உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசும்‌ சமூகமும்‌

705

அரசும்‌ சமூகமும்‌

யின் பட்டியலில் (Union List) 97 தலைப்புகளும், மாநில அரசுப் பட்டியலில் (State List) 66 தலைப்புகளும், ஒருங்கியல் பட்டியலில் (அதாவது மைய மாநில அரசுகளின் இணைந்த பொறுப்பில், Concurrent List) - 47 தலைப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளன. கல்வியைப் பற்றிய சட்டம் இயற்றுவதற்கும், மத்திய அரசின் மேற்பார்வையில் கல்வித் திட்டம் அமைவதற்கும் ஒருங்கியல் பட்டியலில் கல்வியைக் கொண்டு வருவது பற்றிய சிக்கல் எழுந்தது. வெவ்வேறு கருத்துகளை வல்லுநர்கள் எடுத்துரைத்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களடங்கிய குழு ஒன்று உயர்நிலைக் கல்வி பற்றிப் பி.என். சாப்ரு தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. அக்குழு உயர் கல்வியை ஒருங்கியல் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கருத்தை வெளியிட்டது. 1976–ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தப்படி கல்வி ஒருங்கியல் அதிகாரப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

கல்வியை மக்களுக்கு அளிக்கும் பொறுப்பிலிருந்து அரசு தன்னை விடுவித்துக் கொள்வது விரும்பத்தக்கதன்று. அதே சமயத்தில் தனது கடுமையான பிடியில் கல்வியை வைத்துக் கொண்டு, கற்பிக்கும் பணியிலும் நிருவாகத்திலும் ஈடுபட்டுள்ளவர்கள் விரும்பத்தகாத இடையூறுகளை ஏற்படுத்தாமலும், மனிதனின் தனித் தன்மைக்கு ஊறு செய்யா வண்ணமும் அரசு கல்வியைச் செயற்படுத்த வேண்டும். அரசின் ஈடுபாடு, மேற்பார்வை, வழிகாட்டுதல் ஆகியவற்றுடன் கல்வி அமைதல் விரும்பத்தக்கதாகும். இரா.தி.

அரசும் சமூகமும்: தனி மனிதனின் வாழ்க்கையில் அரசின் தொடர்பு இடைவிடாது நிகழ்கிறது. குழந்தை பிறந்தவுடன் அதன் பிறப்பு, அரசாங்கத்தில் பதிவு செய்யப்படுகிறது. வளரும்பொழுது அவனுடைய கல்விக்கு அரசு பொறுப்பேற்கிறது. பின்னர் அவனுக்கு வேலை வாய்ப்புகளை உண்டாக்கிக் கொடுக்கிறது. அவனுடைய உணவு, உடை, உடைமைகள் ஆகியவற்றுக்கான செலவுகள் யாவும் அரசின் கொள்கைகளால் தாக்கப்படுகின்றன. அவனது வருமானத்தின் ஒரு பகுதியை வரியாக அரசு எடுத்துக் கொள்கிறது. அதற்கு ஈடாக அரசு அவனுக்குக் கல்வி, இலவச மருத்துவம், ஓய்வு ஊதியம், போக்குவரத்து, காவல், பாதுகாப்புப் போன்ற வசதிகளை உண்டாக்கிக் கொடுக்கிறது. அவன் இறந்த பின்னர் அவனது இறப்பும் அரசாங்கத்தில் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு மக்கனின் அன்றாட வாழ்க்கையில் அரசின் தொடர்பினைப் பலவகைகளில் காணலாம். கிரேக்க அறிஞர் அரிசுடாட்டில் (Aristotle) அரசு இயற்கையாகவே உருவாயிற்று என்று கருதினார். மேலும், அவர் மனிதனின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யவே குடும்பம் என்னும் அமைப்பு ஏற்பட்டது என்றும், அக்குடும்ப அமைப்பு குழந்தைகள், பேரக்குழந்தைகள் என்று பல குடும்பங்களாகப் பெருகிப் பின்னர் அவை ஒன்றுசேர்ந்து ஊரகமாயிற்று என்றும், மக்கள் ஒன்று கூடி ஒரே இடத்தில் வாழும்போது தங்களுடைய நல்வாழ்வுக்காக அரசு என்னும் அமைப்பை உருவாக்கினார்கள் என்றும் கூறுகிறார்.

தாமசு ஆப்சு (Thomas Hobbes) என்ற அறிஞர், அரசு தொடங்கிய சூழ்நிலையைப் பின்வருமாறு விளக்குகிறார். பண்டைக் காலத்து மனிதர்கள் எல்லோரும் உடல் வலிமையிலும் மனமுதிர்ச்சியிலும் ஏறத்தாழச் சமநிலையில் இருந்தார்கள். கூட்டமாக வாழ்ந்து வந்த மனிதர்கள் தமக்கு வேண்டியவற்றைப் பெற வன்முறையில் ஈடுபட்டார்கள். எவ்விதப் பாதுகாப்போ கட்டுப்பாடோ இல்லாமல், ஒழுங்கு, ஒழுங்கின்மை ஆகியவற்றை அறிந்திராமல், தன்னிச்சையாகத் தாம்மட்டும் நலமுற வாழவேண்டும் என்ற அடிப்படையில் குறுகிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். தங்களின் இந்த அவல நிலையை உணர்ந்து தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வேண்டி அவர்கள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து அவனுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.

நாகரிகம் முதிர்ச்சியுறாத சமூகங்களில் அரசு என்பது பெயரளவில் தான் இருந்தது. அவர்களுக்கு முறையான விரிவான அரசு தேவைப்படவும் இல்லை. ஏனெனில் மக்கள் கூட்டம் சிறியதாகவும் எளிதில் அடக்கி ஆளக்கூடியதாகவும் இருந்தது. ஏறக்குறைய 20 முதல் 200 பேர் வரை அடங்கிய சமூகத்தில் எல்லோருமே ஒருவரை ஒருவர் அறிந்திருந்தமையால் கட்டுப்பாடு நிலவியது. மேலும், நாகரிகம் வளர்ச்சியுறாமல் தேங்கி நின்றதால், பல நூறு ஆண்டுகளாகச் சமூக நிலையில் எவ்வித மாற்றமுமின்றி மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் தேவைகளும் குறைவாக இருந்தன. அத்தகைய சமூகத்துப் பெரியவர்கள் நல்ல நூல்நிலையங்களுக்கு ஒப்பானவர்களாக இருந்தனர். சிறியவர்கள் தமக்குத் தேவையானவற்றைப் பெரியவர்களிடமிருந்து கற்றுத் தெரிந்து கொண்டனர். அது மட்டுமன்றித் தனிப்பட்டவர் உடைமைகளும் குறைவாகவே இருந்தன. பண்டைய சிறிய சமூகத்தில் ஒருவருடைய உடைமைகள் எல்லோருக்கும் தெரிந்திருந்தமையால், களவாடிய பொருள்களை விற்கவோ வேற்றூருக்கு எடுத்துச் செல்லவோ முடியாததால் களவு நிகழ்வது அரிதாக இருந்தது, பொறாமை, பழி கூறல், தனிப்பட்ட பகைமை இவையே குற்றம் நிகழக் காரணங்களாக இருந்தன. ஒரு மனிதனின் நற்பெயரே அவனது பெரும் செல்வமாக மதிக்கப்பட்டது.

பண்டைக் காலத்து மக்கள் நாடோடிகளாக வேட்டையாடித் திரிந்த போது, நிலையான தலைமை

வா.க. 1 – 45