உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/725

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியார்‌ பேரறிக்கை

689

அரசிறைக் கொள்கை

மீது நம் கருத்துகளைத் திணிக்க விரும்பவில்லை. சமய நம்பிக்கை, கோட்பாடுகளின் பெயரால் எவரொருவருக்கும் தனிச்சலுகை காட்டுதலோ எவரொருவரையும் வருத்துதலோ கூடாது என்பது எம் கருத்து. எல்லோரும் சட்டங்களால் சமமாகவும், நடுநிலைமையோடும் பாதுகாக்கப்படல் வேண்டும். நம் குடிமக்களின் சமய நம்பிக்கைகளிலும், வழிபாட்டு முறைகளிலும் தலையீடுதல் கூடாது என்று அதிகாரிகள் வலியுறுத்தப்படுகின்றார்கள்.

“நம் குடிமக்களின் இனம் அல்லது சாதி, சமயக் கோட்பாடு எதுவாயினும், வேறுபாடின்றித் தடையில்லாமல், கல்வியறிவு, திறமை, பணியில் நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் பதவிகள் வழங்கப்படும் என்பதும் எங்கள் நோக்கம்”.

“இந்திய மக்கள் தம் முன்னோர்களிடமிருந்து தாங்கள் மரபுரிமையாகப் பெற்ற நாட்டின்மீதுள்ள உணர்வை நாங்கள் அறிவோம்; அதனை மதிக்கிறோம்; அதனுடன் தொடர்பு கொண்ட அனைத்து உரினமகளும் நில உடைமையும் பேரரசியின் நியாயமான தேவைகள் பாதிக்கப்படாத வகையில் பாதுகாக்கப்படும். பொதுவாகச் சட்டமியற்றுதலிலும் அதனை நிருவகிப்பதிலும் மரபுரிமைகள், இந்தியாவின் செயல் வழக்காறுகள் ஆகியவற்றிற்குத் தகுதியுரிமை வழங்கப்படும்”.

“பேராசை பிடித்தவர்கள் செய்கையால், இந்திய நாட்டிற்கு அண்மையில் ஏற்பட்ட தீமைகளையும், துன்பங்களையும் கண்டு நாம் பெரிதும் வருந்துகின்றோம்; அவர்கள் தங்கள் நாட்டு மக்களைப் பொய் வதந்திகளால் ஏமாற்றியிருக்கின்றனர். மேலும் அவர்களை வெளிப்படையாகக் கலகமிடவும் தூண்டியிருக்கின்றனர். போர்க்களத்தில் அக்கலகத்தை ஒடுக்கிய முறையால் நமது வலிமை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. தவறான பாதையில் இட்டுச் செல்லப்பட்டவர்களை நாம் மன்னித்து விடுகின்றோம்”.

“இறையருளால் உள்நாட்டு அமைதியைத் திரும்பவும் நிறுவியபின், இந்தியாவின் அமைதிக் காலத் தொழில்துறை ஊக்குவிக்கப்படும்; பொதுநலத் துறைப்பணிகள் மேம்படுத்தப்படும்; மக்கள் நலனுக்காக அரசு இயங்கும். இந்திய மக்களின் நல்வாழ்வு எங்கள் வலிமை; அவர்களின் மனநிறைவு எங்கள் பாதுகாப்பு; அவர்களின் நன்றியறிதலே தலைசிறந்த கைம்மாறு”.

“நம் மக்களின் நலனுக்காக இவ்வெண்ணங்கள் நன்கு ஈடேறுமாறு இறைவன் நமது திறனைப் போற்றிப் பாதுகாப்பாராக”!

