ஆகுபெயர்
210
ஆகூரா மசுதா
ஆகுபெயர் எனக்கூறுவாரும் உளர். அன்மொழித்தொகை வேறு ஆகுபெயர் வேறு. தொகைமொழி நோக்கில் அன்மொழித்தொகை என்றும், இயற்கைப் பெயர் ஆகுபெயர் என்னும் வகை நோக்கில் ஆகுபெயரென்றும் கூறலாம் என அவர் அமைதி கூறுவார். அறிவியல் நோக்கில் அது தவறாகும் (காண்க–அன்மொழித்தொகை).
ஆகுபெயர்த் தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணி வந்துளதா ஒப்பில் வழியாற் பிறிதுபொருள் சுட்டி வந்துளதா என்பதை அப்பெயரின் வேற்றுமை நிலை நோக்கி அறிந்துகொள்ள வேண்டுமென்பார் தொல்காப்பியர் (வே.ம. 33). அம்முறைப்படி இரண்டாம் வேற்றுமையும் ஆறாம் வேற்றுமையும் தம்மொடு சிவணியும், ஏழாம் வேற்றுமை ஒப்பில் வழியாற் பிறிது பொருள் சுட்டியும், மூன்றாம் வேற்றுமை இருநிலைமையாயும் வரும். மஞ்சள் உடுத்தாள் என்பது மஞ்சள் தோய்த்த ஆடையை உடுத்தாள் எனவும், கடுத்தின்றான் என்பது கடுவினது காயைத் தின்றான் எனவும் தம்பொருளொடு ஒன்றி வந்தன. குழிப்பாடி உடுத்தான் என்பது குழிப்பாடி என்னும் ஊரில் நெய்த ஆடை என ஒப்பில் வழியாற் பொருளைச் சுட்டி வந்தது. பொன் அணிந்தான் என்பது பொன்னாலாகிய அணியை உணர்த்தித் தம்மொடு சிவணி வந்தது. வாள்வெட்டு ஆறியது என்பது வாளால் வெட்டப்பட்ட புண்ணை உணர்த்தி ஒப்பில் வழியாற் பொருளைச் சுட்டி வந்தது. அளவுப் பெயர்பற்றி வரும் ஆகுபெயர்கள் இஃதொரு கழஞ்சு எனக் கருவியையும் நிறுக்கப்பட்ட பொருளையும் இடத்திற்கேற்ப, உணர்த்திவரும். இது ஒரு மா என்பது நிலத்தை உணர்த்தி நின்றது. இது ஒரு கோல் என்பது கருவியையும் அளக்கப்பட்ட பொருளையும் உணர்த்தும். ஒன்று இரண்டு முதலிய எண்ணலளைவைப்பெயர் எண்ணப்படும் பொருள் பற்றியே வருதலின் இயற்கைப் பெயரெனக் கருதுவாரும் உளர். இலக்கண நெறிப்படி அவற்றை ஆகுபெயராகக் கொள்ளுதலே நேர்மையாகும்.
பாவை போல்வாளைப் பாவை என்பது உவம ஆகுபெயர் என்பர். நரியின் பண்புடையானை நரி என்பதும் அதன்பாற்படும். வழக்கின்கண் சிறப்பாகப் பயின்றறிந்தமை கருதிச் சிலம்பு வந்தான், சிந்தாமணி வந்தான் என்பதும் இடையறாது கொண்டிருப்பது பற்றிப் பட்டுருமாலை வந்தான், குடை வந்தான், கண்ணாடி வந்தான் என்பதும், வரிவடிவங்களையும் அடையாளங்களையும் அவ்வப்பொருளாகக் கருதிக் கூறுவதும் ஆகுபெயரேயாம்.
ஒரு பெயர் பொருளான் மயங்கி வருதலை நோக்கி, அம்மயக்கவியல்பினைச் சொல்லதிகாரத்து வேற்றுமை மயங்கியலுள் வைத்துக் கூறியுள்ளார் தொல்காப்பியர். ஆகுபெயரை வடமொழியாளர் கூறும் இலக்கணை வகையாகக் கருதி மயங்கி விளக்கங்கூறுவர் சிலர். ஆகுபெயரிலக்கணத்தையும் அன்மொழித்தொகை இலக்கணத்தையும் அலங்கார நூலிற் கூறவேண்டுமென எண்ணுவோரும் உளர். அலங்காரம் செய்யுள் பற்றியது; ஆகுபெயர் சொல்லைப் பற்றியது. ஆதலின் அவர் கருத்துத் தமிழ் மரபிற்கு முரணாகும். ஆகுபெயர் என்பது தமிழிலக்கணத்திற்கே உரிய சிறப்புக் கூறு என்பார் சிவஞான முனிவர்.
ச.பா.
ஆகூரா மசுதா பாரசீகர்கள் பின்பற்றும் சொரசுடிரிய சமயத்தின் நற்றெய்வமாகும். பாரசீகர்கள் இச்சமயத்தைத் தழுவுவதற்குமுன் இயற்கையில் கண்ட பொருள்களிலெல்லாம் கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தனர். ஏறத்தாழக் கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் சொராசுடர் (Zoroaster) என்ற பெரியார் சொராசுடிரிய சமயத்தை நிலை நாட்டினார். அதிலிருந்து பாரசீகர்கள் இச்சமயத்தைப் பின்பற்றலாயினர், உலகில் காணும் ஒவ்வொரு சமயத்தையும் நிலைநாட்டிய பெரியார்களின் வாழ்க்கை வரலாறு தெளிவாகத் தெரியாததுபோல், சொராசுடரின் வாழ்க்கை வரலாறும் தெளிவாகத் தெரியவில்லை. இம்மதக் கொள்கையின்படி உலகில் நன்மைக்கும் தீமைக்குமிடையே போராட்டம் நடந்து கொண்டேயிருக்கிறது. ‘ஒளி தெய்வம்’, ஞான ஆன்மா என்று சொல்லப்படும் ஆகூரா மசுதா (Ahora Masdaa) என்னும் நன்மைத் தெய்வம், நல்லெண்ணம், நன்னடத்தை, நல்லரசு, நற்சட்டம், அழியாத்தன்மை ஆகியவற்றிற்கு இருப்பிடமாகும். இதற்கு நேர்மாறான குணங்களைக் கொண்ட சாத்தான், ஆகிரிமான். நன்மை தீமைகளுக்கிடையே ஏற்படும் போராட்டம், மனித வாழ்க்கையில் மட்டுமன்றி ஏனைய பொருள்களிலும் காணப்படுகிறது. ஆக்கும் சக்தி அழிக்கும் சக்தியால் தாக்கப்படுகிறது. புயலும் வெள்ளமும் பயிர்களை அழிக்கின்றன, களைகள், பயிர்களைப் பாழாக்குகின்றன. பயனுள்ள எருதுகளை நச்சுப் பாம்புகள் தீண்டிக் கொல்கின்றன. போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் இவ்விரு சக்திகளுள் ஒன்றினை மனிதன் ஏற்க வேண்டும்.
ஆகூரா மசுதாவை ஏற்றுக் கொண்டால் மசுதாவின் குறிக்கோளுக்காகப் பாடுபட வேண்டும். அவை யாவன: இரக்கம் காண்பிக்கத் தேவையில்லை; ஆனால், நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும். கடின உழைப்பு, தன்னலம் கருதாதிருத்தல், பெரியோருக்குக் கீழ்ப்படிதல், அன்புடைமை ஆகிய பல நன்னடத்தைக்குரிய கூறுகளை ஏற்று நடக்க வேண்-