உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/779

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரிசிங்‌ நால்வா

743

அரிசில்கிழார்

இந்நூல் முதலாழ்வார்கள் முதல் இராமானுசர் வரையிலுள்ள வைணவச் சான்றோர்களின் வரலாறுகளையே கூறுகிறது. இராமானுசருக்குப் பின்னர் வைணவ ஆசாரிய பரம்பரை வடகலை தென்கலை எனப் பிரிவுபட்டுச் செல்வது நோக்கி இந்நூலாசிரியர் இராமானுசர் வரலாற்றோடு இதனை, நிறுத்திவிட்டார் என்று இந்நூலை 1904–ஆம் ஆண்டில் பதிப்பித்த சே. முத்துக் கிருட்டிண நாயுடு கூறுகின்றார். அதனால் இந்த நூல் வடகலை தென்கலையாகிய இருகலையினர்க்கும் உரியதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நூலுக்குச் சே. முத்துக்கிருட்டிண நாயுடு எழுதிய பொழிப்புரையும், கா.ர. கோவிந்த ராச முதலியார் எழுதிய உரையும் உள்ளன.

அரிசிங் நால்வா பஞ்சாப் பகுதியின் பேரரசர் இரஞ்சித்சிங் என்ற சீக்கிய அரசரின் புகழ்பெற்ற படைத்தலைவர். கி.பி. 1834–ஆம் ஆண்டு மே மாதம் 6–ஆம் நாள் இவர் பெசாவர் கோட்டையைக் கைப்பற்றி

அரிசிங் நால்வா

அதைச் சீக்கியர் தம் கட்டுப்பாட்டின் கீழ்க் கொணர்ந்தார். அரிசிங் நால்வா (Hari Singh Nalwa) மாபெரும் வீரர்; நெஞ்சுரமும் துணிச்சலும் மிக்கவர்.

அரிசித்துப் போர்: கி.பி. 842–க்கும் 877–க்கும் இடையில் இலங்கையில் அரசராயிருந்தவர் இரண்டாம் சேனர் ஆவார். பாண்டியர்களைப் பழிக்குப்பழி வாங்க முயன்ற இவருடைய வரலாற்றைச் சூளவம்சம் விவரிக்கிறது. இரத்தினவசதா என்னுமிடத்தில் வைக்கப் பெற்றிருந்த புத்தர் பெருமானின் தங்க உருவச் சிலையை உடைத்த பாண்டியர்களைப் பழிவாங்க எண்ணிப் பாண்டிய நாட்டின்மீது படையெடுக்க முடிவு செய்த வேளையில், பாண்டிய அரச குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர் ஒருவர் இலங்கைக்கு ஓடிச் சென்று, இரண்டாம் சேனரிடத்தில் தஞ்சம் புகுந்தார். இவ்வரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு இரண்டாம் சேனர் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்தார். வெற்றிபெற வேண்டிப் பல்லவ மன்னர் நிருபதுங்கனுடனும் இவர் உடன்படிக்கை செய்து கொண்டார். இவ்விருவரின் கூட்டுப் படைகள் பாண்டிய நாட்டை வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் தாக்கின. பாண்டிய அரசர் வடபால் படையெடுத்துப் பகைவர்களைச் சந்தித்து அரிசித்து (Arichit) என்னுமிடத்தில் நடந்த போரில் தோல்வி அடைந்தார்.

அரிசில்கிழார்: சங்கப் புலவர்களுள் ஒருவர். இவர்தம் இயற்பெயர் அறியக் கூடவில்லை. கிழார் என்னும் பெயரை நோக்க இவர் வேளாண் மரபினர் என்பது புலனாகிறது. இப்பெயரிலுள்ள அரிசில் என்பது பற்றிப் பல கருத்துகள் கூறப்பட்டுள்ளன. சோழ நாட்டில் கொள்ளிடத்திற்கு வடபாலுள்ள அரியலூர் என்பதன் மரூஉவெனச் சிலர் கருதுகின்றனர். மைசூர்ப் பகுதியிலுள்ள அரிசிற்கரை என்னும் ஊரே அரிசில் எனக் குறிப்பிடப்பட்டது என்று கூறுவாருமுளர். சோழ நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் காவிரியின் கிளை ஆறாகச் செல்லும் ஓராற்றின் பெயர் அரிசில் என்பதாகும். அவ்வாற்றின் கரையில் இருந்த ஓரூரின் பெயர் அரிசில் என்பதும் அவ்வகையில் இப்புலவர் அரிசில் கிழார் எனப்பட்டார் என்பதும் கூறப்படுகின்றன.

பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து இவரால் பாடப்பட்டதாகும். இப்பத்தில் இவர் தகடூரெறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையினைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இப்பத்தினைப் பாடியதற்காகப் பெருஞ்சேரலிரும்பொறை தானும் தன் மனைவியும் அரண்மனையினின்றும் புறம்போந்து, தன்பால் உள்ளனவெல்லாம் கொள்ளுங்கள் என்று கூறி, ஒன்பது நூறாயிரம் பொற்காசுகளையும் அரசு கட்டிலையும் வழங்கினான். புலவர் வேண்டுகோளை ஏற்றுப் பெருஞ்சேரலிரும்பொறை மீண்டும் தன் ஆட்சியைத் தொடர, இவர் அம்மன்னன்பால் அமைச்சராக விளங்கினார்.

ஏழு பாடல்கள் (146, 230, 281, 285, 300, 304, 342) புறநானூற்றிலும், ஒரு பாடல் (193) குறுந்தொகையிலும் இவர்பெயரில் அமைந்துள்ளன. பேகனால் துறக்கப்பட்ட அவன் மனைவி கண்ணகியை அவன்பால் கூட்டுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கவிதைபாடி வேண்டிக்கொண்ட புலவர்களுள் இவரும் ஒருவர். பிரிந்து வருந்தும் கண்ணகி மகிழ்ந்து மலர் மாலை சூடுமாறு, பேகன் தேர் ஏறி அவள்பால் செல்வதுவே தாம் அவனிடம் பெற விரும்பும் பரிசில் என்று இவர் புறநானூற்றில் பாடியுள்ளார். இவர் அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியின் மீது கையறு நிலைச் செய்யுள் இயற்றியுள்ளார். இவருடைய குறுந்தொகைப் பாடல் முல்லைத் திணையில் தலைவி கூற்றாக அமைந்துள்ளது. கபிலர், பரணர், பெருங்குன்றூர்க்கிழார், மருதன் இளநாகனார், ஒளவையார் போன்றோர் இவர் காலத்தில் வாழ்ந்த புலவராவர். தகடூர் யாத்திரை என்னும் நூலில் இவருடைய