உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/734

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசினர்‌ ... நூலகம்‌

698

அரசு கொள்முதல் கொள்கை

சிங்களத் தீவிலிருந்தும், சாவகத் தீவிலிருந்தும் அவருக்குக் குறிப்புகள் வந்து சேர்ந்தன. அனைத்திந்தியாவின் தலைமைப் பரப்பாய்வாளர் (Surveyor General) என்ற உயர் பொறுப்பினைக் கி.பி. 1818–இல் ஏற்கக் கல்கத்தாவிற்குச் சென்றார். தென்னிந்தியாவில் சேகரித்தவற்றிற்கு ஈடுசெய்யும் வகையில் வட இந்தியாவிலும் பல சான்றுகளைச் சேகரித்தார். அரிய பொருள்களைச் சேகரிப்பதையே தம் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்ட இவர், அதைத் தொடர்ந்து தமது இறுதிக் காலம் வரையிலும் நடைமுறையில் செயற்படுத்தி வந்தார்.

1821–ஆம் ஆண்டு தலைமை ஆளுநராக (Governor General) இருந்த எசுடிங்சு (Hastings) இவ்வரிய செல்வத்தை, 10,000 பவுன்களுக்கு மெக்கன்சியின் துணைவியிடமிருந்து குழுவின் சார்பாக விலைக்கு வாங்கினார். இவற்றை வில்சன் என்பவர், அட்டவணைக் குறிப்பெடுத்து மூன்று தொகுதிகளாகத் தொகுத்தார். இவை சுமார் 14 மொழிகளிலும், 16 வகையான எழுத்துகளிலும் காணப்பட்டன. ஒரு பகுதி இங்கிலாந்திலுள்ள இந்திய அலுவலக நூலகத்திலும், இரண்டாவது பகுதி கல்கத்தா பண்டைப் பொருள் சேமிப்பு நிலையத்திலும் இருக்கின்றன. தக்காணத்திலும் அதற்குத் தெற்கிலும் உள்ள நாடுகளிலிருந்து தொகுக்கப்பட்ட செய்திகள் அனைத்தும் தமிழக அரசிடம் வந்து சேர்ந்தன.

இந்திய நூலகம் ‘டாக்டர் இலைடன்’ (Leiden) என்னும் ஆய்வாளரிடமிருந்து அவர் (1801–1811 வரையில்) இந்தியாவில் தங்கிச்சேகரித்த நூல்களையெல்லாம் விலை கொடுத்து வாங்கி வைத்திருந்தது. இந்தத் தொகுப்பினைப் பிரவுன் (Brown) என்னும் ஆங்கிலேய உயர் அலுவலர், இந்தியாவுக்கே மாற்ற ஏற்பாடு செய்தார். இவ்வாறு கி.பி. 1844–க்குள் இந்த இருவகைத் தொகுப்புகளையும் “சென்னை அறிவகக் கழகம்” தன் வசம் பெற்றது. பிரவுன் அவர்களும் சில நூல்களையும் சிறப்புமிக்க கையேட்டுப் படிகளையும் சுவடிகளையும் கி.பி. 1855–ஆம் ஆண்டு இக்கழகத்தின் பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டு இங்கிலாந்து திரும்பினார்.

இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட நூல் தொகுப்புகள், 1869–ஆம் ஆண்டு மாநிலக் கல்லூரி வடமொழிப் பேராசிரியரான பிக்பார்ட்டு என்பவரிடம் ஒப்புநோக்கி அட்டவணைப்படுத்த ஒப்படைவு செய்யப்பட்டது. தென்னிந்தியாவிலுள்ள சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாக்கத் தலைமை ஆளுநர் கி.பி. 1876–இல் கல்கத்தாவிலிருந்து ஒரு பொது ஆணை பிறப்பித்தார். இட நெருக்கடியின் பொருட்டுப் பல்வேறு இடங்களில் இருந்த சுவடிகள் கி.பி. 1870-இல் மாநிலக் கல்லூரிக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து கி.பி. 1898–இல் சென்னை, புனித சார்சு கோட்டையிலுள்ள ஒரு சிறிய அறைக்கு மாற்றப்பட்டன. சென்னைப் பல்கலைக்கழகக் கட்டிடம் 1938–இல் கட்டி முடிக்கப்பட்டு நூலகம் செயற்படத் தொடங்கியதும் அக்கட்டிடத்தின் மேற்குப் பகுதியில் முதல் மேல் தளத்தில் இச்சுவடிகள் வைக்கப்பட்டன. ஆயினும், நான்கு ஆண்டுகளுக்குள் இரண்டாம் உலகப் பெரும் போரினால், இத்தொகுப்புகள் திருப்பதியில், சிரீ வேங்கடேசுவரா ஆராய்ச்சிக் கூடத்துக்குக்கொண்டு செல்லப்பட்டன. மீண்டும் 1946–ஆம் பல்கலைக்கழக ஆண்டு சென்னைப் நூலகத்தில் பழைய இடத்திலேயே கொண்டு வந்து வைக்கப்பட்டன.

பல்வேறு சுற்றுக் குழுக்களின் உதவியால் 1872–ஆம் ஆண்டு முதல் 1930–ஆம் ஆண்டு வரையில் பல அரிய கையெழுத்துப் படிகளும் சுவடிகளும் இக்கையெழுத்து நூலகத்தில் சேகரிக்கப்பட்டன. தஞ்சை, செங்கற்பட்டு, முகவை மாவட்டங்களிலிருந்து பல அரிய நூல்கள் 1951, 1952–ஆம் ஆண்டுகளில் சேகரிக்கப்பட்டன. மொழிவழி மாநில வரையறைக் குழுவின் பரிந்துரைப்படி பழைய சென்னை மாநிலம் பிரிக்கப்பட்டபோது 1224 கன்னடக் கையேட்டுப் பிரதிக் கட்டுகளை மைசூருக்கும், 3335 தெலுங்கு மொழிக் கட்டுகளை ஐதராபாத்துக்கும், 583 மலையாள மொழிக் கட்டுகளைத் திருவனந்தபுரத்துக்கும் அனுப்பி வைத்தனர்.

விலைமதிப்பற்ற சிறந்த சுவடிகளுடன் அரசினர் கீழைக் கலைக் கையெழுத்து நூலகம் செயற்பட்டு வருகிறது.

அரசு கொள்முதல் கொள்கை: இதன் மூலம், பொருளாதாரத் தேவையைக் கருத்தில் கொண்டு பொருளாக்கம் செய்வோர் (Producers), நுகர்வோர் ஆகியோரின் நலன்களைப் பாதுகாக்கும் வண்ணம் சமமான, ஒருங்கிணைந்த பங்கீட்டுக் கொள்கை ஒன்றை இந்திய அரசு உருவாக்க முனைந்துள்ளது. இடைத்தரகர்களின் சூழ்ச்சிகள், முற்றுரிமையாளர்களின் முதலாளித்துவம், வளப் பற்றாக்குறைகள் ஆகியவற்றால் பொருளாக்கம் குறைந்து பொருள்களின் விலையில் ஏற்றத் தாழ்வுகள் பெருகியமையால், 1959–ஆம் ஆண்டு அரசு இன்றியமையாப் பண்டங்களைக் கொள்முதல் செய்து, பங்கீடு செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் முடிவை எடுத்தது. இம்முடிவினால் அரசு தன் திட்டமிட்ட சமத்துவக் கோட்பாட்டை (Planned Socialisation) செயற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளது. தொழிற் பொருள்களின் கொள்முதல், ஏற்றுமதி, இறக்குமதி, பங்கீடு இன்ன பிற அலுவல்களை அரசு வாணிகக் கழகம் ஏற்று நடத்துகிறது. காண்க: த.க. அரசு வாணிகக் கழகம்.

இன்றியமையாத வேளாண்மைப் பொருள்களின் வாணிகத்தில் அரசு நேரடிக் கட்டுப்பாடு செலுத்து-