அரசியல்சார் சமூகவியல்
656
அரசியல்சார் சமூகவியல்
அரசியல்சார் சமூகவியல் சமூக நிறுவனங்களுக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்து அறிவதனை நோக்காகக்கொண்டது.
அரசியல்சார் சமூகவியலின் வளர்ச்சிக்குக் காரல் மார்க்சு (Karl Marx) முன்னோடியாக விளங்கினார். வகுப்புச் சமூக அமைப்புகளை ஆராய்ந்த மார்க்சு, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளே வகுப்புப் பிரிவினையை மனித வரலாற்றில் முதன்முதலில் தோற்றுவித்தன என்றார். மக்களுள் சிறு பிரிவினரான பெருஞ் செல்வர்கள் (Bourgeoise), பெரும்பிரிவினரான பாட்டாளி மக்களை (Proletariat) அடக்கி ஆண்டு, தங்கள் நலனுக்காக அவர்களை உழைக்கக் கட்டாயப்படுத்தும் நிலைமை தோன்றும்போதுதான், சமூகத்தில் சிறைச்சாலைகள், காவற் படைகள், இராணுவம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த வன்முறை தோன்றுகிறது. பாடுபடும் பாட்டாளிகளைக் கட்டாயப்படுத்துவதாக அரசு செயற்படுகிறது என்று மார்ச்சு குறிப்பிடுகிறார். அரசு என்பது, வகுப்பு ஆட்சிக்கான வன்முறையோடு ஒடுக்குவதற்கான உறுப்பு ஆகும். வகுப்புகளுக்கிடையிலான மோதலை மட்டுப்படுத்துவதன் லாயிலாக இந்த ஒடுக்குமுறையைச் சட்ட முறையானதாக்கி, நிலையான ஆதிக்க ‘ஒழுங்கை’ உருவாக்குவதே அரசு என்பது மார்க்சின் கொள்கையாகும். நிலையான இராணுவமும், காவல் படையுமே அரசு அதிகாரத்தின் முதன்மையான கருவிகளாகும். ஆண்டைகளும், அடிமைகளுமே சமூக வரலாற்றில் முதலில் தோன்றிய வகுப்பினர் என்பது மார்க்சின் கருத்தாகும். காலப்போக்கில், பெரும்பாலான நாடுகளில் அடிமைமுறை பண்ணை அடிமை முறையாக (Farm Slavery System) வளர்ந்தது. இங்கே நிலக்கிழார்களும் (Feudal Lords) பண்ணை அடிமைகளும் (Farm Slaves) முதன்மையான வகுப்புகளாக விளங்கினர். பின்னர். இந்தச் சமுதாயத்தில் வணிகம் வளர்ச்சியுற்று அதன் விளைவாக உலகச் சந்தை (World Market) தோன்றியது. உற்பத்திக்கான அடிப்படைப் பொருள்களைத் (Means of Production) தம் கைகளில் குவித்துக் கொண்ட ஒரு வகுப்பு, உழைப்பையே நம்பி வாழும் மற்றொரு வகுப்பைப் பயன்படுத்திப் பெரும்பொருள் ஈட்டத் தொடங்கிற்று. இதன் வளர்ச்சிக்குத் தடையாக இருந்த நிலமானிய முறை காலப்போக்கில் அழிந்துவிட்டது. இவ்வாறு முதலாளி தொழிலாளர் வகுப்புகள் நிலைபெற்றன.
வகுப்புச் சமூகத்தின் வெவ்வேறு வடிவங்களான அடிமைச் சமூகம், நிலமானியச் சங்கம், முதலாளிச் சங்கம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே ஆளும் வகுப்பின் வல்லாட்சி என்கிறார் மார்க்சு. முதலாளித்துவ சங்கத்தில் இது பெரும்பாலும் மக்களாட்சியாக இருக்கலாம்; இது அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையைக் கொண்ட நாடாளுமன்றத் தேர்தல்களையும் அனுமதிக்கலாம்; ஆயினும் இது இன்னும் ஒரு வல்லாட்சியாகவே இருக்கின்றது. நாடாளுமன்ற வடிவங்கள் என்ற முகமூடி அணிந்த முதலாளி வகுப்பு வல்லாட்சியே இது என்று இதனை இலெனின் (Lenin) விளக்குகிறார்.
