உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 1.pdf/936

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அள்ளூர் நன்முல்லையார்

900

அளபெடை

பிரதிவாதி இருக்குமிடம் சொந்த மாநிலத்திலோ வேறு மாநிலத்திலோவென்றால் அவர் எந்த நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்குள் இருக்கிறாரோ அந்த நீதிமன்றம் மூலமாகவோ பதிவுத் தபால் மூலமாகவோ அவருக்கு அவ்வழைப்பாணையை அனுப்பலாம். ஆனால் உயர்நீதிமன்றத்தின் மூலமாக அவருக்கு அழைப்பாணை அனுப்பப்படக்கூடாது.

சென்னை, பம்பாய், கல்கத்தா முதலிய மாநிலத் தலைநகரங்களில் பிரதிவாதி இருப்பாரானால், மேற்படி அழைப்பாணை அந்தத் தலைநகரங்களில் உள்ள சிறு வழக்கு நீதிமன்றம் (Small Cause Court) மூலமாகச் சார்வு செய்யப்பட வேண்டும்.

மேற்குறிப்பிட்ட நீதிமன்றங்கள், அழைப்பாணையைச் சார்வு செய்யக் கோரிய நீதிமன்றத்திற்கு அதைத் திரும்ப அனுப்ப வேண்டும்.

சிறையில் இருக்கும் பிரதிவாதிக்கு அழைப்பாணை சிறை அதிகாரி மூலமாக அனுப்பப்படும். அரசு அலுவலர்களுக்கு (இராணுவம், கப்பற்படை, விமானப்படை அதிகாரிகள் நீங்கலாக) அவருடைய தலைமை அலுவலர் மூலமாகச் சார்வு செய்யப்பட வேண்டும்.

அள்ளூர் நன்முல்லையார் சங்க காலப் புலவர்களுள் ஒருவர். நன்முல்லை என்பது இவரது இயற்பெயராகும். இவர் பெண்பாற் புலவர் என்று கருதப்படுகிறார். அவ்வாறு கருதாதவர்களும் உள்ளனர். அள்ளூர் இவருடைய சொந்த ஊராக இருத்தல் வேண்டும். இவ்வூர் பாண்டிய நாட்டில் மருத நிலத்தின்கண் அமைந்தது என்று டாக்டர் உ.வே. சாமிநாதையர் குறிப்பிட்டுள்ளார். சிவகங்கை வட்டத்தில் நாட்டரசன் கோட்டை அருகில் உள்ள அள்ளூரே இவ்வூர் என்றும், தஞ்சை மாவட்டத்திலுள்ள இப்போதைய திருவாலங்காடு என்னுமூரே இவ்வூர் என்றும் கூறுகின்றனர். இப்புலவர் அள்ளூரினைத் தலைவிக்கு உவமையாக்கிப் ‘பிண்டநெல்லின் அள்ளூரன்ன எம் ஒண்டொடி’ என்று (அகம். 46) குறிப்பிட்டுள்ளார். இவ்வூர் செழியனுக்கு உரியது என்பதனை ‘ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியம் பிண்டதெல்லின் அள்ளூர்’ என்று அப்பாடலில் பாடியுள்ளார். குறுந்தொகையில் ஒன்பதும் (32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237), அகநானூற்றில் ஒன்றும் (46), புறநானூற்றில் ஒன்றும் (306) ஆகப் பதினொரு பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. அகம் புறம் ஆகிய இரு திணைகளையும் பாடியுள்ள புலவர்களுள் இவர் ஒருவராவார். இவர்தம் அகப்பாடல்கள் குறிஞ்சி பாலை மருதம் ஆகிய திணைகளில் அமைந்துள்ளன. காதலரைப் பிரிக்கும் வைகறையினை வாளுக்கு உவமைப்படுத்தித் ‘தோள் தோய் காதலர்ப் பிரிக்கும், வாள்போல் வைகறை’ என்று கூறியிருப்பது (குறு. 157) நயமிக்கதாக உள்ளது.

அளகைச் சம்பந்தர் கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்; துறவியாக விளங்கியவர்; அளகை என்ற ஊரில் தோன்றியவர். சைவ வணிக மரபில் தோன்றிய இவர் தக்க பருவத்தில் கல்வி பயின்று, இராமநாதபுர மாவட்டக் குன்றக்குடியை அடுத்துள்ள துழாவூர்ச் சைவத் திருமடத்தின் தலைவராக விளங்கிய நிரம்ப அழகிய தேசிகரிடம் சமய தீக்கை முதலியாவும் சந்நியாசமும் பெற்றார். இவர் நிரம்ப அழகிய தேசிகருக்குக் குருவாக விளங்கிய கமலை ஞானப் பிரகாசர்பால் சென்று அவரிடத்துச் சீடராக விளங்கினார். இவர் தம் குருவொடு திருவாரூரில் இருந்த போது அவ்வூர்ப் பெருமக்களின் விருப்பத்திற்கிசைந்து திருவாரூர்ப் புராணத்தினைப் பாடினார். இப்புராணத்திற்கு முதல்நூல் வடமொழிக் காந்த புராணத்திலுள்ள நாகர காண்டம் என்னும் பகுதியாகும். இந்நூல் கி.பி. 1592–ஆம் ஆண்டில் பங்குனி உத்தர நாளன்று, திருவாரூர் ஆலயத்திலுள்ள தேவாசிரிய மண்டபத்தில் அரங்கேற்றப் பெற்றது. இவரியற்றிய திருவாரூர்ப் புராணம் 111 சருக்கங்களும் 2929 பாடல்களும் கொண்டது.

அளபெடை என்பது யாதானுமொரு காரணம் பற்றி எழுத்து, தனக்குரிய மாத்திரையின் நீண்டு ஒலிப்பதனைக் குறிக்கும் பெயராகும். தமிழ் உயிரெழுத்துகளுல் குறிலின் அளவு ஒரு மாத்திரை; நெடிலின் அளவு இரண்டு மாத்திரை; மெய்யெழுத்தின் அளவு அரை மாத்திரை. தொல்காப்பியர் கருத்துப்படி இரண்டு மாத்திரைக்குமேல் ஒலிக்கும் எழுத்து தமிழில் இல்லை, “மூவள பிசைத்தல் ஓரெழுத்தின்றே” என்பது தொல்காப்பியம். இரண்டு மாத்திரை பெற்ற எழுத்து அம்மாத்திரையிலும் மிகுதியாக ஒலித்தலை விரும்புவாராயின், தாம் கருதிய மாத்திரையைத் தருவதற்குரிய எழுத்துகளைக் கூட்டி, அம்மாத்திரைகளை எழுப்பிக் கொள்ள வேண்டும் இவ்வாறு விரும்பிய மாத்திரை அளவுக்கேற்ப எழுத்துகளை நெட்டெழுத்தோடு சேர்த்து ஒலியை எழுப்பிக் கொள்வது அளபெடையாகும். இது தொல்காப்பியர் உயிரளபெடைக்கு வகுக்கும் இலக்கணம்.

‘குன்றிய ஓசையுடைய சொல்லினிடத்தே நெட்டெழுத்தின் பின்னர் அவற்றின் இனமொத்த குற்றெழுத்துகள் அவ்வோசையை நிறைவிக்கும்’ எனப் பொருள்படும் நூற்பாவால் தொல்காப்பியர் அளபெடை இலக்கணத்தை உணர்த்தியுள்ளார். இதனால் அளபெடையில் நெட்டெழுத்திற்குரிய இரண்டு மாத்தி-