உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/742

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசும்‌ சமூகமும்‌

706

அரசும்‌ சமூகமும்‌

இருக்கவில்லை. தேவைக்கேற்பத்தான் தலைமை உருவாயிற்று. அதாவது கூட்டத்தினரிடையே சச்சரவு ஏற்பட்டாலோ வெளியிலிருந்து இடையூறு ஏற்பட்டாலோ மட்டுமே ஒரு தலைவனின் அறிவுரை, உதவி, அதிகாரம் முதலியன பிறரால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதுபோன்ற தலைமை பரம்பரையாக ஏற்படவில்லை. காலச் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தலைமை அமைந்தது. எடுத்துக்காட்டாக வேட்டையாடும் திறமை வாய்ந்தவன் பஞ்சக் காலத்தில் வேட்டையால் வாழ்பவர்களுக்குத் தலைவனானான். அனுபவம் முதிர்ந்தவர்களின் குழு. அவனுக்குத் தக்க அறிவுரை கூறி வந்தது.

இந்த நாடோடி நிலைமை மாறி மக்கள் இடத்தில் பல குடும்பங்களாக வாழத் தொடங்கிய போது தனியார் உடைமைகள் மிகுந்தன. தேவைகளுக்குத் தகுந்தவாறு குடும்பத் தலைவர்கள் ஒன்று கூடி எண்ணிச் செயற்பட்டனர். பிறகு சேமிக்கப்பட்ட தானியங்கள், பிற பொருள்கள், பெண்கள் ஆகியோர்களைக் கவர்ந்து செல்ல அடிக்கடிப் போர்களும் கவர்தலும் நடக்கத் தொடங்கின. தோல்வியுற்றவர்களை வென்றவர்கள் அடிமைகளாக்கினர். அது முடியாதபோது கொன்று குவித்தனர். அவர்களின் உடைமைகளையும் விளை நிலங்களையும் கைப்பற்றினர். அந்நிலங்களில் வேலை செய்ய ஆட்கள் தேவைப்பட்டதால், மீண்டும் மீண்டும் போர் தொடுக்க வேண்டியிருந்தது. இதன் விளைவாகக் கூட்டங்கள் பெருகி, மக்கள் வாழும் இடங்கள் விரிவடைந்து சிற்றூர்களாகவும் நகரங்களாகவும் நாடுகளாகவும் மாறின. பலவகைப்பட்ட மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும் அவர்களுக்கு வசதிகள் உண்டாக்கிக் கொடுக்கவும் திறமையான தலைமை தேவைப்பட்டது. தலைவன் கடமைகள் மிகுந்த போது அவனுக்குத் திறமையான நம்பிக்கையுள்ள உதவியாளர் தேவைப்பட்டனர். இவ்வாறாக அரசு உருவாயிற்று.

தொடக்கத்தில் ஏற்பட்ட அரசுக்கும் இக்கால அரசுக்கும் வேற்றுமைகள் பல உள்ளன. போர்களையும் சச்சரவுகளையுமே எதிர்கொண்ட பண்டைக் காலத்தில் வன்முறையே அரசின் இயங்குமுறையாக இருந்தது. அது போர்க்கால அரசு (War State) எனப்பட்டது. காலப்போக்கில் வளர்ந்து வரும் நாகரிகத்திற்கு ஏற்பப் பல மாறுதல்களையடைந்து நலஅரசு உருவாயிற்று. பண்டைக் காலத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிகக் குறைவாகத் தலையிடும் அரசே மிகச் சிறந்த அரசு என்ற கருத்து நிலவியது. அந்நிலை மாறி இன்றைய அரசு பல்வேறு துறைகளாக விரிவடைந்து தனிமனித வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் தொடர்பு கொள்கிறது.

ஒரு நாட்டின் பொருளாதாரம் அரசால் முடிவு செய்யப்படுகிறது. உற்பத்தியைப் பெருக்குவதற்கு அரசு திட்டமிடுகிறது. நிலமில்லாத மக்களுக்கு நிலங்களை வழங்கி உற்பத்தியான பொருள்களை விற்கவும் உதவுகிறது. போக்குவரத்து வசதிகளைப் பெருக்கி வாணிகம் செழிக்க வழி செய்கிறது. பலவகைத் தொழில்களும் சீராக நடப்பதற்குத் திட்டங்களும் சட்டங்களும் இயற்றி நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தனியார் துறை நிறுவனங்கள் மட்டுமன்றி அரசும் பல தொழிற்சாலைகளை நிறுவி நடத்துகிறது.

கல்விக் கூடங்கள் பல அமைத்து மக்களின் அறிவையும் திறனையும் வளர்க்க அரசு வழி செய்கிறது. கற்றுத் தேர்ந்த கல்வியையும் வேலைத் திறனையும் நன்கு பயன்படுத்த வேலை வாய்ப்புகளை உண்டாக்கிக் கொடுக்கிறது.

ஊனமுற்றவர்களும் நலிவுற்றவர்களும் புறக்கணிக்கப்படாமல் அவர்களைக் காக்கும் பொறுப்பை அரசு ஏற்று அவர்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவம் மட்டுமன்றி வேலை வாய்ப்புகளும் அளித்து அவர்களும் சமூகத்தில் சிறப்பாக வாழ வழி செய்கிறது. அதுமட்டுமன்றித் திக்கற்றோர் உதவியற்ற முதியோர், மனநலிவுற்றவர்கள் ஆகியோர்க்கான காப்பகங்களையும் அரசு நடத்துகிறது.

இவ்வாறு விரிந்து செயலாற்றும் இன்றைய சமூக நல அரசின் முதன்மையான பணி, நாட்டை அயலார் தலையீட்டிலிருந்து காப்பாற்றுவதேயாகும். இதற்காகவே, படைகள், அவற்றுக்குத் தேவையான படைக்கலன்கள், பயிற்சிகள் ஆகிய இவற்றிற்காகப் பெருந்தொகையை அரசு செலவிடுகிறது. அது மட்டுமன்றி அயல்நாட்டவர்களுடன் நல்லுறவு ஏற்படுத்தி அமைதி காக்கவும் பொருளாதார உறவுகள் மேம்படவும் திட்டமிட்டுச் செயலாற்றுகிறது.

தன் நிருவாகத்திற்கு உட்பட்ட இடங்களில் ஒழுங்கமைப்புச் சீராக நிலவச் செய்வது அரசின் அடுத்த பணியாகும். ஒரு சமூகத்து மக்களுக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்வது, அதைச் சமமாகப் பகிர்ந்தளிப்பது, மக்களுடைய கல்வி, உடல் நலம், பொழுதுபோக்கு, அயல்நாட்டுத் தொடர்பு, போக்குவரத்து யாவும் ஒழுங்காகச் செயற்பட ஒரு முறையான சமூக ஒழுங்கமைப்பு இன்றியமையாததாகும். இதனை ஏற்படுத்துவது அரசின் முதன்மையான பணியாகும்.

நாட்டின் பரப்பளவு மிகுதியாக உள்ள போது இந்தப் பணியைச் செயற்படுத்துவது கடினமானதாகிறது. எடுத்துக்காட்டாகச் சோவியத்து அரசின் நிருவாகத்தில் ஏறத்தாழ 84,73,000 சதுர மைல்கள் உள்-