உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசாங்கப்‌ ... ... ஒழுங்குகளும்‌

604

அரசாங்கப்‌ ... ... ஒழுங்குகளும்‌

தால், தமிழ்நாடு ஆண்டுதோறும் மின்சார வெட்டினால் தாக்கப்படுகிறது. தொழிலர்களை மின்சார உற்பத்தி செய்ய அனுமதிப்பதுதான் நல்லது என்று ஒரு கருத்து நிலவுகிறது. கட்டுப்பாடுகள் மக்கள் செல்வத்தை வீணாக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரக்கூடும். சிறந்த விஞ்ஞானிகள் கூட, இறக்குமதிக் கட்டுப்பாட்டின் விதிகளின்படி ஒருசில இன்றியமையாக் கருவிகளை வாங்க முடியாமல் போவதாலும், வேண்டிய காலத்தில் கிடைக்காமல் போவதாலும், அவர்களுடைய புதிய கண்டுபிடிப்புகள் தடைப்படுகின்றன.

கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கும் அல்லது அவற்றிலிருந்து விடுபடுவதற்கும் கையூட்டுக் கொடுத்தல் போன்ற தூண்டுகோல்களை உருவாக்கி ஊழல்களைப் பெருக்குவர். கறுப்புப்பணம் உருவாவதற்கு அரசின் கட்டுப்பாடுதான் அடிப்படைக் காரணம் என்று கருதப்படுகிறது. இத்தகைய வாதங்களில் ஓரளவு உண்மையிருக்கிறது. எனினும், கட்டுப்பாடில்லாத, தன்விருப்பமான அங்காடி அமைப்பில் வலுவுள்ளவர்கள் முன்னேறுவார்கள், வலுவற்றவர்கள் நசுக்கப்படுவார்கள்; பரிதாபத்திற்குரியவர்கள் பலியிடப்படுவார்கள் என்பது வெளிப்படை. இந்த நிலையைத் தடுக்க வேண்டுமானால், அரசின் தலையீடும் கட்டுப்பாடுகளும் இன்றியமையாதவை.

அரசின் ஒழுங்கு நடவடிக்கைகள்: அரசாங்கத்தின் தலையீடு, அரசின் கட்டுபாடுகள், சில குறிப்பிட்ட துறைகளில் தவிர்க்க முடியாதவை. மருத்துவ, பொறியியல் கல்லூரிகளின் பாடத் திட்டங்களை உறுதி செய்து, அவற்றின் தரத்தைக் காப்பாற்றுவது அரசின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும். ஏனெனில், தரக் கட்டுப்பாடு இல்லாவிட்டால் வெளிவரும் மருத்துவர்கள் சமுதாயத்துக்கே கேடு விளைவிக்கக் கூடும். அதுபோலவே மருந்துகள், நுகர்வோர் பண்டங்கள் போன்றவற்றிற்குத் தர வரையறை செய்வதும் அவற்றைக் கண்காணிப்பதும் அரசின் கடமைகளாக உள்ளன. உரிமம் வழங்கி உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதும், பங்கீட்டு மூலம் பகிர்வைக் கட்டுப்படுத்துவதும், மதுவிலக்குச் சட்டங்கள் மூலம் நுகர்ச்சியைக் கட்டுப்படுத்துவதும் தேவையெனக் கருதும் அரசின் நடவடிக்கைகள், வேலைநேரம், வேலை செய்யுமிடத்தின் சுகாதார வாய்ப்புகள், இன்னல் தவிர்ப்பு, கூலி போன்றவற்றைக் கட்டுப்படுத்தி, உழைப்பு ஆற்றலையும் கட்டுப்படுத்துகின்றன. இன்றியமையாப் பொருள்களான உணவுப் பண்டங்கள், சர்க்கரை, சிமிண்டு, இரும்பு போன்றவற்றின் விலைகளை அரசு கட்டுப்படுத்துகிறது. அதுபோலவே, வளர் வீத வரிகளின் மூலமும் தனியார் நிறுவனங்களில் சம்பளங்களின் மீது உச்சவரம்பு விதிப்பதன் மூலமும் வருவாய் ஏற்றத்தாழ்வை அரசு கட்டுப்படுத்துகிறது. போக்குவரத்துத் தடங்களுக்கு அனுமதி வழங்கியும் (Route Permits), பேருந்துகளில் செல்லக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியும், பயணச் சீட்டுகளில் கட்டணங்களைக் கட்டுப்படுத்தியும், மற்றும் போக்குவரத்து வசதிகளை அரசுடைமையாக்கியும், அரசு போக்குவரத்தைக் கண்காணிக்கிறது. திரைப்படங்களுக்கும் இதழ்களுக்கும் தணிக்கை விதிகளை ஏற்படுத்தி, அருவருப்பான, மற்றும் பாதிக்கும் கருத்து வேற்றுமைகள் பரவுதலை அரசு கட்டுப்படுத்துகிறது. அதுபோவவே, உரிமை விதிகள், மற்றும் செய்தித் தொடர்புகள் ஆகியவற்றைச் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தலாம். தனியார் தம் வாக்குரிமைகளை விலைக்கு விற்கக்கூடாது. எவரும் பிற சாதியார், மதத்தினர் ஆகியோரைப் புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது; எழுதக்கூடாது. இவை மக்களின் அரசியல் சமுதாய உரிமைகளைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டு மக்கள் வெளிநாடுகள் செல்வதானால் அனுமதிச்சீட்டு வாங்க வேண்டும் என்பதும், வெளிநாட்டினர் நம் நாட்டுக்கு வர வேண்டுமானால் நுழைவுச்சீட்டுப் பெறவேண்டும் என்பதும் பன்னாட்டு உறவு நிலைபெற அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளாம். உள்நாட்டிலேயே குடும்பக் கட்டுப்பாட்டினை நன்கு விளக்கஞ் செய்து ஊக்குவிப்பதும், தாய்மையடைந்த பெண்களுக்கு மருத்துவ வசதிகள் செய்து தருவதும் மக்கள் தொகைக் கட்டுப்பாடு, மற்றும் நல்வாழ்விற்கான கட்டுப்பாடுகளாம். பொருட்கொடைகள், சுங்கவரிகள் மூலம் வெளிநாட்டு வாணிகத்தைக் கட்டுப்படுத்துதல், உள்நாட்டுத் தொழில் துறைக்கு வாய்ப்புகளைப் பெருக்குதல், சாதகமான வணிகச் சமநிலை பெற்று மிக்க அயற்செலவணியைப் பெருக்குதல், உள்நாட்டிலேயே எல்லாவிதமான உண்டாக்க பொருள்களையும் ஊக்குவித்தல், இறக்குமதிப் பொருள்களின் மீது சுங்க வரி விதித்தல் மற்றும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு உதவிகள் செய்தல் ஆகியவை நேரிடையான பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். விடுதலைக்கு முன், நாட்டில் பல்வேறு வகையான எடைகள் (weights) வழங்கியிருந்தாலும், இப்போது எல்லா இடங்களிலும் ‘மெட்ரிக்’ முறை நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதனால், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பொருள்களின் விலைகளை அவற்றின் எடைகளோடு ஒப்பிட்டு அறிந்து கொள்வது எளிதாகிறது. இந்தகைய கட்டுப்பாடுகள் உள்நாட்டு வாணிகத்தைப் பெருக்குவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருகின்றன. மத்திய வங்கி பண அளிப்பையும், வங்கிகளின் அமைப்பையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. அதுபோலவே நிதிகள், சேமிப்-