முடிவில் பாட்டாளி வகுப்புப் புரட்சியினால் அரசியல் அதிகாரத்தை அவர்கள் கைப்பற்றுவரென்றும் உற்பத்திக்கான மூலப்பொருள்களை, சாதனங்களை அரசுடைமையாக்குவரென்றும், அந்த நிலையில் வகுப்பிலாப் பொதுவுடைமைச் சமுதாயம் அமையும் என்றும் வருங்கால நிகழ்வை மார்க்சு கணிக்கிறார்.
அரசியல் கொள்கைகள், பொருளாதார அடிப்படையில் எழுகின்றவையே எனும் கருத்தினை மார்க்சு வலியுறுத்துகிறார். ஆதலின், எந்தக் கட்டத்திலும் ஆளும் வகுப்பினரின் கருத்துகள் அரசின் கருத்துகளாகும் என்றும், சமுதாயத்தின் பொருளாற்றலைக் கட்டுப்படுத்தும் வகுப்பே அறிவாற்றலையும் கட்டுப்படுத்துவதாக இருக்கும் என்றும் கூறுகிறார். அரசியல் ஒழுங்குமுறை என்பது, அரசையும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களையுமே சார்ந்திருக்கும் என்கிறார். சமூகத்தில் அரசியல் சட்டங்கள் சிறப்பிடம் பெற்றவை. அவை அரசியல் ஒழுங்குமுறையை நிலைபெறச் செய்கின்றன என்றும் குறிப்பிடுகிறார். ஆன்பவர்களும் அரசு இயங்குமுறைகளும் சட்டங்களும் ஆளும் வர்க்கத்தினரின் விருப்பத்திற்காகவே செயற்படுகின்றன என்பது மார்க்சின் கருத்தாகும்.
அரசியலுக்கும் சமூகவியலுக்கும உள்ள தொடர்பினைச் செருமானியச் சமூகவியலறிஞரான மேக்சு வெபரின் (Max Weber) சமூகப் படிநிலை (Social Stratification) பற்றிய விளக்கத்தில் காணலாம். சமூக ஏற்ற நிலை (Social Status), உடைமைகள் (Property) ஆகியவற்றின் அடிப்படையில்தான் வகுப்புகள் உருவாகின்றன என்பது வெபரின் கருத்தாகும். பல ஏற்ற நிலைக் குழுக்கள் (Status Groups) அரசு இயங்கு முறைகளைக் கட்டுப்படுத்தும் நிலைக்குப் போட்டியிடுகின்றன என்றாலும் அவை செல்வாக்கு மிக்குடையனவாக இருப்பதில்லை. சமூக ஏற்றத்தாழ்வுகளும் ஏற்றநிலைக் குழுக்களும் தோன்றுவதற்கு அரசின் அதிகார வருக்க ஆட்சிமுறை (State Bureaucracy) ஊக்கமளிப்பதுடன் நாட்டுவளர்ச்சியிலும் செல்வாக்கை உண்டாக்குகிறது என்கிறார். அதிகாரவருக்கத்தாருக்கும் அரசிற்கும் அரசின் அலுவலர்களுக்குமிடையே போராட்டங்கள் ஏற்படுகின்றன என்னும் இவருடைய கருத்து, மார்க்சின் வகுப்புப் போராட்டக் கொள்கையினின்றும் மாறுபடுகிறது. இத்தகைய போராட்டங்கள் சில சமயங்களில் குழுக்களை ஈடுபடுத்தி அரசியல் நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும்