உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியத் தாழிசை

265

ஆசிரிய நிகண்டு

றான். தனி மனிதனின் வாழ்க்கையில் திருமணம் ஒரு கடப்பாடாகவும் தவிர்க்க முடியாத நிகழ்ச்சியாகவும் அமைகிறது. இந்நிலையில் மனிதன் தன் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் தான் ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டியவனாகிறான். இக்கடமைகள், பொருள் (அருத்தம்), காதல் (காமம்) என்னும் இருபெரும் பிரிவுகளில் அடங்குகின்றன.

மூன்றாம் நிலையான வானப்பிரத்தம் அல்லது ஒதுங்கி வாழும் நிலையில் மனிதன் சமூக வாழ்க்கையின் பொறுப்புகளினின்றும் ஓய்வு பெற்றுத் தன் மனைவியுடன் காட்டிற்குச் சென்று உலக நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கி நின்று, அவற்றோடு ஒட்டாமல் வாழ்கிறான். இந்நிலையில் அவன் வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவத்தை ஆராய்ந்து நோக்கத் தொடங்குகிறான், இந்நிலையில் வீட்டுலகு (முத்தி) மட்டும் கவனத்தை ஈர்க்கிறது.

வாழ்க்கையின் இறுதிப்படியாகச் சந்தியாசம் என்னும் துறவுநிலை அமைத்துள்ளது. இந்நிலையில் மனிதன் உலகப்பற்றுகள் எல்லாவற்றையும் துறந்து விட்டுத் தன்னைச் சமூக உறவுகள், சமூகத் தொடர்புகள் ஆகியவற்றிலிருந்து விடுவித்துக் கொள்கிறான். இந்நிலையிலுள்ள மனிதன் ஒரு குடும்பத்தையோ ஒரு குழுவையோ சார்ந்தவனல்லன், இவன் பொதுவாக மனித இனத்தைச் சேர்ந்தவனாகக் கருதப்படுகிறான். வாழ்க்கையின் முடிவிற்குத் தன்னை ஆயத்தம் செய்துகொள்கிறான். மேற்குறிப்பிட்ட நான்கு நிலைகளுள் ஒவ்வொரு நிலையிலும் மனிதன், தன்னை அடுத்த நிலைக்கு ஏற்றவனாகப் பயிற்சி செய்து கொள்கிறான். ஒவ்வொரு நிலைக்கும் உரிய கடமைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. காண்க: தருமம், இந்தியச் சமுதாய அமைப்பு.

ஆசிரியத் தாழிசை என்பது ஆசிரியப்பாவின் மூவகை இனங்களுள் ஒன்றாகும். இது அகவற்றாழிசை என்றும் வழங்கப்பெறும். தம்மில் அளவு ஒத்துவிளங்கும் மூன்றடிகளால் அமையும் செய்யுள் ஆசிரியத் தாழிசை என்று வழங்கப்பெறும். இவ்வகைச் செய்யுள்கள் ஒருபொருள் மேல் மூன்றாக அடுக்கி வருவது சிறப்புடையதாகும். அங்ஙனமின்றித் தனித்து வந்தாலும் அது ஆசிரியத் தாழிசை எனவே சொல்லப்படும். நால்வகைப் பாக்களுக்கும் பாவினங்களை வகுத்து இலக்கணங் கூறும் மரபு தொல்காப்பியத்திற்குப் பின்னர் யாப்பிலக்கணத்தில் உருவாகிய ஒன்றாகும். யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை போன்ற பிற்கால யாப்பிலக்கண நூல்களிலும், காக்கைபாடினியார் மயேச்சுரர் போன்ற பின்னர் வந்த யாப்பிலக்கண ஆசிரியர்களாலும் பாவினங்களுக்கு இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. ‘தருக்கிய தாழிசை முன்றடி ஒப்பன’ என்பது ஆசிரியத் தாழிசை பற்றிய யாப்பருங்கலக் காரிகை விதியாகும். காக்கை பாடினியார் ‘அடிமூன்று ஒத்திறின் ஒத்தாழிசையே’ என்றும், மயேச்சுரர் “ஒத்த ஒரு பொருள் மூவடி முடியின் அது, ஒத்தாழிசையாம் உடன் மூன்று அடுக்கின்” என்றும் இதற்கு இலக்கணம் வகுத்துள்ளனர். ‘கன்று குணிலா’, ‘பாம்புகயிறா’ ‘கொல்லையஞ்சாரல்’ எனத் தொடங்கும் சிலப்பதிகாரச் செய்யுள்கள் மூன்றும் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கிவந்த ஆசிரியத் தாழிசைக்கு எடுத்துக்காட்டாகும்.

ஆசிரியத் துறை என்பது ஆசிரியப்பாயின் மூவகை இனங்களுள் ஒரு வகையினைக் குறிக்கும். இவ்வினச் செய்யுள் பலவகையாக அமையும். அவை யாவன: நான்கு அடிகளுடையதாய், ஈர்றயலடி குறைந்து வருவது; நான்கு அடிகளுடையதாய், ஈற்றயலடி குறைந்து இடைமடக்காக வருவது; நான்கு அடிகளுடையதாய் இடையிடையே குறைந்து வருவது; நான்கு அடிகளுடையதாய் இடையிடையே குறைந்து இடைமடக்காய் வருவது ஆகும். இவ்வினச் செய்யுள் எவ்வகைச் சீரானும் அடியானும் அமையும், நான்கு அடிகளுள் முதலயலடி குறைந்தும். நடுவிலுள்ள இரண்டு அடிகள் குறைந்தும் மிக்கும் வரும். இடையில் ஓரடி குறைந்து வருவது ஆசிரிய நேர்த்துறை என்றும், இரண்டடிகள் குறைந்து வருவது ஆசிரிய இணைக்குறட்டுறை என்றும் கூறப்படும். நால்வகைப் பாக்களுக்கும் பாவினங்கள் வகுத்து இலக்கணங்கூறும் மரபு தொல்காப்பியத்திற்குப் பின்னர்த் தோன்றியதாகும். யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை போன்ற யாப்பிலக்கண நூல்கள் ஆசிரியத்துறை முதலிய பாலினங்களுக்கு இலக்கணம் வகுத்துள்ளன. “நான்கடியாய் எருத்தடிநைந்தும் இடைமடக்காயும் இடையிடையே சுருக்கடியாயும் துறையாம்” என்பது யாப்பருங்கலக் காரிகை கூறும் ஆசிரியத்துறை இலக்கணமாகும்.

ஆசிரிய நிகண்டு கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டிப் புலவரால் இயற்றப்பட்ட நூல். இவர் தொண்டை மண்டலத்திலுள்ள செஞ்சியைச் சார்ந்த ஊற்றங்கால் என்னும் ஊரினர். ஞானப் பிரகாசர் என்பவரின் மாணவராவார். இவர் இந்நிகண்டு நூலை ஆசிரியலிருத்த யாப்பினால் செய்துள்ளார். இந்நூலின் பாயிரச் செய்யுளொன்றில் திவாகரம், பிங்கலந்தை, உரிச்சொல் நிகண்டு, கயாதரம், அகராதி நிகண்டு ஆகியவற்றிலுள்ள சொற்களையெல்லாம் பயன்படுத்தியுள்ளதாக இவர் குறிப்பிட்டுள்ளார். அதனால், கயாதர நிகண்டின் காலத்திற்குப் பிற்பட்டவர் இவராவார் என்பது புலனா-

வா. க. 2-34