உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலக் கால்வாய்

223

ஆங்கிலக் கால்வாய்

இங்கிலாந்து மட்டுமே எண்ணற்ற எழுத்தாளர்களை ஆங்கிலத்துக்குத் தந்து வந்த நிலை மாறி, அதன் முன்னைய குடியேற்ற நாடுகள் பலவும் தரமுடைய படைப்பாளர்களை கொடுத்துதவும் நிலை தோன்றியுள்ளது. இவர்கள்தம் படைப்புகளெல்லாம் ஆங்கில இலக்கியக் கடலின் ஆழத்தையும் பரப்பையும் மிகுதிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

பி.ம.

துணை நூல்கள்:
Sampson, G., The Concise Cambridge History of English Literature, The English Language Book Society and Cambridge University Press, London, 1970.
Edward Albert, History of English Literature, Oxford University Press, Calcutta, 1979.
David Daiches, A Critical History of English Literature, 1960.
Boris Ford, A Guide to English Literature, 1961.
A.C. Baugh, A Literary History of England, 1967.
Grierson H.J.C. and Smith, J.C. A Critical History of English Poetry, 1944.

ஆங்கிலக் கால்வாய் பிரிட்டனையும் பிரான்சையும் பிரிக்கும் கால்வாயாகும். இது அட்லாண்டிக்குப் பெருங்கடலின் கிளையாக வடகடல்வரை நீண்டுள்ளது. ஏறத்தாழ 560 கி.மீ. நீளத்தையும் 240 கி.மீ. அகலத்தையும் கொண்ட ஆங்கிலக் கால்வாய் (English Channel) சில இடங்களில் 36 மீ. முதல் 54 மீ. வரை ஆழமும், சில இடங்களில் 105 மீ, ஆழமும் கொண்டுள்ளதாய் அமைந்துள்ளது. இது இங்கிலாந்து முனையில் தோவரையும் (Dover), பிரான்சு முனையில் கிரிசு-நெசு (Gris-Nez) முனையையும் கொண்டுள்ளது. இக்கால்வாயின் மிகக் குறுகிய அகலம் 33.கி.மீ.

ஆங்கிலக் கால்வாய், கடல் கொந்தளிப்புகளுக்கும் சீர்கெட்ட தட்பவெப்ப நிலைக்கும் பெயர்பெற்றது. அட்லாண்டிக்குப் பெருங்கடலிலிருந்து வரும் நீர்ப்போக்கு, கொந்தளிப்பான கடலலைகளை உருவாக்கித் தருகிறது. இங்கு வீசும் மேல் காற்றுகளும் புயல்களை உண்டாக்கக் கூடியவை. பனிமூட்டம் மிகுதியாக உள்ளதால் இக்கால்வாயை அமைதியாகக் காண்பது இயலாது. இக்கால்வாயில் அடிக்கும் அலைகளும் ஒழுங்கற்றவை. இருப்பினும், இக்கடலலைகள் கப்பல் போக்குவரத்திற்குப் பெரிதும் பயன்படுவன. இது ஒருகாலத்தில் பிரிட்டனையும் ஐரோப்பாக் கண்டத்தையும் இணைத்த நிலமாகலாம்; அறுபடாத நிலப்பாகமாக இருந்திருக்க வேண்டுமென்றும் கருதுவர். கடலரிப்பினால் பல மாறுதல்கள் ஏற்படுவது இயற்கை. ஆங்கிலக் கால்வாயும் அவ்வண்ணம் கடலரிப்பினால் உருவானதுதான் என்று கருதுவர்.

ஆங்கிலக் கால்வாய்

இக்கால்வாய் கப்பற் போக்குவரத்திற்கும் மீன் பிடிப்பதற்கும் பயன்படுகிறது. பிளிமத்து, சௌத்தாம்ப்டன், போர்ட்சுமத்து, போக்சுடோன், தோவர் ஆகியவை இங்கிலாந்துப் பகுதியிலும், செர்பர்க்கு, இலாவர், கலே ஆகியவை பிரான்சுப் பகுதியிலும், உள்ள துறைமுகங்களாகும். வைட்டு தீவும் (Wight), ‘சேனல்’ (Channel) தீவுகளும் இங்குள்ள சிறப்பான தீவுகளாகும்.

இங்கிலாந்தையும் பிரான்சையும் கடலுக்குள் போடப்பட்டுள்ள இரும்புக் குழாய்கள் மூலம் இணைத்துப் போக்குவரத்தை எளிதாக்கும் முயற்சி கி.பி. 1875 முதல் நடைபெற்று வந்தாலும், இத்திட்டம் இடையில் கைவிடப்பட்டது. மீண்டும் இத்திட்டத்தை 1950-இல் தொடர்ந்தார்கள். இருபது உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று 1970-ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இது தொடர்பான கருத்துகளையும் குறிப்புகளையும் தொகுத்துக் கொடுத்தது. பிரிட்டனும் பிரான்சும் 1971 சனவரி மாதத்தில் இக்கருத்துகளை ஆய்வு செய்து, சுரங்கப் பாதையை அமைக்க முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இக்கால்வாயில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல போர்கள் நிகழ்ந்துள்ளன. வைக்கிங்குப் (Viking) படையெடுப்புகள், ஆர்மடா படையெடுப்பு, மூன்றாம்