உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/753

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரபு இலக்கியம்‌

717

அரபு இலக்கியம்‌

அரபு இலக்கியம் உலகின் தொன்மையான இலக்கியங்களுள் ஒன்றாகும். இது அகன்ற இலக்கியப் பரப்பினை உடையது; காலந்தோறும் புதுப்புது இலக்கிய வகைகளைப் பெற்று வளர்ந்து வரும் பெருமை சான்றது. மேலும், உலகெங்கும் வாழும் அரபியர் அரபியரல்லாதார் ஆகியோரால் வளர்க்கப்படுவதாலும், பேணிக் கற்கப்படுவதாலும் இம்மொழி இலக்கியம் உலகளாவிய இலக்கியமாக மிளிரும் சிறப்பினைப் பெற்று விளங்குகிறது.

இதன் தோற்றம் திட்டமாக வரையறுக்கப்படவில்லை. அரபுத் தீபகற்பத்தின் தென் பகுதியாகிய ஏமனிலிருந்து கிடைத்துள்ள கல்வெட்டுகள் சில கி.மு. 8–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இக்கல்வெட்டுகளின் எண்ணிக்கை மிகுதியும், இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபு இனக்குழுக்களின் வரலாறும், இவற்றில் காணப் பெறும் அரபுமொழி நடையும் அரபு இலக்கியத்தின் தொன்மையைச் சுட்டிக் காட்டும் சான்றுகளாகத் திகழ்கின்றன. எழுத்து வடிவம் பெற்ற பழமையான அரபு இலக்கியங்கள் என்னும் வகையில், கி.பி. 5–ஆம் நூற்றாண்டில் வடக்கு அரேபியாவில் எழுதப்பட்ட பழமொழிகளும் கவிதைத் துணுக்குகளும் முதலிடம் பெறுகின்றன. எனினும் ‘முதன்முதலில் எழுத்து வடிவம் கொடுக்கப்பெற்றுக் கருத்தும் வடிவமும் சிதையாவாறு பேணிப் பாதுகாக்கப்பட்ட சிறப்பினையுடைய அரபு இலக்கியம்’ என்னும் பெருமை இசுலாமியர்களின் திருமறையாகிய குர்ஆனுக்கே உண்டு. இசுலாம் தோன்றுவதற்கு முன்னர்த் தோன்றிய அரபு இலக்கியங்கள், அரபு இலக்கிய வரலாற்றில் ‘அறியாமைக் காலம்’ (அல் சாகிலியா) சார்ந்தன எனக் குறிக்கப்படுகின்றன. இது கி.பி. 500 முதல் கிசுறத் ஆண்டு தொடங்கும் கி.பி. 622 வரை அமையும் 122 ஆண்டுக் காலப் பகுதியாகும். இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் வாய்மொழி இலக்கியங்களாக உலவி, இசுலாம் தோன்றிய பின்னர் எழுத்து வடிவம் பெற்றன.

தொன்மையான அரபுக் கவிதைகளை வடிவம், பொருள் ஆகிய அடிப்படையில் இரு வகைகளாகப் பகுக்கலாம். 2 அடி முதல் 200 அடி வரை அமையும் குறுங்கவிதைகள் (இரசுசு) முதல் வகையின. இயைபுத் தொடை பெற்ற ஒழுங்கான ஈரடிகள் கொண்டனவாகும். இனப் புகழ்ச்சி, அங்கதம், போர், காதல், கையறுநிலை ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டவை.

குறுங்கவிதை எழுதுவதில் வல்ல பெண் கவிஞர் பலர் இக்காலத்தில் வாழ்ந்திருந்தனர். இவர்களுள் கன்சா என்பவர் குறிப்பிடத்தக்கவர்.

