உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்காங்கு

212

ஆங்காங்கு

‘நறுமணத் துறைமுகம்’ என்பது பொருள். பெர்ல் (Pearl) ஆற்றின் கழிமுகத்திற்கு 32 கி.மீ. கிழக்கிலுள்ள ஆங்காங்கு, ஒரு தீவு, இது காண்டன் நகருக்குத் தென்கிழக்கில் 130 கி.மீ. தொலைவிலுள்ளது. இத்தீவின் பரப்பளவு 78.12 ச.கி.மீ. சீனாவின் உள்நாட்டிலிருந்து பிரிந்திருக்கும் இது ஓர் அழகிய இயற்கைத் துறைமுகம், இதன் எதிரில் கவுலூன் (Kowloon) என்னும் தீபகற்பம் உள்ளது. அதல் பரப்பளவு 10.48 ச.கி.மீ. அதனைச் சுற்றியுள்ள 235 தீவுகளும் இதனைச் சார்த்தவையே. எனவே ஆங்காங்குத் தீவு, கவுலூன் தீபகற்பம், அதனைச் சுற்றியுள்ள 235 தீவுகள் ஆகிய அனைத்தையும் தன்னகத்தே கொண்டது. சீனாவின் உள்நாட்டில் இலங்கும் பகுதியை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை 1. வடக்கிலுள்ள புதிய பகுதிகள், 2. அதன் தென்பால் அமைந்துள்ள கவுலூன் தீபகற்பம். கவுலூன் தீபகற்பத்திற்கு நேர் தெற்கில் உள்ள சிறப்பான தீவே ஆங்காங்குத்தீவாகும்.

ஆங்காங்கு 1916 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. அதில் 1046 ச.கி.மீ. நிலப்பகுதி; ஏனையது நீர்ப்பகுதி. மக்கள் தொகை 52,30,000 (1982).

ஆங்காங்குத் தலைநகர் விக்டோரியா

கரடுமுரடான மலைகளையும் வளைந்து நிற்கும் குன்றுகளையும் கொண்டு ஆங்காங்கு விளங்குகிறது. புதிய பகுதியில் உள்ள சில மலைத் தொடர்கள், 910 மீட்டருக்கு மேல் உயரமுள்ளவை. ஆங்காங்கு, தீவின் மலையுச்சியை விக்டோரியா உச்சி என்பர். இதன் உயரம் 554 மீ. மலைப்பாங்கான கடற்கரைகளைக் கொண்ட ஆங்காங்கின் தீவுகளிலும் சீனாவின் உள்நாட்டைச் சார்ந்த ஆங்காங்கின் பகுதியிலும் மீன்பிடிக்கும் சிற்றூர்களைக் கொண்ட பல சிறு துறைமுகங்கள் உள்ளன. பத்து விழுக்காட்டு நிலம் பண்ணைகளுக்கேற்றது. ஆங்காங்கையும் சீனாவையும் சாம்சன் (Shamchun) என்னும் சிற்றாறு பிரிக்கும் எல்லையாயுள்ளது.

ஆங்காங்கு வெப்ப மண்டலத்தைப் போன்ற தட்பவெப்ப நிலையைக் கொண்டது. கோடையில் சூடாகவும் ஈரக்கசிவாகவும் இருக்கும். இங்குப் பொழியும் மழையின் அளவு ஆண்டிற்கு 224 செ.மீ. குளிர்காலம் தண்மையாகவும் வறண்டும் காணப்படும். குடிநீர்ப் பற்றாக்குறையால் ஆங்காங்கு, ஆண்டுதோறும் பலகோடி லிட்டர் தண்ணீரைச் சீனாவிடமிருந்து விலைக்கு வாங்குகிறது.

பன்னாட்டு வாணிகம், செல்வம், சுற்றுலாப் பயணம் போன்றவற்றின் மையமாய் ஆங்காங்கு விளங்குகிறது. மக்கள்தொகையுள் 40 விழுக்காட்டினர் செய்பொருள் நிலையங்களிலும் 40 விழுக்காட்டினிர் பணியாளர்களாக வணிக நிறுவனங்களிலும் ஏனையோர் அரசு ஊழியர்களாக அரசு நிறுவனங்களிலும் வேலை செய்கின்றனர். பண்ணைகளிலும் மீன்பிடிக்கும் தொழிலிலும் 3 விழுக்காட்டிற்கும் குறைந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆங்காங்கு சுங்க வரியற்ற துறைமுகம். அதனால், பல பொருள்களை விலை குறைவாக உற்பத்தி செய்யவும் விற்கவும் இயலும். இங்குள்ள வங்கிகள் வீடுகட்டவும் செய்பொருள் செய்யவும் வாணிகம் செய்யவும் முதலீடு செய்வதுடன், உலகின் ஏனைய பகுதிகளுக்கும் உதவி செய்வதால், இதன் பொருளாதாரம் உயர்ந்த நிலைவிலுள்ளது. ஆண்டுதோறும் இருபது இலட்சம் சுற்றுலாப்பயணிகள் ஆங்காங்கிற்கு வந்து பெருமளவு பொருளைச் செலவழிப்பதால், இதன் பொருளாதாரம் பெருகி வளர்ந்துள்ளது. இக்காலத்தில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் நிறுவப்பெற்றுப் பலவிதமான பொருள்களை உற்பத்தி செய்கிறார்கள். இங்கு உற்பத்தியாகும் பொருள்கள், அமெரிக்க ஐக்கிய நாடு, மேற்குச் செருமனி, இங்கிலாந்து, சப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. உணவுப் பொருள்கள், இயந்திரக் கருவிகள், எஃகு, இரும்பு, ஏனைய மூலப்பொருள்கள் ஆகியவை சப்பான், சீனா, அமெரிக்க ஐக்கிய நாடு, தைவான் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகின்றன.

விக்டோரியாவும் கவுலூனும் ஆங்காங்கின் வாணிகத்திற்கும் தொழிற்சாலைகள், சுற்றுலாப் பயணம் போன்றவற்றிற்கும் மையங்களாம். இவ்விரு