உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கில இலக்கிய வரலாறு

221

ஆங்கில இலக்கிய வரலாறு

முன்னணியில் நிற்பவர் தென்னிசன் (கி.பி. 1809-92) ஆவார். செவிக்கினிய இசைநலம் வாய்ந்த இவர் கவிதைகளுள் “யுலிசீசு” (Ulysses), “மாடு” (Maud). “இலுக்ரீசியசு” (Lucretius) “நினைவாக” (In Memoriam) ஆகியவையும் மன்னன் ஆர்தர் பற்றியவையும் சிறப்புடையவை. இவையெல்லாம் கருத்துக்களுக்கேயன்றிக் கலை நுணுக்கத்திற்காகப் போற்றப்படுபவை. பிரௌனிங்கு (கி.பி. 1812-89) இவரினின்றும் முற்றிலும் வேறுபட்டவராவார். இவர் நாடகத் தன்னுரை (Dramatic Monologue) என்ற பாடல் வகையைச் செம்மைப்படுத்தினார். நாடக உடனடி உணர்வும் (Dramatic Immediacy) மனித மனங்களை ஊடுருவும் பாங்கும் கொண்ட நாடகத் தன்னுரைகள் பல எழுதினார். இவர் மனிதக்குல மேம்பாட்டில் கொண்டிருந்த முழு நம்பிக்கையையும் பல கவிதைகளில் அறிவிக்கிறார். “சார்டெல்லோ” (Sordello) “மோதிரமும் நூலும்” (The Ring and the Book) ஆகிய கவிதைகள். சற்றுக் கடினமானவையாயினும் படிப்போர்க்குப் பயன்தருபவை. மேத்யூ ஆர்னால்டு (கி.பி. 1822-88) கட்டுரை, திறனாய்வு. கவிதை ஆகிய மூன்று துறைகளில் முயன்று சமூகம், சமயம், கல்வி, கலை, இலக்கியம் ஆகிய பல பொருள்கள் பற்றி எழுதியவர், “சோரபும் ருசுதமும்” (The Sohrab and Rustum) “நாடோடி மேதை” (The Scholar Gipsy) “கைவிடப்பட்ட கடல் மனிதன்” (The Forsaken Merman) ஆகிய கவிதைகள் நெஞ்சை அள்ளும் தன்மையவை. திறனாய்வுக் கட்டுரைத் தொகுதிகள் இரண்டும் பின்னர் வந்த திறனாய்வாளர்களுக்கு வழிகாட்டியாய் அமைந்தவை. சமுதாயச் சிக்கல்கள் பற்றிய கருத்துகளைப் பண்பாடும் குழப்பமும் (Culture and Anarchy) என்ற நூலில் தமக்கே உரிய உரைநடையில் தந்துள்ளார்.

இராசட்டி (D. G. Rossetti), மாரிசு போன்ற கவிஞர்கள் கி.பி. 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் இரபேலுக்கு முன் வாழ்ந்த இத்தாலிய ஓவியர்களின் பாணியில் ஒவியம், கவிதை இரண்டையும் கொண்டு செல்ல வேண்டுமென்ற நோக்குடையவராய் இருந்தனர். எளிமையும், நேர்மையும், இயற்கை வருணனை நுண்மையும் இவர்களால் வலியுறுத்தப்பட்டன. இந்தகைய கவிதைக்கு இராசட்டி எழுதிய “சுவர்க்கத்தில் நங்கை” (The Blessed Damozel) என்ற கவிதை எடுத்துக்காட்டாய் அமைந்தது. ஓசை நயத்திற்கு ஆளானாலும் பிறகு தமக்கே உரியநடையில் நீதி போதனையை முற்றும் ஒதுக்கி, இசை மழை பொழிந்தார்.

