உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/747

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரணிடுதலும்‌ முற்றுகையிடுதலும்‌

711

அரணிடுதலும்‌ முற்றுகையிடுதலும்‌

களும், முள்வேலியும் அமைக்கப்பெற்றன. நாடுகளின் எல்லையோரங்களில் மிக நீளமாகவும் வரிசையாகவும் கோட்டைகள் அமைத்துப் பகைவரைத் தடுத்தனர். முதன் முதலில் பிரான்சு தனது கிழக்கெல்லைப் பகுதியில் ‘மாகிநாட் கோடு’ (The Maginot Line) என்று பல கோட்டைகள் அமைத்துச் செருமானியரின் போர் வெறியிலிருந்து தப்பித்துக்கொள்ள நினைத்தது. இதேபோன்ற அமைப்புடைய தொடர் கோட்டைகள் இத்தாலியின் வடக்குப் பகுதியிலும், வடகிழக்குப் பகுதியிலும் கட்டப் பெற்றுள்ளன. போலந்தின் எல்லையோரத்தில் உருசியாவும், செருமனியின் எல்லையோரத்தில் செக்கோசுலோவாகியாவும் கட்டியுள்ளன. இவை யாவும், பீரங்கி, கவச மோட்டார், டாங்கி ஆகியவைகளைத் தடுத்து நிறுத்த அமைக்கப்பட்ட அரண்களாகும்.

இரண்டாம் உலகப்போரின் பின்னர் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன. இவை, போர் தொடுத்து நாட்டை அழிப்பதைவிட ஒரு நாட்டில் இருந்தபடியே ஓர் இயக்கியின் உதவியால் பகைவரின் நாட்டைச் சில மணித்துளிகளில் அழித்துவிடும். எனவே, ஒரு நாடு தன் அணு ஆயுதங்களை இன்றியமையாத தளத்தில் நிறுவச் செய்தலும், அதனைப் பகைவர் நாடு விழிப்புணர்வோடு அணு ஆயுதத்தின் அவ்வப்போதுள்ள நிலையினைக் கண்காணித்த வண்ணமே இருத்தலும் நடைபெற்று வருகின்றன. ஒரு நாட்டில் நிறுவப்பட்டுள்ள ஏவுகணைகளுக்கு எதிராகப் பகைவரது நாடுகளும் ஏவுகணைகளை ஆயத்த நிலையில் வைத்துள்ளன. இவை ஒன்றையொன்று தாக்கி உயிர் இழப்பும் பொருள் இழப்பும் விளைவிக்கும் என்ற அச்சமே வல்லரசுகளின் முதன்மையான அரணாக இன்று விளங்குகிறது.

