உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/718

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியலும்‌ போர்‌ நடப்பும்‌

682

அரசியலும்‌ போர்‌ நடப்பும்‌

ஆர்தர் மன்னரின் காவியமும், சேக்சுபியர் எழுதியுள்ள சூலியசு சீசர், மாக்பெத்து முதலிய உயர் நாடகங்களும் போரின் விளைவு, சாதனை, வெற்றி தோல்விகள் போன்றவற்றைச் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றன. உணவு உற்பத்தி முறைகளில் முன்னேற்றம், பல நகரங்களின் தோற்றம், ஒருமுகப்படுத்தப்பட்ட அரசுகள் உருவானமை ஆகியன, தொடக்கக் காலப் போர்களுக்குக் காரணங்களாக அமைந்தன. சில மானிடவியலாளர், போர் நடப்பின் தோற்றத்தை விவசாயத்தின் தொடக்கத்தோடு இணைத்துக் கூறுகின்றனர். பாசன வசதிகள் ஏற்படுத்துவதற்கு முன்பு சிறுபகுதி நிலமே மதிப்புடையதாக இருந்தது. பாசன வசதியில் முன்னேற்றம், உரங்கள், உழுது வேளாண்மை செய்தல் போன்றவை உண்டாவதற்கு முன்பு அவை குறைந்த வளமுள்ளனவாக இருந்ததுடன் பல ஆண்டுகளாகத் தரிசாகவே கிடந்தன. இடம் மாறி மாறி வேளாண்மை செய்து கொண்டிருந்த முதுகுடிகள் ஓயாது தங்கள் வேளாண் நிலப் பரப்பினை விரிவுபடுத்த முற்பட்டபோது போர் நடப்புத் தவிர்க்க முடியாததாகியது. இபான் எனும் போர்னியா குடிகள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் காடுகளை அழித்து விளைநிலங்களை உண்டாக்குவதற்கு மாறாக, காட்டை அழித்து விளைநிலம் உண்டாக்கியவர்களை வென்று அவர்கள் திருந்திய நிலப் பகுதிகளைக் கைப்பற்றினர்.

எல்லா மாந்தருமே போரினில் ஈடுபடுகின்றனரா என்பது மிக முக்கிய வினாவாகும். சில ஆராய்ச்சியாளர், போர் அனைத்துச் சமுதாயங்களிலும் காணப்படுவதாகக் கூறுகின்றனர். சீரான அரசியல் அமைப்பைப் பெற்றிராத சமுதாயங்களில் போர் நடப்புக் காணப்படுவதில்லை எனச் சிலர் மறுத்துரைக்கின்றனர். எடுத்துக்காட்டாக, மலேசியாவில் வசிக்கும் செமாய்ப் பழங்குடிகளிடையே போர்நடப்போ வன்முறைச் செயல்களோ அவற்றிற்கான கழுவாய் தேடுதலோ அறவே கிடையாது. அதே போன்று எசுகிமோ அல்லது கலிபோர்னிய இந்தியரிடையேயும் போர் முறை என்பது காணப்படவில்லை. ஆனால் எசுகிமோக்களிடம் தனிப்பட்ட வழிவழிப் பழிதீர்க்கும் எண்ணம் காணப்படுகிறது. எனவே போர்நடப்பு அந்தந்தச் சமுதாயத்தைப் பொறுத்து வேறுபடுகிறது எனலாம்.

ஆதிக்குடிகளிடையே போர் நடப்பு: கூட்டமாகத் திரிந்து ஒன்றுபட்டு உழைத்து வாழும் சமூகங்களில், சில அடிப்படைத் தேவைகளை அடைவதற்காகவும் பழிதீர்ப்பதற்காகவும் போர்கள் நிகழ்த்தப் பெற்றன. ஆசுத்திரேலியாவில் உள்ள முரன்கின் எனும் பழங்குடிகளிடையேயும், அருகிலுள்ள ஏனைய முது குடிகளிடையேயும் போர் நடப்பு முதன்மையான சமூகப் பணிகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தகைய திரிந்து வாழும் குழுவினர்களின் போர் நடப்புகளில், பொதுவாகப் போர்க் கருவிகள், போர்த் தந்திரங்கள் ஆகியன பயன்படுத்தப்படுவதில்லை. மேலும், இச்சமுதாயத்தினரிடையே குழுச்சண்டை காணப்படுவது மிகவும் அரிது.

