உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/730

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசின்‌ தோற்றம்‌

694

அரசின்‌ தோற்றம்‌

கிறது. இரண்டாவது ஒப்பந்தமாகிய அரசாங்க ஒப்பந்தத்தில் ஆட்சி செய்கின்றவருக்கும் பங்கு இருக்கிறது. அவரும் இந்த ஒப்பந்தத்திற்கு உட்பட்டவரே, இந்த ஒப்பந்தத்தில் இருந்து மீறும்பொழுது ஆட்சியாளரை நீக்குவதற்கு மக்களுக்கு உரிமை இருக்கிறது. அதாவது, ஆளுவோர், ஆளப்படுவோர் யாவரும் ஒப்பந்தத்தின் பங்குதாரர்களே. ஆளப்படுவோர் இயற்கையில் அனுபவித்து வந்த சில உரிமைகளை ஆளுவோரிடம் ஒப்படைக்கத்தான் செய்கிறார்களேயல்லாமல் உரிமைப்படுத்தவில்லை என இலாக் கூறுகிறார். இது ஆப்சின் கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும்.

அரசு தோன்றியமை பற்றிய இலாக் கருத்தின் முக்கியக் கூறுகள் இயற்கை நியதி, சமூக ஒப்பந்தம், அரசாங்க ஒப்பந்தம், சட்டமியற்றலின் உயர்வு, அதிகாரப் பிரிவினை, உயிர், உரிமை, உடைமை ஆகியவை, மனிதனின் மாற்ற முடியாத அடிப்படைப் பிறப்புரிமைகள் என்பனவாகும்.

உரூசோவின் கருத்துப்படி மனிதன் இயற்கை நிலையில் எளிய நிலையில் வாழ்ந்தான். எளிய இனிமை நிறைந்த சுதந்திரமான மனித வாழ்க்கை அது. மற்றவர்களுக்கு இடுக்கண் செய்ய வேண்டிய இன்றியமையாமை இல்லாதிருந்தது. இது சரி, இது தவறு, இது தாய்மை, இது தூய்மையற்றது என்று இனம் பிரித்து வாழத் தெரியாத ஒரு புனிதமான நிலை அது. இந்நிலை நீண்ட காலங்களுக்கு நீடிக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. முதலாவது மக்கள் தொகைப் பெருக்கம்; இரண்டாவது பகுத்தறிவின் தோற்றம். மக்கள் தொகைப் பெருக்கத்தால் மனிதன் தனித்தனியாக வீடுகள் அமைத்துக்கொண்டான்; நான் எனது என்று சிந்திக்கத் தொடங்கினான்; இயற்கை நிலையின் புனிதம் பாழ்பட்டது; சிந்தித்தான், சீரழிந்தான் என்பது உரூசோவின் கருத்தாகும்.

இவ்வேளையில் இயற்கை நிலையில் இருந்த மகிழ்வும் மன நிறைவும் சமத்துவமும் மறைந்து போயின. போட்டியும் பொறாமையும் தலை தூக்கின. கொள்ளைகளும் கொலைகளும் அன்றாட வாழ்க்கையாயின. இந்தப் பதற்ற நிலையிலிருந்து விடுபடுவதற்குச் சமூக ஒப்பந்தம் தேவைப்பட்டது. இந்தச் சமூக ஒப்பந்தப்படி யாவரும் தங்களிடமிருந்த அதிகாரங்களை ஒன்று கூட்டி ஒரு பொது அதிகாரத்தை நிறுவினர். இதற்குப் பொதுச் சார்பு (General Will) அல்லது பொதுநல விருப்பம் என உரூசோ பெயரிடுகிறார். இந்தப் பொதுச் சார்பில் யாவகும் தங்களிடமிருந்த அதிகாரங்களை ஒப்படைப்பதுடன் தாங்களும் அதில் ஓர் உறுப்பினராகிறார்கள். பொதுச்சார்பு பிரிக்கவோ மாற்றவோ மறுக்கவோ முடியாதது. இது மக்களின் ஒருமித்த கருத்தைப் பிரதிபலிக்கும். பொதுச்சார்பு மக்களின் முழுமைபெற்ற மிகச் சிறந்த திண்ணிய எண்ணமாகும். எனவே அது இறைமை படைத்தது. அந்த இறைமைக்கு மீறி யாரும் நடக்க முடியாது. அரசு, மக்களின் ஒருமித்த அமைப்பாகும். பொதுச் சார்பை அது பெற்றிருக்கிறது. அதுவே தலைமை படைத்தது. அரசாங்கம் அரசின் பிரதிநிதியாகும். அரசிடமிருந்து அது அதிகாரங்களைப் பெறுகிறது. அரசாங்கங்களுக்கென்று தனி அதிகாரங்கள் கிடையா.