முற்றுகை என்பது கோட்டையினை வளைக்கை அல்லது சூழ்ந்து கொள்ளுதல் என்ற பொருள் கொண்டதாகும். பகைவனின் கோட்டையை முற்றுகையிட்டுக் கைப்பற்றும் போரினைத் தமிழர்கள் உழிஞைப் போர் என்றனர். கோட்டைக்குள் பகைவர்கள் ஏணிகளின் உதவியால் நுழைய முயலுதலும், அவற்றைத் தடுக்கக் கோட்டையில் உள்ளோர் அம்பு மாரி பொழிதலும், பலவகைப் பொறிகளால் பகைவரைத் தாக்கி எறிதலும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளன. உடும்புகளின் துணையால் மதில் மீது ஏறுவதும் உண்டு. கோட்டையில் இருப்போர் வெளியேவந்து தங்கிய நிலையும் உண்டு. அவர்கள் தாமே கோட்டைப் போரில் விழுப்புண்பட்டு இறந்தமையினைத் தொல்காப்பிய நொச்சித்திணை கூறுகிறது. கோட்டையைக் காக்க வீரர்கள் போராடிய நிலையினையும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. மதிலின் உச்சியைக் கைப்பற்றிய பகைவர்கள் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மங்கல நீர் தெளித்து, மண்ணு மங்கலம் என்ற விழாவைக் கொண்டாடியதும் உண்டு, முற்றுகையிடப்பட்ட நிலையில் தூதுவர்களையும் புலவர்களையும் கோட்டைக்குள் அனுப்பியும், கோட்டைக்குள் இருப்போர் பகைவனுக்கு அனுப்பியும் இருபாலாரும் ஒத்த உடன்படிக்கை செய்து கொண்டமையும் உண்டு. முற்றுகையினை நீட்டித்துக் கோட்டைக்குள் இருந்த மக்கள், விலங்கினங்கள் உணவில்லாமல் தவிக்கச் செய்வதும் உண்டு. தமிழ்நாட்டில் சங்க காலத்தில் நடைபெற்ற உறையூர் முற்றுகை இத்தன்மை வாய்ந்ததாகும். இதுபோன்ற ஒரு நிலையைக் கிரேக்கர்கள் திராய் (Troy) நகரை முற்றுகையிட்ட போது கையாண்டனர். அந்த முற்றுகை பலகாலம் நீட்டித்தது. தொடர்ந்து முற்றுகையிட்ட போதிலும் திராய் மக்கள் பணிய மறுத்தனர். பின்னர்க் கிரேக்கர்கள் தம் சூழ்ச்சித் திறனால் கோட்டைக்குள் புகுந்துப் திராய் மக்களைத் தோற்கடித்து எலனைக் (Helen) கைப்பற்றினர்.

அசிரியர்கள் போர் வீரர்களுக்கு முறைப்படி சிறப்பான பயிற்சிகள் அளித்து முற்றுகையில் ஈடுபடுத்தினர். சக்கரக் கவச வண்டிகள் அமைத்து, அதில் வில் வீரர்களை அனுப்பிக் கோட்டைகளை முற்றுகையிட வைத்தனர். இதனால், கோட்டைக்குள் இருந்தோர் ஏவும் அம்புகளால் அசிரியர்கள் தப்பித்துக் கொள்ளவும், வலிந்து தாக்குதல் மேற்கொள்ளவும் முடிந்தது. உயிரிழப்புகள் மிகுதியாக ஏற்படாமல் பகைவர்களின் கோட்டையை முற்றுகையிட்டுக் கைப்பற்றியுள்ளனர்.

சீனாவில் மங்கோலியர்கள் சிறப்பான முற்றுகை முறைகளைக் கையாண்டார்கள். இவர்களின் படையானது ஐந்து பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இரு பிரிவினைச் சார்ந்தவர்கள் ஏனைய மூன்று பிரிவினருக்குப் பாதுகாப்புக் கவசமாக விளங்கினர். மூன்று பிரிவினர்களும் வில் அம்புகளைத் தாங்கியிருந்தனர். முன் நின்ற இரு பிரிவினரும் ஈட்டிகளைத் தாங்கி நின்றனர். போர் நிகழ்ந்தபோது பின்னர் இருக்கும் வில்வீரர்கள் ஈட்டிவைத்திருப்போர்களின் இடையில் வந்து நின்று ஒரே நேரத்தில் அம்பு மழை பொழிவர். பகைவர்கள் குழப்பம் அடையும் வரையில் ஓயாமல் போர் செய்வர். ஈட்டி வைத்திருப்போரும் அதே நேரத்தில் போர் புரிவர். ஈட்டியும், அம்பும் மாறி மாறித் தாக்குவதால் பகைவர்கள் நிலை குலைந்து போய்விடுவர். அவர்கள் சிறந்த கட்டுப்பாடு கொண்டோராகவும், இலக்கினைத் தவறாமல் வீழ்த்தும் திறன் கொண்டோராகவும் திகழ்ந்து வேகத் திறனைக் கணக்கிட்டுக் காலமுறையில் தாக்குதல் நிகழ்த்தி முற்றுகையிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இசுகாண்டினேயாவின் வடபகுதியான குளிர்நாட்டில் வாழ்ந்து வந்த வைகிங் என்ற இனத்தவர் சிறந்த