உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் தொழில் திறன்

272

ஆசிரியர் நிலை

பயன்படுத்தி, மாணவர்கள் பயன் அடையச் செய்ய வேண்டும். நிரல் வழிக் கற்றல் (Programmed Learning) முழுமையான சிறுசிறு பாடப்பகுதிகளின் அடிப்படையிலான அணுகுமுறை (Modular Scheduling) ஆகிய முறைகளில் ஆசிரியருக்குப் பயிற்சியும், இம்முறைகள் மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள், கருவிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் ஆற்றலும் இருக்க வேண்டும். பாடத்தைத் திருப்பிப் பார்ப்பதற்கும் தாமே படித்துப் பயனடைதற்கும் மேலும் பாடத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளுதற்கும் இவை உதவி செய்யும். இவற்றை உரிய இடத்தில் முன்னேற்பாடுகளுடன் பயன்படுத்தி வருவது ஆசிரியர் தொழில் திறனை மிகச் செய்வதுடன் அவருக்கு வேலையில் மன நிறைவையும் கொடுக்கும்.

வகுப்பறையில் ஒரே ஆசிரியர் கற்பிப்பதைத் தவிர்த்துச் சில ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து பாடத்தை நடத்தலாம். இம்முறையில் ஆசிரியர் கற்பிக்கும்போது மற்ற ஆசிரியர்களும் வகுப்பில் மாணவர்களுடன் அமர்ந்திருப்பார்கள். அக்குழு, மாணவர்கட்கு உதவுவதுடன் பாடத் தலைப்பின் வெவ்வேறு பகுதிகளைக் கற்பிக்கும் ஓர் ஆசிரியரால் விடப்பட்ட கருத்துகளையும் தொகுத்துரைக்கும். இது குழுக் கற்பித்தல் முறை (Team Teaching) எனப்படும். இம்முறையில் கற்பித்தலும், ஆசிரியரது தொழில் திறனை வளர்க்க உதவும்.

நான்கு அல்லது ஐந்து மாணவர்களுக்கு, நான்கு அல்லது ஐந்து மணித்துளி நேரத்திற்கு ஒரு சிறிய பாடத் தலைப்பில் ஒரு குறிப்பிட்ட கற்பித்தல் திறன் வருமாறு கற்பித்துப் பழகுதல், நுண்ணிலைக் கற்பித்தல் எனப்படும். இக்கற்பித்தலைக் கேள்வி நாடா, காட்சி நாடா (Tape Recorder and Video Cassette Recorder) முதலியவற்றில் பதிவு செய்து, பின்னர்க் கற்பித்த ஆசிரியரே அவற்றைப் பயன்படுத்தித் தம்மைத் திருத்திக் கொள்ளலாம். தம்முடன் பணியாற்றும் ஆசிரியர்கள், மேல் அலுவலர்கள், மாணவர்கள் ஆகியோரும் அக்கற்பித்தலை மேற்பார்வையிட்டுக் கருத்துக்கள் கூறலாம். கிடைத்த அறிவுரைகளின்படி மீண்டும் அப்பாடத்தையோ அதையொத்த வேறொரு தலைப்பையோ குறிப்பிட்ட அத்திறனுக்காக முன்பு கற்பித்த அதே மாணவர்களுக்கோ வேறு ஒருசில மாணவர்களுக்கோ கற்பிக்கலாம். இப்போது ஆசிரியரிடம் முன்பு கற்பித்தலைவிட முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது தெரியும்.

விரிவுரையாற்றல் என்ற பழைய கற்பித்தல் முறையைத் தவிர்த்துப் இன்று பலரும் மேற்கொள்ளும் குழக் கற்பித்தல் முறை மிகவும் விரும்பப்படுகிறது. கருத்தரங்கு, சொற்போர், உரைக்கோவை (Symposium). கருத்துப்பட்டறை (Work Shop) முதலியன இம்முறைகளில் அடங்கும். இவற்றைச் சீரியமுறையில் கையாளும்போது மாணவர்கள் நன்கு கற்பர்.

ஜி.சு.

ஆசிரியர் நல்லந்துவனார் கடைச்சங்கப் புலவருள் ஒருவர், ‘நல்லந்துவனார்’ என்று தனித்தும் ‘ஆசிரியர் நல்லந்துவனார்’ என்று அடையொடு சேர்த்தும் அழைக்கப்படுவார். இவர் மதுரையைச் சேர்ந்தவர். அதனால், இவரை ‘மதுரையாசிரியர் நல்லந்துவனார்’ என்று சிறப்பித்தும் கூறுவர். எட்டுத்தொகையில் கலித்தொகை என்னும் இலக்கியத்தைத் தொகுத்தவர் இவராவார். கலியுள் நெய்தற் கலியினைச் சிறப்பாகப் பாடியுள்ளார், இந்நூலிற்கு இவர் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல் முதலியவற்றால் இவர் சிவ வழிபாடுடையராவர் என்று எண்ணத் தோன்றுகிறது. பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்னும் முறையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

நெய்தல் நிலப் பழக்க வழக்கங்கள் பலவற்றையும் வைதிக ஒழுக்கங்கள் சிலவற்றையும் இவர் தம் நெய்தற் கலியுள் விளக்கியுள்ளார். உலக மக்களுக்கு நன்னெறி காட்டும் அறிவும், அறமும் சார்ந்த நல்லொழுக்க நெறிகளை இவர் பாடல் விளக்குவதால் இவர்தம் ஒழுக்கச் சிறப்பும், கல்விச் சிறப்பும் புலனாகின்றன. இவருடைய பாடல்கள் நற்றிணையில் ஒன்றும் (88), பரிபாடலில் நான்கும் (6,8,11,20), அகநானூற்றில் ஒன்றுமாக (43) இடம்பெற்றுள்ளன. திருவள்ளுவமாலையில் ஒருபாடல் இவர் பெயரில் அமைந்துள்ளது. நற்றிணைப் பாடல் குறிஞ்சித் திணையில் தோழி கூற்றாகவும், அகநானூற்றுப் பாடல் பாலைத் திணையில் தலைமகன் கூற்றாகவும் அமைந்துள்ளன.

கி.கோ.

ஆசிரியர் நிலை: இந்தியாவில் அவ்வப்போது அமைக்கப் பெற்ற கல்வி ஆய்வுக் குழுக்கள், கல்வியின் அமைப்பினைப் புதுப்பித்து மேலும் பயனுள்ளதாக மாற்றப் பல பரிந்துரைகளைக் கூறுவதுடன், ஆசிரியர்கள் நிலையினை உயர்த்தவும் பரிந்துரைகளைக் குறிப்பிட்டுள்ளன. இராதா கிருட்டிணன் தலைமையில் 1948 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கல்விக்குழு பல்கலைக்கழகங்களின் சிக்கல்களை ஆராய்ந்தது. இக்குழுவின் பரிந்துரைகளுட் சில, ஆசிரியர்களைப் பற்றியவை. ஆசிரியர்களின் திறன், மனப்பான்மை ஆகியவற்றைச் சார்ந்து ஒரு கல்வித் திட்டத்தின் வெற்றி அமைவதாகும் என்பதனைச் சுட்டிக்காட்டி, பல்கலைக்கழகக் கல்வியின் தரம் ஓரளவு தாழ்ந்து காணப்பட்டதற்கு ஆசிரியர்களும் ஒரு காரணமாவர் என்று இவ்வறிக்கை குறிப்பிட்டது. பல்கலைக்கழகங்களில் ஆய்வக, நூலக வசதிகள், ஆராய்ச்சி வசதிகள் போன்றன போதிய அளவு இல்லாமையும் உயர்-