உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசாங்கப்‌ பொருளாதாரக்‌ கோட்பாடுகள்‌

612

அரசாங்கப்‌ பொருளாதாரக்‌ கோட்பாடுகள்‌

அளித்தல், நகர மையங்களில் தொற்சாலைகள் அமைப்பதைக் கட்டுப்படுத்தல், மாநில அரசு நடவடிக்கைகளை மத்திய அரசு தன் கட்டுக்குள் கொண்டு வர முயற்சிசெய்தல், உதவித் தொகை வழங்குதல், நிதிப்பங்கீடு செய்தல், அரசுத் துறைகளிலும் படைத் துறைகளிலும் மக்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்குதல் ஆகியவை காரணங்களாம்.

உலகின் எல்லா நாடுகளிலுமே சில பொதுவான பொருளாதார நோக்கங்கள் காணப்படுகின்றன. அவையாவன 1) முழு வேலைவாய்ப்பைப் பெறுதல், 2) பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்தல், 3) விலையில் ஏற்ற இறக்கம் இல்லாமல் சமன்படச் செய்தல். 4) அயற் செலாவணியில் சமன்பாடு பெறுதல் போன்றவை. இந்த இலக்குகளை எய்துவதற்காக எல்லா நாடுகளுமே பொருளாதாரத் திட்டங்களை (Economic Planning) மேற்கொள்கின்றன. ஆனால், இந்தத் திட்டங்கள் அந்தந்த நாட்டின் பொருளாதார அமைப்புக்கும் பொருளாதாரக் கலப்புக்கும் ஏற்றவாறு வேறுபடுகின்றன. எந்தெந்த நாடுகளில் உற்பத்திக் காரணிகள் அரசுக்குச் சொந்தமாக இருக்கின்றனவோ (Ownership of means of Production) அந்த நாடுகளில் மையத் திட்டம் (Centralised Planning) செயற்படுகிறது. எடுத்துக்காட்டாக உருசியாவின் திட்டம், அந்த நாட்டின் உற்பத்திக் காரணிகளின் இயக்கம், பண்டங்களின் உற்பத்தி, அவற்றின் பகிர்வு, தேசிய வருவாயின் பங்கீடு ஆகிய அனைத்தையுமே முழுமையாகக் கட்டுப்படுத்துகிறது.

இந்தியா போன்ற நாடுகளில் அரசுத் துறையும் தனியார் துறையும் ஒருங்கிணைந்து செயற்படுவதால், அவற்றின் திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர முடிவதில்லை. பின்தங்கிய நாடுகளில் பொருளாதாரத்தைப் புதுமைப்படுத்திப் பொருளாதார வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்த அடிப்படைச் சமுதாய மூலதனம் (Social overhead capital) முழுவதையும் அரசுத் துறைதான் செய்ய வேண்டியிருக்கிறது. அதே சமயம் சொத்துரிமையை ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதனால், தனியார் துறையும் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, அவற்றின் திட்டங்கள், பொதுத் துறைப்பகுதி (Public sector section), தனியார்துறைப் பகுதி (Private Sector section) என்னும் இரண்டு பகுதிகளையும் தனித் தனியாகப் பிரித்துக் காட்டுகின்றன. பொதுத்துறைப்பகுதியைப் பொறுத்த அளவில், மத்திய, மாநில அரசுகள் அவற்றை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றன. தனியார் துறைப் பகுதியைப் பொறுத்த அளவில், திட்ட இலக்குகளை எய்துவதற்காக அவற்றில் ஈடுபடுத்தப்படுவதற்காகப் பல்வேறுவகை ஊக்குவிப்புகளையும் (Incentives) கட்டுப்பாடுகளையும் (Regulations) அரசு மேற்கொள்கிறது. அரசுத்துறைப் பகுதித் திட்டமானது வெற்றி பெறுவதும், வெற்றி பெறாமல் போவதும் அரசின் திறமையைச் சார்ந்தே அமையும். ஆனால், தனியார்துறைப் பகுதி வெற்றி பெறுதலும், வெற்றி பெறாமல் போவதும் அரசின் திறனோடு தனியார் துறையின் ஒத்துழைப்பையும் தனியார் துறையின் வாய்ப்புகளையும் சார்ந்தே அமையும்.

அமெரிக்கா, பிரான்சு போன்ற நாடுகளும் ஓரளவு திட்டங்களை வகுக்கின்றன. ஆனால், இந்தத் திட்டங்கள் மையமாக்கப்பட்ட திட்டங்களிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன. இந்த நாடுகளில் தனியார் சொத்துரிமை பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு மதிக்கப்படுகிறது. எனவே, இந்த நாடுகளின் திட்டங்கள், அரசு மேற்கொள்ளும் உற்பத்தி, மற்றும் பணிகளுக்காக உள்ள சிறிய பகுதிக்காகவும் தனியார் துறை மேற்கொள்கிற பெரிய பகுதிக்காகவும் சேர்த்து அமைக்கப்படுகின்றன. தனியார் சொத்துரிமை இருப்பதால் தனியார் துறைக்கு இருக்கிற வாய்ப்புகளைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான் (Indicative Planning) இந்த நாடுகளின் திட்டங்கள் மிகுதியான அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

வேலைவாய்ப்பின்மையும் வறுமையும்: இந்திய மக்கள் தொகை 1980–81–ஆம் ஆண்டில் 68.4 கோடி. இதில் உழைக்கும் மக்கள் தொகை 27 கோடி, உழைக்கும் மக்களுள் 2–3 கோடி மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை, மற்றும் தனியார் பட்டறைகள் போன்ற ஒழுங்குற்ற துறையிலும் (Organised Sector) மற்றவர்கள் வேளாண்மை, அன்றாடக் கூலிவேலை போன்ற ஒழுங்குறாத் துறையிலும் (Unorganised Sector) வேலை செய்கிறார்கள். கீழ்வரும் பட்டியன் 1980–இல் வேலை வாய்ப்பு இல்லாதவர் நிலையைக் காட்டுகிறது.

வயதுப்பிரிவு 5 15
கோடிகளில்
15–59
முழுமையாக வேலை
வாய்ப்பற்றவர்கள்
1.2 1.14 1.13
வாரமுழுவதும்
சராசரி வேலை
வாய்ப்பற்றவர்கள்
1.2 1.16 1.14
அன்றாடக் கூலியாகச்
சராசரி வேலை
வாய்ப்பற்றவர்கள்
2.1 2.0 1.9
ஆதாரம்: Statistical outline of India–1982.