உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசாங்க ... கோட்பாடுகள்‌

621

அரசாங்க ... கோட்பாடுகள்‌

புரிந்து கொள்ளும் முறையில் வெளியிடப் படவேண்டும். பிறிதொரு கோட்பாடு கால வரம்பினைக் குறித்ததாகும். வரவு–செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள பணத்தினைக் குறிப்பிட்ட ஓராண்டுக் காலத்திற்குள் செலவிடுதல் வேண்டும். அவ்வாறு செலவிடப்படவில்லையானால் அப்பணத்தினைப் பின்னர்ப் பயன்படுத்த முடியாது. அது காலங்கடந்த, கெடுத் தீர்ந்த (Lapsed) தொகையாகிவிடும். நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத்தின் முன் வைக்கப்படும் வரை, வரவு–செலவுத்திட்டம் மறையான (Secret) ஆவணமாகும். மன்றத்தில் வெளியான பிறகு, பொது மக்களும் அதனை அறிந்து பயன் பெறுமாறு செயற்படத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மக்களாட்சி முறை பின்பற்றப்படும் நாடுகளில் இது தலைசிறந்த கோட்பாடாக அமையும்.

குறிப்பிட்ட ஓராண்டில் அரசின் வரவுகளும் செலவுகளும் சமமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட வரவு–செலவுத் திட்டம், “சமநிலையுடைய வரவு–செலவுத் திட்டம்” என்று சொல்லப்படும். அவ்வாறு அமையாதவை “சமநிலை அற்ற வரவு–செலவுத் திட்டங்களாகும்”. திட்டத்தில் செலவினங்களைவிட வரவினங்கள் மிகுதியாக இருந்தால் அத்திட்டம் “உபரி வரவு–செலவுத் திட்டம்” என்று சொல்லப்படும்.

வரவு-செலவுத் திட்டங்கள் வரவும் செலவும் சமநிலை உடையனவாக இருத்தல் வேண்டும் என்ற கருத்து, இப்பொழுது பொருளாதார நிதியியல் வல்லுநர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால், 20–ஆம் முன் நுற்றாண்டிற்கு பொருளாதார வல்லுநர்கள், பெரும்பாலும் சமநிலை உடைய வரவு-செலவுத் திட்டங்களே நல்லவை என்றும், அவ்வாறு இல்லாதிருந்தால் அரசு விரைவில் வரவும் செலவும் சமநிலை அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இரிக்கார்டோ, மில், மால்தசு ஆகியோர் இக்கருத்தினையே வலியுறுத்தினர். இன்றும் இலட்சு (Lutz) என்பவர், சமநிலைத் திட்டத்தின் தேவையினைப் போற்றுபவராக இருக்கிறார் ஆனால், பெரும்பாலும் இக்காலப் பொருளாதாரப்-பேரறிஞர்கள். குறிப்பாக, கீன்சீன் (Keynes) கருத்தைச் சார்ந்தவர்கள், வரவு–செலவுத் திட்டம் சமநிலை உள்ளதாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும், நாட்டின் பொருளாதார நலத்தினையும் மேம்பாட்டினையும் கருத்தில் கொண்டு, பற்றாக்குறை வரவு–செலவுத் திட்டங்களை மேற்கொள்வது தேவையானது என்றும் கூறுகிறார்கள். பேராசிரியர் ஆல்வின் ஏன்சன் (Alvin Hansen), பேராசிரியர் கிக்சு (Hicks), பேராசிரியர் தால்டன் (Dalton) ஆகியோர் இவர்களுள் குறிப்பிடத்தக்க சிலராவர். பொருளியல் வல்லுநர்களுள் சிலர், அரசின் எல்லா வரவுகளும் செலவுகளும் சமநிலை உடையனவாக இருத்தல் வேண்டும் என்று சொல்லாமல், குறிப்பிட்ட சில வரவுகளும் செலவுகளும் மட்டும் சமமாக இருந்தால் போதும் என்ற ஒரு கருத்தினையும் கூறுகிறார்கள்.

மரபு வழிப் பொருளாதாரச் சிந்தனையாளர்களின் கருத்து, மக்களாட்சி மலர்ந்து ஆக்கநல அரசு அமைய ஏற்புடையதாக இல்லை. அரசின் வரவு–செலவுத் திட்டம் சமநிலையில் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் நீண்ட காலமாக நடைபெற்று வருவதாகும். கூர்ந்து நோக்கும் போது, தொடர்புடைய நிதி ஆண்டில், அரசின் பொதுக் கடன் தேவையற்ற பெருஞ்சுமையாக இல்லாதிருந்தால், உருவாக்கப்படும் வரவு–செலவுத் திட்டம் பற்றாக்குறைத் திட்டமாக இருந்தாலும், அதனால் நாட்டிற்குத் தீங்கில்லை என்று தெளியலாம். மேலும், ஓராண்டு என்ற கணக்கிற்கு உண்மையில் எவ்விதப் புனிதத்தன்மையும் இல்லையென்றே சொல்லலாம். காலச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல், அரசு தனது வரவு– செலவுத் திட்டத்தினை ஒவ்வோராண்டும் சமநிலைப்படுத்த வேண்டும் என்பது ஒரு தவறான வாதமாகும். ஓர் ஆண்டு என்பது கணக்கு? அது ஒரு மாதமாகவோ ஒரு வாரமாகவோ ஒரு மணி நேரமாகவோ கூட இருக்கலாம். பொதுவாகப் பார்க்குமிடத்து, இக்காலவரம்பு, நீண்ட காலமாக இருப்பது நல்லது என்று தெரிகிறது. அத்தகைய ஒரு நீண்ட காலத்தில் அரசின் வரவு–செலவுத் திட்டம் சமநிலை பெறுவது போதுமானதாகும். அது ஒவ்வோராண்டும் சமநிலைப்பட வேண்டிய தேவையில்லை. ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளின் கணக்குகளிலிருந்து தெரியவரும். நிதிப் பற்றாக்குறை, அரசின் நிதி நொடிப்பினைக் காட்டுவதாக எடுத்துக் கொள்ளமுடியாது. ஆகவே, ஆக்க நல அரசு ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பற்றாக்குறை வரவு–செலவுத் திட்டத்தினை மேற்கொள்ளலாம். ஆனால், கவனிக்கப்பட வேண்டியது, நிதிப் பற்றாக்குறை மிகப் பேரளவில் இருக்கக் கூடாது என்பது தான். எச்.எச். அசுகுத் (H.H. Asquith) என்ற பொருளாதார நிபுணர் கூறியுள்ளது போல, அரசு தனது வரவு செலவுத் திட்டத்தினை ஓராண்டுக்கு என்று இல்லாமல் பல ஆண்டுகள் சேர்ந்த ஒரு கால அளவுக்கு (A term of years) உருவாக்குதல் வேண்டும். ஓராண்டு வரவு–செலவுத் திட்டம் என்பது, ஏதோ தன்னளவில் தனித்து நிற்கும் திட்டமன்று. அது அரசின் ஒருங்கிணைந்த நிதிக் கொள்கையின் ஓர் அங்கமேயாகும். நலப் பொருளாதாரம் (Welfare Economy) சார்ந்த நிதிக்கொள்கையினைப் பின்பற்றும்