உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசாங்க ... கோட்பாடுகள்‌

620

அரசாங்க ... கோட்பாடுகள்‌

ஆகியவற்றின் தவறுகளைக் கண்டிக்க வேண்டும். அதே நேரத்தில், ஆட்சித் துறை, சட்ட மன்றம் ஆகியவற்றிற்கு உறுதுணைபுரியக் கூடியதாகவும் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, நீதிபதி ஒரு வழக்கை விசாரித்து வழங்கிய தீர்ப்பின் கூறு, ஒரு புதிய சட்டத்திற்கு (Precedent) முன்னோடியாகத் திகழலாம். இந்த முன்னோடி, சட்ட மன்றம், ஆட்சித் துறை ஆகிய இரண்டும் செய்யும் பணிகளுக்கு ஒப்பானதாகும்.

மக்களுடைய எண்ணங்கள், விருப்பங்கள் ஆகியவற்றைத் திரட்டி மக்கள் பேராளர்கள் சட்டமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்றுகின்றனர். இந்தச் சட்டங்களை ஆட்சித் துறை செயற்படுத்த வேண்டும். இந்த ஆட்சித் துறையின் தலைவர்கள் எல்லா நாடுகளிலும் அரசியல் தலைமையாளர்களாகத்தான் இருப்பர். இவர்களுக்குக் கீழ் ஒரு நிரந்தர நிருவாக அமைப்பு உள்ளது. இதுதான் பொது நிருவாகம் என்பதாகும். இதனை அரசாங்கத்தின் நான்காவது பிரிவு என்று கூறுவர். அரசுப் பணியாளர்கள் (Civil Servants) பொது நிருவாகத்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் நடுநிலைமையுடன், கட்சிச் சார்பின்றி, நேர்மையுடன் திறமையாகப் பணியாற்றி வருகின்றனர். ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டின் அரசுப் பணியாளர்களைப் பொறுத்துள்ளது என்றால் அது மிகையாகாது. என்.எஸ்.ச.

துணை நூல்கள்:

Herman Finer., “The Theory and Practice of Modern Government”, Methuen & Co., London, 1956.

Strong C.F., “Modern Political Constitutions”, The English Language Book Society, London, 1975.

Wneare K.C., “Modern Constitutions”, Oxford University Press, London, 1966.

அரசாங்க வரவு – செலவுத் திட்டக் கோட்பாடுகள்: அரசாங்க வரவு–செலவுத் திட்டமே (Govt. Budget) அரசின் கொள்கையை விளக்கும் சிறந்த ஆவணமாக அமைந்துள்ளது. இந்தியாவின் வரவு–செலவுத் திட்டம், ஐந்தாண்டுப் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஓர் உறுதுணையான கருவியாக உதவுகிறது. திட்டங்களின் அளவையும் கொள்கைகளையும் பின்பற்றி வரவு–செலவுத் திட்டங்கள் அமைக்கப்படுகின்றன. அனைத்திற்கும் அடிப்படை சமூக–பொருளாதார முன்னேற்றக் கொள்கையேயாகும். பின்தங்கிய நிலையிலுள்ள இந்தியாவில் பொருளாதாரம் விரைந்து வளர்ச்சியடைதல் வேண்டும்.

இந்த நூற்றாண்டின் முற்பகுதி வரை, ஒரு சிறந்த வரவு–செலவுத் திட்டம் என்பது மிகக் குறைவான வரிப் பளுவையும் அதற்கொப்பக் குறைந்த செலவினங்களையும் கொண்டதாக அமையவேண்டும் என்று எண்ணப்பட்டது. மேற்சொன்ன கருத்துக்கு மாறாக 1930–ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசாங்கச் செலவினங்களின் அளவும் வரி விகிதங்களும் வரி விதிக்கும் அளவும் பெருமளவுக்கு மிகுந்துள்ளன.

இந்தியாவில் மத்திய அரசும் எல்லா மாநில அரசுகளும் ஒரே வகையான வரவு செலவுத் திட்ட முறையினைப் பின்பற்றுகின்றன; நாடு தன்னுரிமை பெற்ற பின்பு அரசாங்க வரவு–செலவுத் திட்டங்களின் அளவு ஆண்டுதோறும் விரிவடைந்து வருகிறது. மக்களாட்சி முறை பின்பற்றப்படுவதால் ஆக்கநல அரசின் பல்வேறு பணிகள் விரிவடைந்துள்ளன. ஐந்தாண்டுத் திட்டப் பணிகள் ஆண்டுதோறும் வளர்ந்துகொண்டே வருகின்றன. ஆகையால், நாட்டின் அரசாங்க வரவு - செலவுத் திட்டங்களின் விரிவடையும் போக்கு, சமூக, பொருளாதார முன்னேற்றப் போக்கினையே காட்டுவதாக உள்ளது. முந்தைய ஆண்டின் வரவு–செலவுத் திட்டத்தோடு ஓரளவிற்கேனும் ஒத்த நிலையில், வருகின்ற ஆண்டின் வரவு செலவுத் திட்டம் அமைதல் வேண்டும் என்பதும் ஒரு நல்ல கோட்பாடே (Principle). வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதால் நிதி அளவையில் ஒருமைப்பாடு இருக்க வழி இல்லை. ஆனால், ஒப்பிட்டுப் பார்க்க வழி செய்யும் வகையில் இனங்களில் ஒருமைப்பாடு இருக்கலாம். வரவு–செலவுத் திட்டத்தில் நெகிழ்வுத் தன்மை (Flexibility) இருத்தல் வேண்டும். ஒரு வரையறுக்கப்பட்ட அளவு வரை, ஒரு துறைக்கு ஒதுக்கிய பணத்தை இன்றியமையாத தேவை ஏற்பட்டால் வேறு துறைகளுக்கு மாற்றிச் செலவிடும் அதிகாரம் நிருவாகத்தினருக்குத் தரப்படல் வேண்டும் என்பதும் ஒரு கோட்பாடு ஆகும். வரவு–செலவுத் திட்டத்தினை முறையாகச் செயற்படுத்துவது நிருவாகத்தின் தலையாய கடமையாகும். செயற்பாட்டில் தவறுகளோ குறைகளோ ஏற்பட்டால் தொடர்புடைய அலுவலர்கள் அதற்கான பொறுப்பேற்க வேண்டும். மதிப்பீடுகள் (Estimates) முடிந்த அளவிற்கு உண்மையாக (Accurate) இருத்தல் வேண்டும். குத்துமதிப்பு மதிப்பீடுகள் (Rough Estimates) வரவு–செலவுத் திட்டத்திற்கு எந்த வகையிலும் ஏற்புடையவை அல்ல. நுட்பமாக மதிப்பீடு செய்யப்படாத கூறுகள், வரவு–செலவுத் திட்டத்தின் உருவ அமைப்பினையே கெடுக்கும். செயற்படுத்த முடியாத வேலைத் திட்டத்தினை உருவாக்குவதில் உண்மையும் நடைமுறையில் இயலுந்தன்மையும் போற்றப்படுதல் வேண்டும். வரவு–செலவுத் திட்டங்கள், தெளிவான வகையில் (Clarity) பொது மக்களும்