உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/791

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரியானா

755

அரியானா

இந்தியாவின் இராணுவத் தளவாடங்களில் 60 விழுக்காடு இம்மாநிலத்தைச் சார்ந்த இயமுனா நகரிலும். இராணுவத்தினர் பயன்படுத்தும் உரோமக் கம்பளங்களுள் 75 விழுக்காடு பானிப்பட்டிலும் உருவாக்கப்படுகின்றன. பானிப்பட்டு நகரினை ‘இந்தியாவின் நெசவாளர் நகர்’ என்பர். சண்டிகருக்கருகில் பஞ்சகுலாவில், “பாரத எலக்டிரானிக்சு நிறுவனம்” பெரிய தொழிற்சாலையொன்றை அண்மையில் கட்டி முடித்துள்ளது.

இம்மாநிலத்திலுள்ள 309 பெரியதும் நடுத்தரமானதுமான தொழிற்சாலைகளில் ரூ. 1150 கோடி மதிப்புள்ள பொருள்கள் உற்பத்தியாகின்றன. தொழிற்சாலைகள் இடங்களிலேயே குவிந்து விடாமல் அவற்றை இப்போது நாட்டுப்புறங்களில் அமைத்துப் பரவலாக்கும் பணியில் இம்மாநிலம் முற்பட்டுள்ளது. தனியார் துறையினரும் தொழிற்சாலைகளை அமைக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

அரியானாவில் கைத்தறி நெசவாலைகள் சீரிய நிலையிலுள்ளன. உற்பத்தியாகும் ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தொழிற் பயிற்சி நிலையங்கள் நிலைநாட்டப்பெற்று மாணவர்க்குத் தொழிற் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அரியானா மாநிலம் அமைக்கப்பட்ட நாளில் இது உணவுப்பொருள் விளைச்சலில் பற்றாக்குறை மாநிலமாக இருந்தது. ஆனால் இன்று தேவைக்கு மிகுதியாக விளைவிக்கும் மாநிலமாகித் தலைநிமிர்ந்து நிற்கிறது. மத்திய அரசின் உணவுப் பொருள் சேமிப்பிற்குச் கணிசமான அளவு பொருள்களைக் கொடுக்கும் இரண்டு மாநிலங்களில் அரியானாவும் ஒன்று. 1966–இல் 25.92 இலட்ச டன் விளைந்த உணவுப்பொருள்கள் 1983–84-இல் 75.25 டன்னாக உயர்ந்துள்ளன. வீரீய விதைகளைப் பயன்படுத்திக் கோதுமை, சாகுபடியாகும் நிலத்தில் 90 விழுக்காடும், நெல், பயிரிடப்படும் நிலத்தில் 85 விழுக்காடும் பயிராகின்றன. அறிவியல் முறைப்படி புதுமைப்படுத்தப்பட்டுள்ள செய்முறைகளை வேளாண்மையிலும் பயன்படுத்தி அரியானா சிறப்பிடம் பெறுகிறது. செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதும் மிகுதியாக உயர்ந்துள்ளது. இழுவை உந்துகள் 4800லிருந்து 62,892 வரை உயர்ந்துள்ளன. அதேபோல் அரியானா மக்கள் புதிய முறைகளைப் பயன்படுத்தி விதைத்தல், அறுத்தல், தாளடித்தல் போன்ற பணிகளைச் செய்தும் வழி காட்டுகிறார்கள்.

இசாரில் இருக்கும் வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆய்வுப்பணிகளில் முதலிடம் பெற்று விளங்குகிறது. அரியானா இந்தியாவிலேயே முதன்முதலாகப் பயிர்க் காப்பீடு முறையை உருவாக்கியுள்ளது.

இரும்புத் தாது, சுண்ணாம்புக்கல், சீனக்களிமண், பளிங்குக்கல் போன்றவை அரியானாவின் கனிப் பொருள்களாம்.

அரியானாவின் வரலாறு வேத காலந்தொட்டு வருவதாகும். பரத மரபினர் இப்பகுதியை ஆண்டதாகப் பண்டைய வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. பரத மரபினர் ஆண்டமையால்தான் நம் நாட்டிற்கும் பாரதம் என்று பெயர் வந்தது. மகாபாரதத்தில் அரியானாப் பகுதி சீரிய இடத்தைப் பெற்றுள்ளது. பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நடந்த பாரதப்போர் இங்குள்ள குருச்சேத்திரத்தில் நடைபெற்றது. குருச்சேத்திரத்தைத் தருமச் சேத்திரம் என்று பகவத்கீதை பேசுகிறது. இன்று பாரதப் போர் நடைபெற்றதாகக் கருதப்படும் இடத்தில் காஞ்சி காமகோடிப்பீடச் செயேந்திர சரசுவதி சங்கராசாரியார் அவர்கள் நினைவுச் சின்னம் ஒன்றை அமைந்துள்ளார்கள். இந்நினைவுச் சின்னம், வீடுமர் முன்படுக்கையில் படுத்திருந்தபோது, அர்ச்சுனனின் அம்பினால் தோண்டப்பட்டதாகக் கருதப்படும் வீடுமகுண்டம் என்னும் நீர்ச்சுனைக்கு அருகில் உள்ளது. அர்சவருத்தனர் அரசாண்ட தானேசுவரம் குருச்சேத்திரத்திற்கு அருகில்தான் உள்ளது.

முசுலிம் அரசர்கள் ஆண்ட காலத்திலும் இப்பகுதி சிறப்பான இடத்தைப் பெற்றிருந்தது. பானிப்பட்டு என்னுமிடத்தில் நடைபெற்ற மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போர்கள் இம்மாநிலத்துள்ள பானிப்பட்டு என்னுமிடத்தில் நடந்ததாக வரலாறு கூறும். இன்று பானிப்பட்டு சிறந்த தொழிற்சாலை நகரமாக உருவாகியுள்ளது.

கி.பி. 1857–ஆம் ஆண்டில் ஏற்பட்ட முதல் சுதந்திரப் போரிலும் இப்பகுதி மக்கள் பெரும்பங்காற்றினர். ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்த சசார் (Jhajjar), பகதூர்கர் நவாபுகளும், வல்லபகர் (Vallabhgarh) அரசரும், இரிவாரியைச் (Riwari) சார்ந்த இராவ் துலாராம் என்பாரும் இப்பகுதியைச் சேர்ந்தவர்களே. போருக்குப் பின்னர் இவர்களுடைய பகுதிகளை ஆங்கில அரசே எடுத்துக்கொண்டு சிலவற்றைப் பாட்டியாலா, நாபா, சிண்டு அரசர்களின் ஆளுகைக்கு விட்டது. பின்னர் அரியானா, பஞ்சாபு மாநிலத்தின் பகுதியாயிற்று.

பஞ்சாபுடன் இணைந்திருந்தபோது இப்பகுதி புறக்கணிக்கப்பட்டது. நாடு பிரிவினையின்போது பாகிசுதானின் மேற்கு பஞ்சாபு மாநிலத்திலிருந்து ஏதுமிலிகளாக ஓடி வந்தவர்கள் அரியானாப் பகுதியில் குடியமர்ந்து இதன் வளர்ச்சிக்குப் பாடுபட்டனர். 1966–ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் பஞ்சாபுப் புனரமைப்புச் சட்டத்தின்படி இந்தி மொழி பேசும் பகுதி-