொதுப் பொருள், விற்பனை விளம்பரங்களால் ஊக்குவிக்கப்படுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில் விளம்பரங்களால் கவரப்பட்ட ஒருவர், தெருவில் சோளப்பொரி வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அதன் பொட்டலங்களைத் தெருவில் வீசியெறிந்து விட்டுப் போய்விடலாம். அதனால், தனியார் நுகர்ச்சி மிகுகிறது. அதே சமயத்தில் தெருவைத் துப்புரவு செய்ய வேண்டிய பொதுப் பணியும் மிகுகிறது. தனியார் தங்கள் பொருள்களில் எடுத்துக்கொள்ளும் அளவுக்குப் பொதுப் பொருள்களின் மீது அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஒருவர் தம்வீட்டுச் சுவரில் எதனையும் கிறுக்க விரும்புவதில்லை. ஆனால், மகாபலிபுரத்துக்குச் சென்றால், அங்குள்ள பாறைகளில் தம் பெயரை எழுதி அலங்கோலப்படுத்துகிறார். இதிலிருந்து தனியார் தம் பொருள்களின் மீது வைத்திருக்கிற அக்கறை, பொதுப் பொருள்களின் மீது வைப்பதில்லை என்று தெரிகிறது. ஒருவர் தமக்குத் தேவையான பொருள்களை வாங்கும் போது, அவர் செலவு செய்வதால் ஏற்படும் இழப்-

1–76