பேரரசியார் பேரறிக்கையில் புதுயுகத்தைப் புகுத்துவதற்குரிய நெறிமுறைகள் வரையறுத்துக் குறிப்பிடப்பட்டுள்ளமையைக் காணலாம். தீமையில் இருந்து நன்மை தோன்ற முடியும் என்றால், இத்தகைய திட்டங்கள் அனைத்திற்கும் படைவீரர் கலகமே அடிப்படைக் காரணம் எனலாம். பேரரசியார் பெருந்தன்மையுடன் கலகக்காரரை அளவு மீறித் தண்டிப்பதில்லை என உறுதியளித்தார். இதனால் இந்தியாவில் அமைதியை ஏற்படுத்துவது கானிங் பிரபுவுக்கு எளிதாயிற்று. ஏற்கனவே நிறைவேறிய பட்டயச் சட்டங்களும் இப்பேரறிக்கையில் முற்றுப்பெற்றன. வாணிகக் குழுவின் அதிகாரங்கள் முழுவதும் கி.பி. 1853 ஆம் ஆண்டுக்குள்ளாக ஆங்கில அரசின் ஆட்சிக்குச் சென்றுவிட்டன. நாட்டு மரபுவழியான பழக்க வழக்கங்களில் தலையிடுவதில்லை என்றும் நில உடைமைச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதில்லை என்றும் இப்பேரறிக்கை அறிவித்தது. ஆனால், அரசுப் பணிகளில் சாதி, சமய வேறுபாடுகளைக் கவனியாமல், தகுதியொன்றை மட்டும் கவனிப்பார்கள். இது நவீன மயமாக்குதலின் குறிக்கோள்களுள் ஒன்று எனலாம். பொது நலனுக்கான பணிகளும் அமைதியான தொழில்களும் வளர்ச்சியும் நல்லாட்சியின் கூறுகள் என்பதையும் சுட்டிக்காட்டிற்று இப்பேரறிக்கை. ‘இந்திய மக்களுக்கு இவ்வாணை புதிய வானத்தைப் பூமிக்குக் கொண்டு வந்தது. அவர்களுக்கு அமைதி, சமயப் பாதுகாப்பு, அரசியாரின் மற்றக் குடிமக்களுடன் சம உரிமை ஆகியவற்றை அளித்ததோடு இவைகளுக்கும் மேலாகத் தகுதியுடையவர்க்கு உயர் பதவிகள் அளிக்கப்படும் என உறுதியும் அளித்தது’ எனப் பேராசிரியர் ஈசுவரி பிரசாத் கூறுகிறார். இப்பேரறிக்கையைக் கி.பி. 1215–இல் சான்மன்னர் கையொப்பமிட்ட பெரும் பட்டயத்துடன் (Magna Carta) ஒப்பிட்டு, “இந்தியாவின் பிறப்புரிமையை உறுதிப்படுத்தும் ஒரு பெரிய முதல் அரசியல்சட்டம்” எனப் புகழ்கின்றனர். பி.கி.அ.

அரசிலி, தொண்டை நாட்டிலுள்ள தேவாரப் பாடல்பெற்ற தலங்களுள் ஒன்று. இக்காலத்தில் இது ஒழிந்தியாப்பட்டு என வழங்கப்பட்டு வருகிறது. தென்னார்க்காடு –மாவட்டத்தில், திண்டிவனத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியிலுள்ள இரும்பை மாகாளம் என்னும் தலத்தினை அடைந்து, அங்கிருந்து ஒட்டன்பாளையத்தின் வழியாக வடகிழக்கே 3 கல் சென்றால் இத்தலத்தினை அடைதல் கூடும். இதனைத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். இறைவன் பெயர் அரசிலி நாதர்; இறைவி பெயர் பெரிய நாயகி. இத்திருக்கோயிலில் அரசடித் தீர்த்தம் உள்ளது. ரா.கி.

அரசிறைக் கொள்கை என்பது அரசின் நிதிச் சுமையைப் பகிர்வதில் ஏற்படும் அடிப்படைச் சிக்கல்களையும் அரசின் செலவினங்கள் ஏற்படுத்தும் நன்மைகளையும் பற்றிக் கூறுவது. தொகுவினப்