உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கில இலக்கிய வரலாறு

222

ஆங்கில இலக்கிய வரலாறு

தம் ஆத்மாவின் போராட்டங்கள் பற்றியும், சிறப்புடைய உருக்கள், உயிரோட்டமுள்ள நடை ஆகியவற்றைப் பயன்படுத்தித் தமக்குப் பின்வந்த கவிஞர்களுக்கு வழிகாட்டியானார். இவரது “சிதைந்த கப்பல்” (The Wreck of the Deutschland) என்ற கவிதையும், இவர்தம் மனப் போராட்டத்தைச் சுட்டும் ஈரேழ்வரிப் பாக்களும் (Terrible Sonnets) சமயக் கவிதை வேண்டுவோர்க்குத் தெவிட்டாத விருந்தாகும்.

ஆங்கில இலக்கிய வரலாற்றில் 20 ஆம் நூற்றாண்டில் தலையாய இடம்பெறும் டி. எஸ். எலியட்டு, கவிஞரும் நாடகாசிரியரும் திறனாய்வாளரும் ஆவார், எசுரா பவுண்டு, கியூம், பிரெஞ்சுப்படிமக் கவிஞர்கள், ஆங்கில நுண்புலக் கவிஞர்கள் ஆகியோரின் தாக்கத்திற்குள்ளான எலியட்டு செவ்வியல் நெறியையே பெரிதும் விரும்பி, நவீன உலகில் மனித வாழ்வின் அலங்கோலங்களை, நிறை பொருள் தரும் குறைந்த சொற்கள், அதிர்ச்சி தரும் உருக்காட்சிகள் மூலம் எடுத்துக்காட்டியுள்ளார். இவருடைய “பாழ்நிலம்” (The Waste Land), “ஒரு பெண்ணின் ஓவியம்” (Portriat of a lady), “வெற்று மனிதர்” (Hollow Men), “மதியூகிகள் பயணம்” (Journey of the Magi), “நான்கு பகுதிகள்” (Four quarters) ஆகியவை புதிய கவிதையின் சிறப்புக் கூறுகளுக்குத் தலையாய எடுத்துக்காட்டுகள். இவர்தம், கோவிலில் கொலை (Murder in the Cathedral). மீண்டும் கூடிய குடும்பம் (Family Reunion) முதலானவை கவிதை நாடகத்திற்கு (Poetic Drama) மறுவாழ்வு அளித்தன.

அயர்லாந்து தந்த கவிஞர்களுள் தலைசிறந்தவரான ஏட்சு (Yeats- கி. பி. 1865-1939) தம் நாட்டுப் புராணக் கதைகளைத் தம் கவிதைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டார். உரைநடை, நாடகம், கவிதை ஆகிய மூன்று வகைகளையும் கையாண்டார். பிரஞ்சுப் படிமக் கவிஞர்களின் தாக்கத்தினால் படிமங்களை முருகுணர்ச்சிச் சுவையோடு பயன்படுத்தினார். இளமைக் காதலிலிருந்து முதுமையின் அவலம் வரை வாழ்வின் பல கூறுகள் பற்றியும் அயர்லாந்தின் தேசியம் பற்றியும் புதிய நடையில் புதிய உத்திகளோடு கவிதைகள் பல எழுதினார். ஐரிசு எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க மற்றொருவர் சிங்கு (Synge கி.பி. 1871 - 1909) ஆவார். மேலை உலகின் விளையாட்டுப்பிள்ளை (The Play boy of the Western World) உள்ளிட்ட ஆறு நாடகங்களால் ஐரிசு நாடக இயக்கத்திற்கு உயிரூட்டினார்.