பழங்குடிச் சமுதாயங்களில் திடீர்த் தாக்குதல் போன்ற போர்நடப்புகள் மிகுதியாகக் காணக் கூடியனவாகும். அவை மிகக் கொடுமையானவையாகவும் சாவினை உண்டாக்கக் கூடியனவாகவும் அமைவதால், அருகிலுள்ள சமுதாயம் எப்போதும் இன்னல்களை எதிர்நோக்கி இருக்க வேண்டியுள்ளது. எத்தனை தடவை, எந்த வகையில் ஆதிக்குடிகளிடையே போர்கள் நிகழும் என்பதைக் கணித்துக் கூற இயலாது. வெளியார் ஆதிக்கம், புதிய கருவிகள் கண்டுபிடிப்பு போன்றவற்றால், ஆதிக்குடிகளின் தொன்மை வழக்கப் போர் முறைகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. பெரும்பாலும் ஆதிக்குடிகளின் போர்முறை, கைப்பற்றுதல் அல்லது வன்கவர்தலை நோக்கமாகக் கொண்டது அன்று. அமேசான் பகுதிவாழ் இந்தியர்கள் தமக்குள் எவ்விதச் சண்டையிலும் ஈடுபடுவதில்லை. ஆனால் தங்கள் எதிரிகளாகிய பழங்குடிகளின் மீது போர்தொடுத்து அவர்களை முற்றிலும் அழிக்கும் நீண்டதொரு தாக்குதலை நிகழ்த்துகின்றனர். இதேபோன்று மெலனேசியாவில் உள்ள சாலமோன் தீவுகளில் கொள்ளையடித்தல், தலைகொய்தல் ஆகிய பழக்கமுடைய உரோலியானா பழங்குடிகள் தம்மைச் சுற்றியுள்ள சமுதாயங்களிலுள்ள பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று அவர்களின் மக்கள் தொகையினைப் பெருமளவு குறைத்தனர். குரோ இந்தியர்கள் குழுக்களாக வாழுகின்றனர். அவர்களிடையே ஒரு குழுவினர் இன்னொரு குழுவினரிடமிருந்து குதிரைகளைக் களவாட முற்படும்போது அவர்களிடையே போர் நிகழுகிறது. துகும்டானி (Dugum Dani) மக்கள் சடங்கு முறையிலான போர் நடப்பைக் கொண்டிருந்தனர். அதனால் தங்கள் அருகில் வசிக்கும் பழங்குடிகளிடையே சீராகத் தங்கள் எல்லைப் பகுதிகளை உருவாக்கிக் கொண்டனர். செம்பாகா மாரிங் (Isembaga Maring) எனும் சமூகத்தினரிடையேயும் தங்கள் ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்தப் போர்நடப்பு ஒரு வழியாகப் பயன்படுத்தப்படுகிறது. யானமாமோ எனும் பழங்குடிகள் தமக்கு அருகில் வசிக்கும் சில சமூகத்தாரிடம் போரையும், சிலரிடம் உடன்பாடுகளையும் கொண்டிலங்குகின்றார்கள். அவர்கள் தங்கள் ஆட்சி நிலப்பரப்பை விரிவுபடுத்திக் கொள்வதுடன் மனைவிகளைப் பெறுவதற்காகவும் சண்டையிட்டுக் கொள்கின்றனர். சில மானிடவியலாளர்கள், எதிர்ப்பு உணர்வுகள் கொண்ட இரு சமுதாயங்களிடையே கலப்பு மணத்தினால் உண்-