அரபு இலக்கியம்
718
அரபு இலக்கியம்
அப்ராசு என்போரின் கவிதைகளும் இத்தொகுப்பில் இடம்பெறத் தொடங்கின.
அல் அமாசா என்பது அபூ தம்மாம் அபீப் பின் ஆவ்சு (இ. 850) என்பார் தொகுத்த தொகை நூல், ‘வீரச் செயல்கள்’ (அல் அமாசா) என்னும் பொருள் பற்றிய கவிதைகள் அடங்கிய இந்நூலின் உட்பிரிவு (பாபு) ஒன்றால் பெயர் பெற்றுள்ளது. இத்தொகுப்பில் இசுலாமியச் சமயம் தோன்றிய காலத்தில் எழுதப்பட்ட கவிதைகளும் கலந்துள்ளன என்பர். இக்கவிதைகளில் பல பண்டைய அரபு இலக்கியத்தின் சான்றுகளாகத் திகழ்வதை சிறப்பினை விளக்கும் இலக்கியத் திறனாய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள்.
முபாதல்லியாத் என்னும் தொகை நூல், அதனைத் தொகுத்த முபாத்தல் அல்தப்பி (இ. 786) என்பார் பெயரால் அழைக்கப்படுகிறது. இத்தொகை நூலில் 68 கவிஞர்கள் எழுதிய 128 கவிதைகள் காணப்படுகின்றன.
புகழ்பெற்ற இம்மூன்று கவிதைத் தொகுப்புகளும் நீங்கலாக, புக்தூரி (இ. 897) என்பார் தொகுத்த ‘அமாசா’ என்னும் தொகை நூலும், அரபு சய்யது முகம்மது அல் குறைசி (ஏ. 1000) என்பார் தொகுத்த 49 நெடுங்கவிதைகள் அடங்கிய ‘சம்கரத்து அசா அரி அல் அரப்’ என்னும் தொகை நூலும் குறிப்பிடத்தக்கனவாகும்.
இக்காலப் பகுதியில் வாழ்ந்திருந்த ஆதி இப்னு சயத் என்னும் கிறித்துவக் கவிஞரும் சாமுவேல் இப்னு அதியா என்னும் யூதக் கவிஞரும் எழுதியுள்ள கவிதைகள் வெளிவந்துள்ளன. அம்ருல் கயசின் கவிதை பண்டைய அரபு இலக்கியத்தின் இயல்பினை விளக்குவதாக அமைந்துள்ளது.
சமகால அரபு இலக்கியம்: இசுலாத்தின் தோற்றத்திற்குப் பின் திருமறையும் (குர்ஆன்), நபிமொழியும் (ஆதீது) அரபு இலக்கியத்தை இயக்கும் சக்திகளாகத் திகழ்கின்றன. திருமறை இறைவனால் அருளப்பட்ட வேத வெளிப்பாடாதலால் இது ஆய்வுக்கு அப்பாற்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்நூல் முகம்மது நபிக்குக் கி.பி. 610 தொடங்கி 632 வரை அமையும் 22 ஆண்டுக்காலப் பகுதியில் சிறுகச் சிறுக அருளப்பட்டது. அவ்வப்போது சிறிதும் பெரிதுமாக அருளப்பட்ட திருமறையின் பகுதிகள் தக்காரால் மனப்பாடம் செய்யப்பட்டும், தோல், விலங்குகளின் எலும்பு போன்றவற்றில் எழுதப்பட்டும் பாதுகாக்கப்பெற்றன. இயமாமாப்போரில் (633) மனப்பாடம் செய்திருந்தவர்கள் பலர் இறந்து விட்டமையால், இந்நூலிற்கு முழுமையான எழுத்து வடிவம் கொடுத்துத் தொகுத்துப் பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இசுலாத்தின் மூன்றாவது கலீபாவாகிய உதுமானால் 651–இல் இந்நூல் முறைப்படி தொகுக்கப்பட்டு முழுமையான எழுத்து வடிவம் பெற்றது. பின்னர் அச்சாசு பின் யூசுப் (714) என்பார், திருமறையில் உயிர்க் குறிகளையும் மெய்யெழுத்துகளுக்கான மேல் கீழ்ப் புள்ளிகளையும் ஏற்படுத்தித் திருமறை எத்தகைய மாறுதலும் இல்லாது எல்லா இடங்களிலும் ஒன்று போல் வழங்குமாறு செய்தார்.
திருமறை 114 அத்தியாயங்களை (சூரா) உடையது. இந்நூலில் 6666 வசனங்கள் (ஆயத்) உள்ளன. எனினும் இந்தியாவில், சிறப்பாகத் தமிழ்நாட்டில் வழங்கும் திருமறை, கபா (ஈராக்) அறிஞர்களின் கருத்தினைப் பின்பற்றி 6236 வசனங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. (சில வசனங்களைப் பிரித்து 6666 வசனங்களையும் அடையாளமிட்டுக் காட்டுவர்.) திருமறை மீண்டும் மீண்டும் ஓதப்படும் நூலாகையால் இது திங்களின் 30 நாட்களிலும் ஓதும் வகையில் 30 பாகங்களாகவும் (சூசு), வாரத்தின் 7 நாட்களிலும் ஓதும் வகையில் 7 பிரிவுகளாகவும் (மன்சில்) பகுக்கப்பட்டுள்ளது. திருமறையின் தூய்மையைப் பேணிக் காக்க வேண்டும் என்னும் எண்ணம், அரபு மொழியில், அகராதியியல் முதல் தத்துவவியல் வரை பல்வேறு கலைகள் வளரக் காரணமாயிற்று.
முகம்மது நபி மறைந்து நீண்ட காலத்திற்குப் பின்னர் இசுலாமிய நெறியை வலிமை உடையதாக்குவதற்காக அவருடைய மொழிகளைத் (அதீது) தேடிச் சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு தேடித் திரட்டியவைகளில் உண்மையானவை என ஒப்புக் கொள்ளப்படும் ஆறு நபிமொழித் திரட்டுகளில் புகாரி (870) என்பார் திரட்டிய ‘சகீகு புகாரி’ (சகீகு–உண்மையானது), முசுலீம் (874) என்பார் திரட்டிய ‘சகீகு முசுலீம்’ என்பவை குறிக்கத்தக்கன ஆகும். புகாரி என்பார் தாம் திரட்டிய 6,00,000 நபி மொழிகளில் 7,000 நபி மொழிகளை மட்டுமே தம்முடைய நூலில் தொகுத்துத் தந்துள்ளமை, அவரது அயராத உழைப்பையும், உண்மையே நிலைக்க வேண்டும் என்பதில் அவருக்கிருந்த ஆழ்ந்த பற்றுதலையும் விளக்குகிறது. “இவ்வுலகம் இறை நம்பிக்கை உடையவனது சிறைக்கூடமாகும். மேலுலகம் இறை நம்பிக்கையற்றவனின் சிறைக்கூடமாகும்” என்பது சகீர் முசுலிமில் காணப்படும் ஒரு நபிமொழி ஆகும்.
திருமறையின் விரிவுரைகளாகவும் விளக்கவுரைகளாகவும் அரபியராலும், அரபியரல்லாதாராலும் அரபு மொழியில் ஆயிரக்கணக்கான நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றைப் போன்று நபி மொழிகளையும், முகம்மது நபியின் பழக்க வழக்கங்களையும் (சுன்னா), வரலாற்றையும் (சீறா) ஆராயும் நூல்கள் பல அரபி மொழியில் தோன்றியுள்ளன.