ஆங்கில இலக்கிய வரலாறு
220
ஆங்கில இலக்கிய வரலாறு
வாழ்க்கை முறையை உள்ளபடியே வருணிக்கும் வல்லமை அவருக்கிருந்தது. பைரன் (கி.பி. 1788-1824) புனைவியல் கவிஞராயினும் செவ்வியல் கூறுகளும் கொண்ட கவிதைகளை யாத்தார். மான்பிரெடு கெயின், சுவர்க்கமும் பூவுலகும் முதலிய கவிதைகளில் புனைவியல் கூறுகளும், மரினோ பலியரோ (Marino Faliero), இரண்டு பசுகரி (The Two Foscari) ஆகியவற்றில் செவ்வியல் கூறுகளும் மேலோங்கி நிற்கக் காணலாம். தான்சுவான் (Don Juan) இவரது வெற்றிச் சிகரமாகும். செல்லி (கி.பி. 1792-1822) தம் புரட்சிக் கருத்துகளையும் இலட்சிய நோக்கையும் நீண்ட கவிதைகளிலும் தன்னுணர்ச்சிப் பாக்களிலும் புலப்படுத்தினார். “இசுகைலார்க்கு”, “மேல்காற்று”, “மேகம்” ஆகியவை பற்றிய கவிதைகளில் இசைச் சிறப்பையும் இவர்தம் விஞ்ஞான அறிவையும், விடுதலை பெற்ற புரோமீதியசு (Prometheus Unbound) என்ற நாடகக் கவிதையில், மனிதக் குலம் மேம்பட வேண்டுமென்ற இவர்தம் அவாவையும், செஞ்சி (The Cenci) என்ற துன்பியல் நாடகத்தில் இவர் பெண் குலத்தின்பால் கொண்ட பரிவையும் காணலாம் இவரது ‘கவிதையின் இன்றியமையாமை’ (A Defence of Poetry) என்னும் நூல், கவிதை நடையில் அமைந்த கட்டுரையாகும்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த கீட்சு (கி.பி. 1795-1821) இருபத்தாறு ஆண்டுகளே வாழ்ந்தாராயினும் நிலைத்த புகழுடைய தன்னுணர்ச்சிப் பாக்கள் பலவும் எண்டீமியன் (Endymion) என்ற நீண்ட கவிதையும், இசபெல்லா (Isaballa) என்னும் அழகிய கதைப் பாடலும், முற்றுப்பெறாத ஐபீரியன் (Hyperion) என்னும் மில்டனின் அடியொற்றிய கவிதையும் எழுதி முடித்தார். வறுமையும் காதல் தோல்வியும் உறவினர் இழப்பும் இவரை வாட்டியபோதும், கவிதையின் பால் கொண்டிருந்த மாளாக்காதல் இவரைப் பெரும் புலவர்கள் வரிசைக்கு உயர்த்தியது.
புனைவியல் காலத்தில் வாழ்ந்த உரைநடை ஆசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆசுலிட்டு (Hazlitt), இலாம்பு (Lamb), இலாண்டார் (Landor). திக்வின்சி (De quincey) ஆகிய நால்வராவர். ஆசுலிட்டின் ‘கவிஞர்களுடன் எனது முதல் சந்திப்பு’ (My first Acquaintance with Poets), கோலரிட்சு பற்றிய அவரது மதிப்பீட்டைத் தருகிறது. சேக்சுபியர் நாடகங்களின் கதைமாந்தர்கள் (Characters of Shakes. Peare's Plays) என்னும் நூலில், இன்றைய திறனாய்வாளர்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க பல கருத்துகளைத் தந்துள்ளார். அவர் காலத்தில் வாழ்ந்த புலவர்களின் பெருமை சிறுமைகளைக் காலவுணர்வு (The Spirit of the Age) என்னும் நூலில், காய்தல் உவத்தல் இன்றி வெளிப்படுத்தியுள்ளார். இறுதிக் காலத்தில் நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றை நான்கு பாகங்களில் எழுதினார். இலாம்பின் கட்டுரைகள் பல பொருள் பற்றியவை; மனித இதயத்தை ஊடுருவிப் பார்ப்பவை; உள்ளத்தைத் தொடுபவை. தமக்கென ஒரு விந்தையான நடையை இவர் உருவாக்கிக் கொண்டார், “தென்கடல் இல்ல நினைவுகள்” (Recollections of the South-Sea House), “பழையசீனம்” (Old China), “முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கிறித்து ஆசுபிடல்” (Christ's Hospital Five and Thirty Years Ago), “சுடப்பட்ட பன்றிபற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை” (A Dissertation upon Roast pig) என்பவையெல்லாம் கவித்துவம் நிறைந்த கட்டுரைகள், தம் திறனாய்வுக் கட்டுரைகள் வாயிலாகக் கி.பி. 16,17-ஆம் நூற்றாண்டு நாடக ஆசிரியர்களுக்குப் புத்துயிர் அளித்த பெருமையும் இவருக்கு உண்டு. இலாண்டார் (W.S. Landor) எழுதிய கட்டுரை, கவிதை ஆகிய இரண்டிலும் செவ்வியல் கூறுகள் பல காணலாம். கற்பனை உரையாடல்கள் (Imaginary Conversations) என்னும் நூலில் அவரது வீச்சும், அவர் கையாளும் உத்திகளும் வியக்கத்தக்கவை. திக்வின்சியின் ‘ஒரு ஆங்கிலப் போதைப் பொருள் நுகர்வோனின் ஒப்புதல்கள்’ (The Confessions of an English Opium Eater) என்னும் நூலில் அவர் தம் வாழ்வு நிகழ்ச்சிகள் பலவற்றை அழகுபடக் கூறியுள்ளார்.
ஆசுடின் சேன் (கி.பி. 1775-1817) நார்த்தாங்கர் ஆபி (Northanger Abbey), மென்சுபீல்டு பார்க்கு (Mansfield Park), தற்பெருமையும் தவறான மதிப்பீடும் (Pride and Prejudice). அறிவும் உணர்வும் (Sense and Sensibility), எம்மா (Emma), ஏற்கச் செய்தல் (Persuasion) ஆகிய புதினங்களில் மனித வாழ்வில் நடைபெறும் எளிய நிகழ்ச்சிகளையும் பாத்திரங்களையும் பார்க்காத நிகழ்ச்சிகளையும் ஒதுக்கித் தள்ளியதால், உயிருள்ள கலைப் படைப்புகளை உருவாக்க முடிந்தது.
உரைநடையைக் கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் சிறப்புறக் கையாண்டவர்களுள் நீயுமென் (Newman). கார்லைல் (Carlyle), இரசுகின் (Ruskin) ஆகியோர் முறையே சமயம், சமூகம், கலை பற்றித் தம் கருத்துகளைப் படிப்போர் உளங்கொள வெளிப்படுத்தினர். கார்லைல், வீரர்களின் குணச்சிறப்புகள், உண்மைத் தொண்டின் உயர்வு, நல்ல தலைமையின் இன்றியமையாமை ஆகியவை பற்றித் தம் கட்டுரைகளில் இடியென முழங்கினார். இரசும், ஓவியம், சிற்பம் பற்றியும், கலையில் நீதியும் நேர்மையும் பெறவேண்டிய பங்கு பற்றியும், விவிலிய நூல் நடையில் விளக்கினார்.
அரசி விக்டோரியா காலத்துக் கவிஞர்களுள்