இரண்டாம் வகையினவாகிய நெடுங்கவிதைகள் (கசீதா) 60 அடி முதல் 100 அடி வரையில் அமைந்தனவாகும். இவற்றின் முற்பகுதி (நாசிப்) பயணம் மேற்கொண்ட கவிஞன், தன்னுடைய காதலியின் அழகையும் பிரிவின் கொடுமையையும் தன்னைத் தொடர்வோருக்குச் சொல்வதாக அமைந்துள்ளது. அடுத்த பகுதி ஒட்டகம், குதிரை போன்றவற்றின் வருணனையாகவும் இயற்கைப் புனைவாகவும் அமைந்துள்ளது. இறுதிப் பகுதி கவிஞனின் பெருமையைப் புலப்படுத்துவதாகவோ பாலைநில வாழ்க்கையை விளக்குவதாகவோ புகழ்ந்து பாடப் பெறும் வள்ளலின் பெருமையைக் குறிப்பிடுவதாகவோ அமைந்துள்ளது.

இக்காலப் பகுதியைச் சேர்ந்த இலக்கியங்கள் கவிதைத் தொகுப்புகள் (திவான்) எனவும், தொகை நூல்கள் எனவும் இருவகையில் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. கவிதைத் தொகுப்புகள் ஒரு புலவரின் கவிதைத் தொகுப்புகள் எனவும், ஓரினக்குழுப் புலவர்களின் கவிதைத் தொகுப்புகள் எனவும் இருவகையாகப் பகுக்கப்பட்டுள்ளன. நாபிகா, அந்தாரா, தராபா, சுகேர், அல்கமா, அம்ருல் கயசு என்னும் ஆறு கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூல்களும் குதலிய்யா இனக்குழுவின் கவிதைத் தொகுப்பு என்னும் நூலும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

தொகைநூல்கள்: கி.பி. 8–ஆம் நூற்றாண்டில் அம்மத் அர்ராவியா என்பார் தொகுத்த முஅல்லகத் மிகச் சிறந்த தொகை நாலாகும். மக்காவிற்கு அருகிலுள்ள உக்காசா என்னும் இடத்தில் ஆண்டு தோறும் கூடும் சந்தையின்போது பல்வேறு கவிஞர்கள் தத்தம் புலமையை வெளிப்படுத்திப் பாடுவார்கள். அக்கவிதைகளுள் மிகச் சிறந்தன, மக்காவிலுள்ள இறை இல்லத்தில் (கஃபத்துல்லா) ஓராண்டுக்காலம் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட்டுத் தொங்கவிடப்பெறும். அவ்வாறு தொங்கவிடப்பட்ட கவிதைகள் முஅல்லகத் (தொங்கவிடப்பட்ட கவிதை) என அழைக்கப்பெறும் என்பர். அக்காலத்தில் அரபு மொழியின் வரிவடிவம் செம்மையுறவில்லை. போர்க்குணம் கொண்ட அரபு இனக் குழுக்கள், ஒரு குறிப்பிட்ட இனக் குழுவைச் சேர்ந்த ஒருவரைச் சிறந்த கவிஞராக ஒப்புக்கொண்டிருக்க மாட்டா. சிறந்த கவிஞர் யார் என்பதை முடிவு செய்ய எல்லோரும் ஒப்புக் கொண்ட நடுவர் குழு இருந்திருக்க முடியாது. இவை போல்வனவற்றைக் காரணங்களாகக் காட்டி முஅல்லகத்தின் பெயர்க்காரணத்தை எதிர்ப்பாரும் உளர். அவர்கள் முஅல்லகத் என்பதற்கு மணிமாலை (‘இல்க்’ – விலை மதிப்பற்றது; மணி) எனப் பொருள்கொள்வர். அம்ருல் கயசு, தராபா, சுகேர், இலாபித், அந்தாரா, அமிர் இப்னு குல்சும், ஆரித் இப்னு இல்லிசா ஆகிய ஏழு கவிஞர்களின் கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பிற்காலத்தில் நாபிகா, ஆசா, ஆபித் இப்னு,