தாக்கரே (கி.பி. 1811-63) பல இலக்கிய வகைகளைக் கையாண்டாராயினும். புதின ஆசிரியராகவே திகழ்ந்தார். பல புதினங்கள் எழுதினாரேனும் வீணரின் சந்தை (Vanity Fair), எசுமாண்டு (Esmond). பெண்டென்னிசு (Pendennis) ஆகியவையே இன்றும் படிக்கத் தக்கனவாக உள்ளன. இவர்தம் பாத்திரப் படைப்பும் உரைநடை வளமும் பெருமை உடையவை. புதின ஆசிரியர்களில் என்றும் குன்றாத புகழ் அடைந்தவர் திக்கன்சு (Dickens கி. பி. 1812-70) ஆவார். மறக்க முடியாத பாத்திரங்கள், யாவரையும் கவரும் நகைச்சுவை, பலவகையான கதைகள் ஆகியவையே இவரது வெற்றிக்குக் காரணங்கள். பிரச்சாரத்திற்கு அவர் அளித்த முக்கியத்துவமும் மிகைப்பட்ட உணர்ச்சியைத் தூண்டுவதற்காக அவர் நுழைத்த நம்ப முடியாத சில பாத்திரங்களும், நிகழ்ச்சிகளும், பாலுணர்வைப் புறக்கணித்ததும் அவருக்கு எதிராகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள், அவர் தம் ‘பிக்விக்கு பேப்பர்சு’ (Pickwick papers). ஆலிவர் டிவிசுடு, திகோலசு நிக்கல்பி, தேவிடுகாப்பர் பீல்டு, துன்பநேரங்கள் (Hard Times), இரண்டு நகரங்களின் கதை (A tale of Two Cities) ஆகியவை பாமரர்களிலிருந்து பண்பட்ட திறனாய்வாளர் வரை யாவராலும் விரும்பிப் படிக்கப்படுபவை.

சார்சு எலியட்டு (கி.பி. 1819-81) தம் புதினங்களில் கதைமாந்தர்களின் உள்ளுணர்ச்சி, சிந்தனை ஆகியவற்றை ஆய்கிறார். ‘ஆடம்பீடு’ (Adam Bede) எனும் புதினத்தின் உயிர்நாடி அதன் கதையாகும். சார்லட்டு, எமிலி, ஆன் (Aune) ஆகிய பிராண்ட்டே (Bronts) சகோதரிகள் மூவரும் புதின ஆசிரியைகள் ஆவர். சார்லட்டின், சேன் அயார் (Jane Eyre) ஓர் எளிய குடும்பப் பெண்ணில் காதலை ஒளிவுமறைவின்றிச் சித்திரித்தது. எமிலியின் ‘உதரிங்கு கைட்சு’ (Wuthering Heights) தனித்தன்மை வாய்ந்த புதினமாகும்.

சார்சுமெரிடித்து (கி.பி. 1828-1909), தாமசு ஆர்டி (கி. பி. 1840-1929) ஆகியோர் ஒருவரிலிருந்து மற்றவர் முற்றிலும் மாறுபட்ட புதின ஆசிரியர்கள் ஆவர். மெரிடித்து, கவர்ச்சி வாய்ந்த பாத்திரங்களை நாடினார். ஆர்டி எளிய பாத்திரங்களைத் தெரிந்தெடுத்தார். அவர்தம் புதினங்கள் விதிக்கு எதிராக மனிதன் நடத்தும் வீணான போராட்டங்களை அடுக்கடுக்காக எடுத்துரைத்தன. மனித வாழ்க்கையின் அவலங்களை. கேசுடர் பிரிட்சின் மேயர். தெகி ஆகிய புதினங்களில் எளிய பாத்திரங்கள், நிகழ்ச்சிகளைக் கொண்டே படம் பிடித்துக் காட்டியுள்ளனர்.

அரசி விக்டோரியாவின் காலத்தைச் சார்ந்தவராயினும், 20 ஆம் நூற்றாண்டுக் கவிஞர்களோடு சேர்த்து எண்ணத்தக்க பல தன்மைகளையுடைய கவிதைகள் எழுதியவர் ஆபகின்சு (கி.பி. 1844-89). கத்தோலிக்கப் பாதிரியாரான இவர், தம் சமயக் கவிதைகளில் கடவுள் மனித உறவு பற்றியும்,