உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/641

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசாங்கப்‌ ... ... ஒழுங்குகளும்‌

605

அரசாங்கப்‌ ... ... ஒழுங்குகளும்‌

புச் சீட்டுகள் (Chits) போன்றவற்றையும் அரசின் சட்டங்கள் கட்டுப்படுத்துகின்றன.

தொழில், வாணிகம் மீதான கட்டுப்பாடுகள்: உற்பத்தி, பகிர்வு, நுகர்ச்சி ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகள் தொழில்களையும் வாணிகத்தையும் பெருமளவில் தாக்கக் கூடியவை. பலவகைச் சட்டங்கள் மூலமாகவும் அமைப்புகளின் மூலமாகவும் அரசு, தனியார்துறை நிறுவனங்கள் முற்றுரிமை ஆதாயத்தைப் பெறாமல் தடுக்க முயற்சி செய்கிறது. இதற்காகப் பலவகைத் தொழில் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. முதலாவதாக, தொழிலில் நுழைவதற்கே உரிமம் வழங்குவதில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. மிகப் பெரிய நிறுவனங்கள் புதிய உரிமங்கள் பெறுவதைக் கடினமாக்கும் சட்டங்கள் உள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குவதைக் கட்டுப்படுத்தும் அயற்செலாவணி ஒழுங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள். இந்தியாவில் தொழிலில் முதலீடு செய்வதைக் கட்டுப்படுத்தும் சட்டங்களும் உள்ளன. தொழிற்சாலைகளில் உற்பத்தியான பொருள்கள் மக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கும், அவற்றின் தரத்தைப் பாதுகாப்பதற்கும், அவற்றால் வரக் கூடிய இன்னல்களைத் தவிர்ப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அளிப்பை விடத் தேவை மிகுதியான பொருள்களுக்குக் கட்டுப்பாடுகள் மிகத் தேவை. முன் பதிவு விண்ணப்பமும் தேவைகளின் முதன்மையும் ஆராயப்படுகின்றன. சிமிண்டு, சருக்கரை போன்ற பொருள்கள் பங்கீட்டு முறையில் பலருக்கும் கிடைக்குமாறு செய்யப்பட்டுள்ளன. மருந்துகள், குளிர்பானங்கள் போன்ற பல நுகர்வுப் பண்டங்கள் கடுமையான தரக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை. வேளாண்மைக்குரிய மருந்துகள் இடர் பயப்பவையாயின், அவற்றை விற்பவர்கள், வாங்குபவர்கள், உற்பத்தியாளர்கள் அனைவருமே அரசின் விதிகளுக்கு உட்பட்டுத்தான் செயற்படவேண்டும்.

நிறுவனங்களின் நிதி நடவடிக்கைகள், கணக்கு முறைகள் (Financial Practices, Accounting Method) ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் கம்பெனிச் சட்டம், பொதுப்பங்கு நிறுவனங்கள் எப்படிப் பங்குகளை விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும், வங்கிகளிடமிருந்து நிதியுதவி பெறுவதற்கு எத்தகைய முறைகளைக் கையாள வேண்டும் என்பன போன்ற பலவகை ஒழுங்குமுறைகளைச் செய்திருக்கிறது. நிறுவனங்களின் கணக்கு முறைகள் எத்தகையவாக இருக்கவேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளன.

விலை வரையறை செய்வதில் அரசு, பல வித வழிகளைக் கையாள்கிறது. பெரும்பாலான விலைகள், அங்காடியாலேயே உறுதிசெய்யப்படுகின்றன. ஆனால் அரிசி, சர்க்கரை போன்ற இன்றியமையாப் பொருள்களுக்கு அரசு விலைக்கட்டுப்பாடு செய்துள்ளது. சில பொருள்கள் பொதுப் பங்கீட்டு முறையில் விற்கப்படுமானால் குறைந்த விலையும், தனியார் அங்காடியில் விற்கப்படுமானால் மிக்க விலையுமாக இருப்பதை அரசே அனுமதிக்கிறது. பெருநகர்ப் பேருந்துகள், இரயில்வேக்கள், மருத்துவ விடுதிகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் வெறும் ஆதாயத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாமல், சமூக நலத்தை முதன்மையாகக் கருதி விலை வரையறுக்கப்படுகிறது. மின்சாரத்தை அளித்தலில் வேளாண்மைக்குக் குறைந்த கட்டணமும் தொழிலுக்கு, கூடுதலான கட்டணமும் வீட்டு உபயோகத்துக்கு மிகக் கூடுதலான கட்டணமுமாக அரசு வரையறை செய்திருக்கிறது. விலை வரையறை செய்தலில் அரசின் கட்டுப்பாடு மிக இன்றியமையாததாக விளங்குகிறது.

விலைக் கட்டுப்பாடும் நுகர்வோர் பொருள் பங்கீட்டில் ஒழுங்கு முறைகளும்: அரசு விலைகளைப் பல விதங்களில் கட்டுப்படுத்துகிறது. என்றாலும், அதற்குப் பலவித நோக்கங்கள் இருக்கக்கூடும். போர்க் காலங்களில் மிகுதியான பணப்புழக்கம் இருக்கும் போது எல்லாவகை உற்பத்திக் காரணிகளும் போர்முனைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இன்றியமையாப் பண்டங்கள் கிடைப்பதற்கு அருமையாக மாறி விடுகின்றன. அதனைக் கட்டுப்படுத்துவதற்காக எல்லா நாடுகளிலும் பங்கீட்டு முறைகள் வருகின்றன. அதுபோலவே, அமைதிக் காலத்திலும் பணவீக்கத்தினாலும் ஏற்றத்தினாலும் விலைவாசி சராசரி மக்களின் அன்றாடத் தேவைப் பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்காமல் போகும்போது, விளையக் கூடிய துன்பத்திலிருந்து காப்பாற்றுவதற்காக விலைக் கட்டுப்பாட்டு முறைகள் நடைமுறைக்கு வருகின்றன. விலைவாசி உயர்வைத் தடுப்பதற்கு விலைக் கட்டுப்பாடு ஒரு முக்கியக் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இன்றியமையாத சில பண்டங்களையும், மூலப் பொருள்களையும் பகிர்வு செய்வதற்கு விலைக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. சில சக்தி வாய்ந்த, பெரிய நிறுவனங்களும் பல சக்தி குறைந்த சிறிய நிறுவனங்களும் மிகவும் தேவையான சில மூலப் பொருள்களுக்கு போட்டியிடும்போது, விலைக் கட்டுப்பாடு இல்லாவிட்டால், பெரிய நிறுவனங்கள் மிகுந்த விலைகொடுத்து, அந்த மூலப் பொருள்கள் முழுவதையுமே தங்கள் வசமாக்கிக் கொள்ளக்கூடும். இதனைத் தடுத்துத் தக்க முறையில் பகிர்வு செய்வதற்கு விலைக் கட்டுப்பாடு இன்றியமையாதது. சில சூழ்நிலைகளில் விலைகளைக் கொடைகள் வழங்கி மாற்றியமைக்க வேண்டி வரலாம். கைத்தறித் தொழிலை வளர்ப்பதற்காகக் கைத்தறித் துணியின்