அழைப்பாணை
899
அழைப்பாணை
வழக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தில் இருக்கத் தவறினால் நீதிமன்றம், பிரதிவாதியில்லாமல் வாதியை மட்டும் விசாரித்து அவருடைய வாக்குமூலத்தின் மீது வாதிக்குச் சார்பான தீர்ப்பு வழங்கலாம்.
அழைப்பாணை சாதாரணமாய்ப் பிரதிவாதிக்குச் சார்வு செய்யப்படவேண்டும். பிரதிவாதியில்லாதபோது அவருடைய முகவரிடம் சார்பு செய்தால் போதுமானது ஆகும்.
அழைப்பாணை பற்றிய செய்திகள் 1973–ஆம் ஆண்டு குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் ஆறாம் பகுதியில் 61 முதல் 69 வரையில் உள்ள பிரிவுகளில் கூறப்பட்டுள்ளன.
அழைப்பாணையின் வடிவம்: குற்ற விசாரணை முறைச் சட்டத்தின்படி ஒரு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் ஒவ்வோர் அழைப்பாணையும் எழுத்து வடிவினதாக, இரட்டைப் படிகளில், அந்த நீதிமன்றத்தில் தலைமை வகிக்கும் அலுவலராலோ உயர் நீதிமன்றம் அவ்வப்போது விதி மூலமாக உத்திரவிடலாகும் வேறு அலுவலராலோ கையொப்பமிடப்பட்டு, அந்நீதிமன்றத்தில் முத்திரையைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
அழைப்பாணை சார்வு செய்தல்: ஒவ்வோர் அழைப்பாணையும் ஒரு காவல் அலுவலரால் அல்லது இதன்பொருட்டு மாநில அரசு இயற்றப்படும் விதிகளுக்குட்பட்டு அவ்வாணையைப் பிறப்பிக்கும் நீதிமன்றத்தின் ஓர் அலுவவரால் அல்லது வேறு பொது ஊழியரால் சார்வு செய்யப்படுதல் வேண்டும்.
அழைப்பாணையின்படி கட்டளையிடப்பட்டவருக்குக் கூடுமானவரை நேர்முகமாகவே சார்வு செய்யப்பட வேண்டும்.
அழைப்பாணை சார்வு செய்யும் அலுவலர் வேண்டிக் கொண்டால், படியின் பின்பக்கத்தில் அதைப் பெற்றுக் கொண்டதற்காகக் கையொப்பமிடுதல் வேண்டும்.
வழக்கு நிறுவப்பட்ட நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குள் பிரதிவாதி வசிப்பவரானால் அவரிடமோ அவருடைய முகவர் அழைப்பாணை ஏற்றுக் கொள்ளும் அதிகாரம் பெற்றிருந்தால் அவரிடமோ அழைப்பாணையைச் சார்வு செய்யலாம். அதற்கென்று அமர்த்தப்பட்ட அலுவலரோ, அவருடைய துணையாளோ அழைப்பாணையைச் சார்வு செய்ய வேண்டும்.
பிரதிவாதி இந்தியாவில் எப்பகுதியில் இருந்தாலும் அல்லது வழக்கு நிறுவப்பட்ட நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள்ளிருந்தாலும் அவருக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு அதற்கென்றுள்ள அலுவலரை நீதிமன்றம், அவ்வழைப்பாணையை அனுப்பும்படி கோரும். அதன்படி அழைப்பாணை சார்வு செய்யப்படலாம், அல்லது பதிவு அஞ்சல் வாயிலாகவும் அழைப்பாணையை அனுப்பும்படி ஆணையிடலாம். ஒப்புகை பிரதிவாதியினால் கையெழுத்திடப் பெற்றுத் திரும்ப வருமானால், மேற்படி ஒப்புகை, அழைப்பாணை சார்வு செய்யப்பட்டமைக்குப் போதிய சான்றாகும். அழைப்பாணையில் நீதிபதியோ அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரியோ கையெழுத்திட வேண்டும். அதனோடு அதில் நீதிமன்றத்தின் முத்திரை (Seal)யும் பதிக்கப்பட்டிருக்க வேண்டும். மேற்படி அழைப்பாணை பிரதிவாதிக்கு நேரடியாகவும் சார்வு செய்யப்படலாம் (ஆ. 5. வி. 10).
ஒன்றுக்கு மேற்பட்ட பல பிரதிவாதிகள் இருப்பின் ஒவ்வொருவருக்கும் அழைப்பாணை சார்வு செய்யப்படல் வேண்டும்.
கூட்டு நிறுவனங்கள் அல்லது கழகங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பாணைகள், அச்செயலகங்களின் செயலாளர், வட்டார மேலாளர் அல்லது வேறு முதன்மை அலுவலர் ஆகியோருக்கு அனுப்புவதன் மூலமாகவோ, இந்தியாவில் உள்ள அக்கூட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலருக்கு முகவரியிட்டுப் பதிவு அஞ்சல் வாயிலாக அனுப்பப்படும் கடிதத்தின் மூலமாகவோ சார்வு செய்யப்படலாம். அவ்வாறு கடிதம் அனுப்புவதாயிருந்தால், அக்கடிதம் சாதாரண அஞ்சல் முறையில் எப்போது போய்ச்சேருமோ அப்போது சார்வு செய்யப்பட்டதாகக் கொள்ளுதல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட விதிப்படி, ஒரு கப்பலின் தலைவன், அந்தக் கப்பலின் சொந்தக்காரர் சார்பில் அழைப்பாணை பெற்றால் அது சரியான சார்வாகும்.
பிரதிவாதி அழைப்பாணையைப் பெற்றுக் கொள்ளாதபடி ஏமாற்றுவாரானால், நீதிமன்றம் அழைப்பாணையைச் சார்வு செய்யக் கீழ்க்காணும் முறையைக் கையாளலாம்.
பிரதிவாதிக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையின் நகலை நீதிமன்றத்தில் பெரும்பாலானவர் பார்வை படும் இடத்தில் ஒட்டவும், அதனோடு அவர் இறுதியாக வாழ்ந்ததாகக் கருதப்படும் இடத்திலோ அவர் தொழில் புரிந்த இடத்திலோ அவர் வேலை செய்த இடத்திலோ அழைப்பாணையின் நகலை எளிதாகக் கண்ணுக்குப் புலப்படும் இடத்தில் ஒட்டவும் உத்தர விடவாம். அல்லது வேறுவகையில் அழைப்பாணை சார்வு செய்யக்கூடுமானால், அந்த வகையிலும் சார்வு செய்ய உத்தரவிடலாம். இவ்வாறு சார்வு செய்யப்பட்ட அழைப்பாணையை நேரடியாகச் சார்வு செய்யப்பட்டதாக நீதிமன்றம் கருதும்.