உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/647

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசாங்கப்‌ பொருளாதாரக்‌ கோட்பாடுகள்‌

611

அரசாங்கப்‌ பொருளாதாரக்‌ கோட்பாடுகள்‌

யார் துறை ஈடுபட வேண்டிய பகுதிகள் ஆகிய இரண்டுமே, ஈடுபட உரிமை பெற்ற பகுதிகள் என்று வரையறை செய்யப்பட்டுக் கலப்புப் பொருளாதாரம் இயங்குகிறது. எனவே, உலக நாடுகளுள் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், உருசியா, சீனா ஆகியவற்றில் அரசுத்துறை மிகச் செல்வாக்குள்ளதாகவும், மேற்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகியவற்றில் தனியார் துறை செல்வாக்குள்ளதாகவும், மற்றப் பெரும்பாலான நாடுகளில் இரண்டு துறைகளுமே கலந்து செல்வாக்குள்ளனவாகவும் விளங்குகின்றன.

கலப்புப் பொருளாதாரத்தில் தனியார் துறை முழுமையாகவோ சிறப்பாகவோ கொடுக்காத அல்லது கொடுக்க இயலாத பொதுப் பொருள்களின் பொறுப்பை அரசு ஏற்கும். பெரும்பாலும், அத்தகைய பொதுப் பொருள்கள் விற்பனைக்குரியவை அல்ல, எடுத்துக்காட்டு: கலங்கரை விளக்கம். தனியார் நலத்தைவிடப் பள்ளிக் கூடங்கள், சேரி ஒழிப்புப் போன்றவற்றில் பொதுநலம் மிகுதியாக இருப்பதால், தனியார் துறை இவை ஆதாயமற்றதாகக் கருதி, அவற்றில் ஈடுபடாமல் இருக்கும். இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் மிகுந்த செலவு கருதித் தனியார் துறை, அதில் ஈடுபடாமல் இருக்கும். புதிய காடுகள் வளர்த்தல், மண் அரிப்பைத் தடுத்தல், புகையால் வரும் பேரிடரைக் குறைத்தல் போன்றவையும் அரசின் பொறுப்பில் வரும், அங்காடி இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்காகவும், பொதுமக்களுக்கு வரக்கூடிய இடையூறுகளைக் குறைப்பதற்காகவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளான காலநிலை அறிவிப்புகள், உணவு, மருந்துகளுக்குத் தரங்கள் வரையறை செய்தல், பண்டங்களின் தரங்களையும் எடைகளையும் வரையறை செய்தல், தரத்தையும் அளவையும் வெளியிடும்படி வணிகர்களைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றையும் அரசு மேற்கொண்டு நடத்தும்.

மேலும் முற்றுரிமை தரக்கூடிய நிறுவனங்களைக் கட்டுப்படுத்துதல், மின்சார உற்பத்தி, சாலைப் போக்குவரத்து போன்றவற்றை அரசுடைமையாக்குதல், அல்லது தனியார் துறையோடு கூட்டாக நிருவகித்தல், தனியார் துறை சிறப்பாகவும் நம்பிக்கையோடும் செய்யத் தவறுகிற அஞ்சல், தந்தி ஆகியவற்றையும் அரசே ஏற்று நடத்துதல், நாட்டின் பாதுகாப்புக் கருதித் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்கும் அணுசக்தி போன்ற துறைகளையும் பிற புதிய நிறுவனங்களையும் நாட்டில் வளரச் செய்தல், பொருளாதார வாழ்க்கையில் ஏற்படும் தேவையற்ற பேரிடரைத் தவிர்ப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளான குறைந்த அளவுக் கூலிச் சட்டங்கள், சமுதாயப் பாதுகாப்புச் (Social Security) சட்டங்கள், ஊக்க ஊதிய விதிகள் (Bonus Laws), பொருளாதார ஆதிக்கம் குவிதலைத் தடுப்பதற்கான முற்றுரிமை எதிர்ப்புச் சட்டங்கள் (Antimonopoly Laws) ஆகியவற்றைக் கலப்புப் பொருளாதார அரசு ஏற்று நடத்த வேண்டும். பொதுநலம் கருதிச் செய்யப்பட வேண்டி மருத்துவ விடுதிகள் அமைத்தல், முழு வேலைவாய்ப்புக் கருதியும் விலைவாசிகளைக் கட்டுப்படுத்தக் கருதியும் நிதி, பணக்கொள்கைகளைப் பயன்படுத்தல், அரசு பின்பற்றும் வரிக்கொள்கைகள், பற்றாக்குறைப் பொருளியல், மைய வங்கி நடவடிக்கைகள், நாட்டின் எல்லாப் பகுதிகளின் முன்னேற்றத்தையும் கருதி அவற்றிடையே ஒரு சமன்பாடு காண மேற்கொள்ளும் வட்டார வளர்ச்சிப் பணிகள் போன்ற நடவடிக்கைகள், தேசத்தின் பாதுகாப்பு, வாணிகம், நட்புக் கருதி மற்ற நாடுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள் ஆகிய யாவற்றையும் கலப்புப் பொருளாதார அரசு தன் பொறுப்பில் எடுத்துச் செயற்படுத்தும்.

கலப்புப் பொருளாதார அரசின் ஆதிக்கம் மிகுதியாகிக் கொண்டேயிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அரசு பெரும்பாலான பொருளாதாரத் துறைகளில், அவற்றின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் விதிகளை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டு: நிருவாகம், தொழிலாளர்களுக்கிடையே தொடர்புகள், ஏற்றுமதி – இறக்குமதித் தொடர்புகள், மூலப் பொருட் பங்கீடு, உணவுப் பண்டங்களின் பங்கீடு, உற்பத்திக் காரணிகளை அரசு தன் கட்டுக்குள் மிகுந்த அளவில் வைத்திருப்பதாலோ அல்லது முழுமையான அளவில் நாட்டுடைமையாக்கி விட்டதாலோ வருகிற விளைவுகள், அணுசக்தி, மின்சார சக்தி, அஞ்சல், தந்தித் துறைகள், இரயில்வே, விமானப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, தனியார் துறையை உரிமம் வழங்குதல் மூலமாகக் கட்டுப்படுத்தல், விலை வரையறை செய்தலில் அரசு நேரடியான அல்லது மறைமுகமான பங்கு வகித்தல், வேளாண்மைப் பொருள்களின் விலை வரையறை, வெளிநாட்டுச் செலாவணியின் மதிப்பு வரையறை, குறைந்த அளவுக் கூலி வரையறை, அரசின் வழியாகச் செலவிடப்படும் தேசிய வருவாயின் பங்கு மிகுந்துகொண்டே செல்லுதல், இந்தியாவின் தேசிய வருவாயில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு அரசு வழியாகச் செலவிடப்படுதல், பொருளாதார அமைப்பின் ஒட்டுமொத்தமான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தல், பணநிதிக் கொள்கைகள், தனியாரின் தனிப்பட்ட நடவடிக்கைகளுக்கு உதவிகள் அளித்தல் அல்லது தடை செய்தல், கல்விக் கொடைகள், மது விலக்கு, எதிர்பாராத புயல் மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல், தனியார் முயற்சியைச் சில பகுதிகளில் ஆதரித்துச் சில பகுதிகளில், தடுத்தல், பின்தங்கிய பகுதிகளில் தொழிற்சாலை அமைப்பதற்குக் கொடைகளை

வா.க. 1 - 39அ