உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/757

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரபு இலக்கியம்‌

721

அரபுக்‌ கதைகள்‌

கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் அரபு இலக்கியம் மறுமலர்ச்சி அடையத் தொடங்கியது. பரந்து விரிந்த அரபுப் பேரரசின் அழிவில் சிறுசிறு நாடுகள் தோன்றின. எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து மறுமலர்ச்சி அடைந்த அரபு இலக்கியம், எகிப்திய இலக்கியம், சிரியா இலக்கியம் எனத் தனித்தனியாகப் பிரிந்து வளரத் தொடங்கியது.

இக்கால எகிப்தியக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் அல் பாரூதீ ஆவார். ஆயின் அகமது சாங்கி (1868–1932) ‘கவிஞர்களின் இளவரசர்’ எனப் பாராட்டப் பெறுகின்றார். எகிப்தின் நாட்டுப் பாடல் பெருந்திரட்டு ஒன்று 1959–இல் வெளியாயிற்று. இந்நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியில் இதழ்கள் பெரும் பங்காற்றுகின்றன.

சிரியாக் கவிஞர்களில் இரசசு, முவாச்சாரு போன்ற நாட்டுப் பாடல் வடிவங்களைப் பயன்படுத்தி வெற்றி கண்ட கலீல் முத்ரான் குறிக்கத் தக்கவர், 1932–இல் நிறுவப்பட்ட ‘அப்பல்லோ’ என்னும் இதழ் சிரியா அரபு இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றியது. சுலைமான் அல் புசுதானியின் ‘இலியாத்’ மொழிபெயர்ப்பே (1904) இக்காலத்தைச் சேர்ந்த சிறந்த இலக்கிய முயற்சியாகும்.

ஈராக்கியக் கவிஞர்களில் அல் சகாவியும், அல் ருசாபியும் சிறப்பிடம் பெறுகின்றனர். முன்னர்க் குறித்த அப்பல்லோவின் இலக்கியத் தாக்குதலால் ‘அல் சிஅர் அல் கூர்’ என்னும் புதுக்கவிதை பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. இது ‘அல்சி அர் அல் முர்சல்’ என்னும் வசன கவிதையிலிருந்து வேறுபட்டதாகும்.

சூடானியக் கவிஞர் கர்துல்லா, தென் அராபியக் கவிஞர் யக்யா உமர், ‘அல் சத்’ என்னும் வசன கவிதை நாடகம் படைத்த தூனிசியக் கவிஞர் மகமூது அல் மசு அதி ஆகியோர் இக்காலத்தைச் சேர்ந்த சிறந்த இலக்கியப் படைப்பாளிகள், அமெரிக்காவில் வாழ்ந்த கலீல் சீப்ரான் (1883–1931) தம்முடைய தத்துவக் கருத்துகள் செறிந்த வசன கவிதைகளால் உலகப் புகழ் பெற்றுத் திகழும் பெருங் கவிஞராவர்.

மகமூத் சாவின் அமைச்சராகிய அப்துல் அசீசு ஆசப் கான் இந்திய அரபு இலக்கியத்தின் முன்னோடி ஆவார். அப்துல் அக் தக்லவி, சா வலியுல்லாக், அப்துல் அசீசு, பக்ருல் உலூம் ஆகியோர் இந்திய நாட்டு அரபு இலக்கியப் படைப்பாளிகள். வடமொழியிலுள்ள பண்டை நூல்கள் பலவும் பகவத் கீதையும் அரபுமொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன. பஞ்ச தந்திரக் கதைகள், புத்த சாதகக் கதைகள் போல்வனவும் அரபுமொழியில் பெயர்க்கப்பட்டுள்ளன. யூகப் கோக்கன் என்பார் திருக்குறளை அரபுமொழியில் பெயர்த்துள்ளார்.