பொதுச் சார்பைக் கீழ்க்கண்டவாறு விளக்கலாம். அ,ஆ,இ,ஈ,உ என்பவர்கள் தனிமனிதர்கள் என்றால் அ ஆ இ ஈ உ என்று இணைந்து பொதுச் சார்பாக்கப்படுகிறார்கள். பொதுச் சார்பில் அங்கம் வகிப்பதுடன் அ,ஆ,இ,ஈ,உ என்ற தனி மனிதர்களாகவும் அவர்கள் இயங்குகிறார்கள். தங்களுடைய முழு அதிகாரத்தையும் பொதுச் சார்பில் ஒப்படைத்து விட்டதால், சமத்துவத்தையும் உரிமையையும் யாவரும் அதிலிருந்து பெறுகிறார்கள். பொதுச் சார்பைக் கூர்ந்து நோக்கும் பொழுது இரண்டு குணநலன்கள் நன்கு புலப்படும். ஒன்று, பொதுச் சார்பில் அங்கம் வகிக்கும் தன்மை, இரண்டு, அதற்கு உட்பட்டு வாழும் மனிதப்பண்பு, பொதுச்சார்பில் யாவரும் அங்கம் வகிப்பதால், தனி மனிதத்தன்மை அதில் அடங்கிப் போகவேண்டும் என்பதே உரூசோவின் கருத்தாகும். அவ்வாறு போகாதவர்களைப் பொதுச்சார்பு அடி பணிய வைக்கும் பொதுச்சார்பு யாவரின் நலனுக்கும் பாடுபடுவதால் அது ஒரு போதும் தீங்கிழைக்காது.

உரூசோ காட்டும் ஒப்பந்தத்தின் நிறை, மக்களின் இறைமை பொதுச் சார்பில் தெளிவாக்கப்பட்டுள்ளமையும், குறை அரசு சமூகம் ஆகிய இரண்டிற்கும் வேறுபாடு காணமுடியாமையும் ஆகும்.

ஆப்சு, இலாக், உரூசோ ஆகியோர் காட்டிய சமூக ஒப்பந்தத்தில் காணப்படும் பெரிய குறைபாடு, வரலாற்றுச் சான்றுகள் கிடைக்காமையாகும். எனவே இது ஓர் அனுமானத் கொள்கையாகவே நிலைத்திருக்கிறது. எனினும், இவற்றில் காணப்படும் அரசு தோன்றுவதற்கு மக்களின் இணக்கமே அடிப்படையாக அமைந்தது என்ற கருத்தை ஒதுக்கித் தள்ளுவதற்கில்லை.

இறைவழிக் கோட்பாடு, சமூக ஒப்பந்தக் கோட்பாட்டிற்கு முந்தியதாகும். அரசு என்பது, மனிதனின் விருப்பத்தால் தோற்றுவிக்கப்பட்டதன்று; இறைவனால் தோற்றுவிக்கப்பட்டது. அரசர் இறைவனின் சார்பாளராவர்; இறைவனாலேயே நியமிக்கப்படுகிறார்; இறைவனுடைய பேராளராக இருப்பதால் எந்த மானிடருக்கும் அவர் மறுமொழி சொல்லக் கடமைப்பட்டவரல்லர். அரசர் தவறாக