உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/642

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசாங்கப்‌ ... ... ஒழுங்குகளும்‌

606

அரசாங்கப்‌ ... ... ஒழுங்குகளும்‌

அங்காடி விலையில் ஓரளவு அரசே உதவித்தொகை கொடுப்பதனால், அங்காடி விலையை விட உற்பத்தியாளர்களுக்கு அதிக விலை கிடைக்கலாம். இதன் காரணமாகக் கைத்தறித் துறையில் உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. நுகர்வோர் சில பொருள்களை நுகராமல் குறைப்பதற்கும் அரசின் விலைக் கட்டுப்பாடு பயன்படுத்தப்படலாம். சீமைச்சாராய வகைகளின் விலைகளை உயர்த்துவதனால் அவற்றின் நுகர்ச்சி தடைப்படுத்தப்படுமானால், அரசு அந்த நோக்கத்தோடு அவற்றின் விலைகளை உயர்த்தக்கூடும்.

நல அரசுகளும் பொருளாதாரக் கட்டுப்பாடுகளும்: சமநிலைச் சமுதாய அரசுகள் (Socialist States) தனி மனிதரின் பொருளாதார நடவடிக்கைகள் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். காவல் அரசுகள் அவற்றில் தலையிடா. எனவே, தனி மனிதர் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற இடர்ப்பாடுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டும். தனி மனிதர், மரபு வழியாலோ தடையிலாத அங்காடி அமைப்பாலோ உருவாகிற எல்லா இடர்ப்பாடுகளையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்கிற நிலை மாறி, தனி மனிதனுக்கு வருகிற துன்பங்களைக் கூடிய அளவுக்கு அரசு தவிர்க்க வேண்டும் என்கிற நிலை வரும்போது, நல அரசுகள் உருவாகின்றன. இந்த அரசுகள் வறுமையை ஒரு சமுதாயத் துயரமாகக் கருதி, அதனை அறவே ஒழிக்க முயல்கின்றன. இதற்காக ஏழை மக்களின் வருவாயைப் பெருக்க முயற்சியை மேற்கொள்கின்றன. இத்தகைய முயற்சிகளால் தனியார்களின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே, நல அரசுகளின் செயற்பாடு விரிய விரிய, அரசின் கட்டுப்பாடுகளும் மிகுந்து கொண்டே செல்கின்றன. ஏழைகளின் வருவாயைப் பெருக்குவதற்காக நல அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் வளர்ந்துவிட்டன. பொதுப்பணிகளான மருத்துவம், கல்வி, சாலையமைப்பு, அணைக்கட்டுகள் போன்றவற்றை அரசு செய்யும்போது பலவகைக் கட்டுப்பாடுகள் கூடவே உருவாகின்றன. எடுத்துக்காட்டாகப் பொது மருத்துவ வசதியைப் பெருக்கும் அரசு, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் மருத்துவத் தொழில் நடத்த முழுமையான தடையோ பகுதிக் கட்டுப்பாடோ விதிக்க வேண்டிவரும். வளர்விகித வரி முறைகளாலும் தொழிலாளர் நன்மைக்காகத் தொழில் நிறுவனர்கள் பங்கு கொடுக்கும்படியும் அரசு நடவடிக்கைகள் எடுக்கிறது. பெரிய நிறுவனங்களில் வழங்கும் பாதுகாப்புச் சேமநல நிதி (Contributory Provident Fund) செயற்படும்போது, தொழிலாளர் சேமநல நிதிக்கு எவ்வளவு தொகை செலுத்துகிறாரோ அதே அளவுக்குத் தொழில் நிறுவனர்களும் செலுத்த வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

உழைப்பாளர் சட்டங்கள் மூலம் கூட்டுப் பேர முறை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. ஊக்கத்தொகை தொடுக்கப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தொழிற் கூடங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. வேலை நேரத்தின் உச்சவரம்பு விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோரைப் பாதுகாக்கத் தரவரையறைகள் செய்யப்பட்டுள்ளன. இவையனைத்தும், செல்வ வளம் குவிந்தவர்களுடன் போட்டியிடும் ஆற்றலை ஏழைத் தொழிலாளர்களுக்கும் உண்டாக்கி வாய்ப்புகளைப் பெருக்கும் முறைகளாகும். நன்கு அமையப்பெற்ற நிறுவனங்களில் (Organised Sector) குறைந்த அளவுக் கூலி வரையறை இருப்பதால், ஏழைத் தொழிலாளி தனது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளும் அளவுக்குக் கூலி கிடைக்க வகைகள் செய்யப்பட்டுள்ளன. வேலையில்லா நிலையிலிருந்து காப்புறுதி, பெண்களுக்கு மகப்பேற்றுக் காப்புறுதி, இடர் காப்புறுதி, நோய்க்காலக் காப்புறுதி போன்ற பல சமூகப் பாதுகாப்புச் சட்டங்கள் நிறைவேற்றப்படும் போது அவை கட்டுப்பாடுகளாகத் தோன்றினும், தொழிலாளர்களுக்கு வரக்கூடிய பெரிய இடர்ப்பாடுகளைத் தவிர்த்துத் தொழிலாளர்கள் இன்னல் அடையாமலிருக்க உதவுகின்றன.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் கட்டுப்பாடுகளும்: இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஒரு நலம் தரும் அரசை உருவாக்க விழைகிறது. இதன் அடிப்படையில் மக்களுக்குச் சில அடிப்படை உரிமைகளும் சில கடமைகளும் அதில் வரையறுக்கப்பட்டுள்ளன. அரசியல் அமைப்புச் சட்டத்தின் நான்காம் பகுதி, அரசுக் கொள்கைகளுக்கு வழிகாட்டும் விதிகளை (Directive Principles of State Policy) அமைத்துள்ளது. அரசியல் அமைப்பு 36 ஆம் விதியிலிருந்து 51–ஆம் விதிவரை இவை கூறப்பட்டுள்ளன. இவற்றை அரசின் குறிக்கோள்களாக அரசியல் அமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது. அவற்றுள் முக்கியமானவை, நாட்டின் மூலவளப் பொருட்காரணிகள் (Material Resources) சமமான முறையில் பங்கிடப்படுதலும், செல்வம் ஒரு சிலரிடம் குவிவதைத் தடுத்தலும், எல்லோருக்கும் வேலைவாய்ப்புத் தருதலும், ஆண், பெண் பாகுபாடின்றி வேலைக்குச் சமமான கூலி வழங்குதலும், குழந்தைகள் கடுமையான வேலைகளில் அமர்த்தப்படுதலைத் தடுத்தலும், வேலைவாய்ப்பற்றவர்கள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், உடல் ஊனமுற்றவர்கள் ஆகியோர்க்கும் பாதுகாப்பு நல்குதலும், அனைவருக்கும் வாழ்வுத் தரம் நல்கும் கூலி தருதலும், எல்லாக் குழந்தைகளுக்கும் படிப்பு வசதிகள் செய்து தருதலும் ஆகும்.