தமிழ்நாட்டு அரபு இலக்கியம்: சதக்கத்துல்லா அப்பா தமிழ்நாட்டில் தோன்றிய சிறந்த அரபுக் கவிஞராவார். இவர் எழுதியுள்ள ‘வித்ரியா’வின் பின்னிணைப்பாகிய 2982 செய்யுள்கள் அடங்கிய நூலும், ‘குத்பிய்யா’ (முகியித்தீன் அப்துல் காதீர் செய்லானியைப் புகழும் நூல்), ‘கசிதா இராயியா பி கஞ்ச சவாரியா’ (நாகூர் சாகுல் அமீதின் புகழ்கூறும் நெடுங்கவிதை) என்னும் நூல்களும் குறிக்கத்தக்கவை. முகம்மது நபியைப் புகழ்ந்து கீழக்கரை தைக்கா சாகிபு ஒலியுல்லாவும், காயல் பட்டினம் தைக்கா சாகிபு ஒலியுல்லாவும் எழுதியுள்ள புகழ்ப்பாக்கள் சொற்சிறப்பும் பொருட்சிறப்பும் உடையவை. உமர் ஒலியுல்லாவின் ‘இலாசி கம்து பக்கீனி’ என்னும் இசைப் பெற்றுத் பாடல் அரபு இலக்கியத்தில் சிறப்பிடம் திகழ்கிறது. குணங்குடி மசுதான் சாகிபு அரபுக் கவிதை நூல் செய்துள்ளார்.

முகம்மது நபிபையும் இசுலாமியச் சான்றோர்களையும் புகழும் வகையில் பற்பல ‘மௌலித்’ (புகழ் மாலைகள்) நூல்கள் தமிழ்நாட்டு அறிஞர்களால் இயற்றப்பட்டுள்ளன. கீழக்கரை சையிது முகம்மது ஆலிம் எழுதிய ‘பஞ்சரத்தின மௌலிது’ என்னும் நூல் இவ்வகையில் சிறந்ததாகும். முகம்மது நபி, கலீபா அலி, பாத்திமா, அசன், உசேன் ஆகியோரின் பெருமை கூறும் இந்நூல் தமிழ்நாட்டு முசுலிம்களிடையே மிகவும் புகழ்பெற்றதாகும்.

தமிழிலுள்ள நீதி இலக்கியங்களுள் பல தமிழ் நாட்டு அறிஞர்களால் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. காயல்பட்டினம் சலாகுத்தீன் மொழி பெயர்ப்புத் துறையில் புகழ்பெற்ற கவிஞராவார். செ.அ.

அரபுக் கதைகள் என்பது பெரும்பாலும் காமச்சுவையும் பிறசுவைகளும் மிகுந்து, கற்பனை நயம் செறித்த பல கதைகளின் தொகுப்பாரும். இந்த நூல் அல்பு லைலா வலைலா அதாவது ஆயிரத்தொரு இரவுகள் என்றும் வழங்கப்பெறும். மேற்காசியாவிலுள்ள அரபு நாடுகளில் உருவாகிய இக்கதைகள் அலாவுதீன், அலிபாபா, சிந்துபாத் போன்ற கதைகளைப் போலவே, மேல்நாட்டு இலக்கிய உலகில் நன்கு அறிமுகமானவைகளாகத் திகழ்ந்தன. இக்கதைகள் உருவாகிய காலமும், இவற்றை உருவாக்கிய ஆசிரியரும் அறியக்கூடவில்லை. இக்கதைகளில் இடம் பெறும் முதன்மையான கதை மாந்தர்களின் பெயர்கள் ஈரானியச் சார்பினவாக இருந்தபோதிலும், கதைகளின் அடிப்படை இந்தியத் தன்மை வாய்ந்ததாக உள்ளது. பெயர்களுன் பெரும்பாலன அரபுப் பெயர்களாக அமைந்துள்ளன. கதை நிகழுமிடங்கள் இந்தியா, இவின், இவிக்கு, எகிப்து, கிரீசு ஆகிய நாடுகளைச் சார்ந்தனவாக உள்ளன. இது, ஆயிரம் கதை-