அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்
613
அரசாங்கப் பொருளாதாரக் கோட்பாடுகள்
முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டக் காலங்களிலும் புதிய வேலை வாய்ப்புகள் முறையே 0.7 கோடி, 1.0 கோடி, 1.45 கோடி அளவில் மிகுந்தன. ஆனால், உழைக்கும் மக்கள் தொகைக்குப் புதிதாகக் கூட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை இதே காலத்தில் 0.9 கோடி, 1.17 கோடி, 1.7 கோடியாக இருந்தது. அதாவது, ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்ட இறுதியிலும், வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் மேலும் மிகுந்து கொண்டே வந்திருக்கிறது. அதுபோலவே, படித்து, வேலையில்லாமல், வேலைவாய்ப்பு நிறுவனங்களில் பதிவுசெய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து மிகுந்துகொண்டே வந்திருக்கிறது. இந்த வேலையில்லாத் திண்டாட்டத்தை, ஒழுங்கமைதி பெற்ற பிரிவை விரிவாக்கி வளர்ச்சியுறச் செய்வதன் மூலம் ஒழித்துவிட முடியும் என்னும் நம்பிக்கையை, நான்கு ஐந்தாண்டுத் திட்டக் காலத்தின் நடைமுறையிலிருந்தே இழந்து விட்டதால், கடந்த இரண்டு திட்டக் காலங்களில் ஒழுங்கமைதி பெறாத வேளாண்மை, மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் வளர்ச்சியின் மூலம்தான் முழு வேலைவாய்ப்புப் பெறமுடியும் என்னும் கருத்து வளர்ந்திருக்கிறது. எனவே, திட்டங்கள் அவற்றிற்கு ஏற்றமுறையில் மாற்றப்பட்டுள்ளன.
சிற்றூர்களில் (1977–78) அன்றைய விலைகளில் மாத வருவாய் தலைக்கு உரூ. 65க்குக் குறைவாகவும், நகர்ப்புறங்களில் மாத வருவாய் தலைக்கு உரூ. 75க்குக் குறைவாகவும் உடையவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழிருப்பவர்களாகக் கருதப்பட்டு, இந்திய மக்கள் தொகையில் 48.13 விழுக்காடு வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதே அளவீட்டின்படி, அதே ஆண்டில், தமிழ் நாட்டில் மக்கள் தொகையில் 52% வறுமைக் கோட்டிற்குக் கீழிருப்பதாகக் கணக்கிட்டுள்ளார்கள்.
வேலைவாய்ப்பின்மையும் வறுமையும் நாட்டின் மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கல்கள். இந்திய அரசின் திட்டங்களும் வரவு செலவுத் திட்டங்களும் இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தில் (Budget) கிட்டத்தட்ட 17.5% வருவாய், முதலீட்டு வரவாக (Revenue and Capital receipts) அமைகிறது. மத்திய அரசு 1979–இல், 179 பொதுத் துறை நிறுவனங்களில் உரூ. 15,600 கோடிக்கு மேல் முதலீடு செய்திருந்தது. அஞ்சல், தந்தித்துறை, இரயில்வேக்கள், கனரகத் துறையைச் சேர்ந்த 18 பெரிய நிறுவனங்கள், தொழில் வங்கிகள் போன்றவையும் இவற்றுள் அடங்கும்.
மத்திய அரசின் ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் (1980–85) வறுமையை ஒழிப்பதைத் தலையாய குறிக்கோளாகக் கொண்டது. நாட்டு வருவாயின் வளர்ச்சி வீதத்தை மிகுதிப்படுத்தல், தொழில்களைப் புதுமைப்படுத்தல், பொருளாதாரத் தொழில் நுட்பத் தன்னிறைவு பெறுதல், ஆற்றல் (Energy) துறையின் விரைவான முன்னேற்றம், செல்வம்–மற்றும் செலாவணி ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல், வட்டார வளர்ச்சியில் சமன்பாடு காணுதல், மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்றவை திட்டத்தின் மற்றக் குறிக்கோள்கள். இந்தப் பட்டியலே, இந்திய மக்களின் வாழ்க்கையில் அரசின் தலையீடு எவ்வளவு பங்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட உதவுகிறது.
இந்திய வளர்ச்சியைக் கீழ்வரும் விவரங்கள் ஓரளவு தெளிவாக்கும், இந்த வளர்ச்சி அரசின் நேரடியான நடவடிக்கைகளாலும் அரசு உருவாக்கிய அடிப்படைச் சமுதாய மூலதன (Social Overhead Capital) உதவியோடு தனியார் துறையின் நடவடிக்கைகளாலும் ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியில் எந்த அளவுக்கு அரசுக்குப் பங்கிருக்கிறது என்று தனிப்படுத்திக் காட்ட இயலாது.
| வ.எண். | விவரம் | அளவை | 1950–51 | 1980–81. |
|---|---|---|---|---|
| 1. | மக்கள் தொகை | கோடி | 35.9 | 68.0 |
| 2. | கல்வி பெற்றவர்கள் | சதவிகிதம் | 16.67 | 36.17 |
| 3. | தேசிய வருவாய் | 1970–71 விலைகளில் | 16,731 | 47,431 |
| 4. | நெடுஞ்சாலைகளின் நீளம் | '000 கி.மீ. | 157 | 630 |
| 5. | இரயில்வேக்களின் சரக்கு எடுத்துச்சென்ற அளவு | மிலியன் மெட்ரிக் டன்கள் | 93 | 218 |