ஆங்கிலப் புதின இலக்கியத்தில் 20-ஆம் நூற்றாண்டில் வியக்கத்தக்க சாதனை புரிந்தவர் போலந்தைச் சேர்ந்த கான்ராடு (கி. பி. 1857-1924) ஆவார். தாய்மொழியல்லாத ஆங்கிலத்தைக் கற்றுப் பிளாபேர், துர்சுனீங், என்றி, சேம்சு ஆகியோரின் தாக்கத்தினால் மனப் போராட்டங்களையும் தரும சங்கடங்களையும் சித்திரிக்கும் புதினங்களை எழுதினார். கடல் வாழ்வு பற்றிய இலார்டு சிம் (Lord Jim) போன்றவை அவர் பெயரை நிலை நிறுத்தின. ஈ.எம். பார்சுடர் (E.M. Forster) தம் இந்திய அனுபவங்களால் உந்தப்பட்டு எழுதிய ‘இந்தியாவுக்கு ஒரு வழி’ (A Passage to India) முதலான நூல்கள் தரமுடையவை. டி.எச்.இலாரன்சு (D.H. Lawrence) கவிஞராகவும் புதின ஆசிரியராகவும் நாடக ஆசிரியராகவும் திறனாய்வாளராகவும் பெரும் சாதனைகள் புரிந்தார். ஆண்மக்களும் காதலர்களும் (Sons and Lovers), அன்புப் பிடியில் பெண்கள் (Women in Lover), வானவில் (The Rainbow) போன்ற கதைகளும், அமெரிக்க இலக்கியத்தின் உயர்தனி நூல்கள் என்ற திறனாய்வு நூலும், ஏராளமான கவிதைகளும், அவர் கொண்டிருந்த தனித்தன்மையுடைய மனித வாழ்வுக் கொள்கைகளைப் பறைசாற்றுகின்றன.

நினைவோடைப் புதினத்தை ஆங்கிலத்தில் சிறப்புற எழுதியவர்களுள் வர்சீனியா உல்பு (கி.பி. 1882-1941) ஒருவராவார். பல்வேறுபட்ட அனுபவங்களால் உள்ளும் புறமும் தாக்கப்படும் மூளையின் ஒழுங்கு படுத்தப்படாத எண்ணங்களின் தொகுதியை இவர் தம் ‘திருமதி தாலோவே’ (Mrs. Dalloway), கலங்கரை விளக்கத்திற்கு (To The Light House) ஆகிய புதினங்களில் காணலாம். சேம்சு சாய்சு (கி.பி. 1882- 1941), இத்துறையில் மேலும் முன்னேற்றம் கண்டார், யூலீசிசு (Ulyssess) போன்ற புதினங்களில் மனித மனம் ஓர் எண்ணத்திலிருந்து மற்றொரு எண்ணத்திற்குத் தாவுவதை மிகுந்த திறமையுடன் படம் பிடிக்கிறார். பின்னிகனின் விழிப்பு (Finnegan's Wake) என்னும் புதினத்தில் தலைமைக் கதைமாந்தர், கதை முழுவதும் உறங்க, நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சார்சு ஆர்வெல் (கி.பி. 1903-50) எழுதிய கதைகளும் கட்டுரைகளும் இன்றைய உலக வாழ்வின் குறைகளை அங்கதச் சுவையோடு சுட்டுவன.

உரைநடை நாடகத்தைத் துடிப்புடன் சமுதாய நலனுக்காகக் கையாண்டவர் பெர்னார்டுசா (கி.பி. 1856-1956) ஆவார். நார்வீசிய நாடக ஆசிரியர் இப்சனின் தாக்கத்திற்கு ஆளான சா வற்றாத நகைச்சுவை. யார்க்கும் அஞ்சாத போக்கு, நுண்ணிய கலையாற்றல் ஆகியவற்றின் துணையால் சமுதாயத்தின் சீர்கேடுகளை, திருமதி வாரனின் தொழில் (Mrs. Warren' profession),ஆயுதங்களும் மனிதனும் (Arms and the man). கேன்டிடா (Candida), புனித சோன் (St. Joan) ஆகிய நாடகங்களில் கடுமையாகச் சாடினார்.