உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர் நிலை

274

ஆசிரியர் நிலை

இந்திய நாட்டின் கல்வி அமைப்பினை 1964 இல் முழுமையாக ஆராய்ந்து அறிவுரைகள் வழங்க இந்திய அரசு, ஒரு கல்வி ஆய்வுக் குழுவினை அமைத்தது. கோத்தாரிக் கல்விக் குழு எனப்பட்ட இக்குழு, 1966-ஆம் ஆண்டில் “கல்வியும் நாட்டின் வளர்ச்சியும்” என்ற தலைப்பைக் கொண்ட தமது அறிக்கையை அரசுக்குக் கொடுத்தது. கல்வித் தரத்தை உயர்த்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் யாவற்றுக்கும் ஆசிரியப் பயிற்சி தலையாய பகுதியாகுமென்றும் ஆசிரியக் கல்வி சிறப்புற அமைய வேண்டுமாயின், அது பல்கலைக்கழகக் கல்வியுடன் இணைந்தும், பள்ளிக்கல்வி, சமுதாய வாழ்க்கை ஆகியவற்றுடன் இணைந்தும் செயற்பட வேண்டுமென்றும் கோத்தாரிக் கல்விக்குழு குறிப்பிட்டது. பல்கலைப் பட்டப் படிப்பில் கல்வியியலை ஒரு விருப்பப் பாடமாக அமைத்தல், கல்வியியலில் உயர்நிலை, ஆராய்ச்சிப் படிப்பு ஆகியவற்றிற்குரிய வசதிகளைப் பல்கலைக் கழகங்கள் ஏற்படுத்துதல், ஆசிரியப் பயிற்சிக் கல்லூரிகளில் விரிவாக்கப் பணிக்காக (Extension Services) ஒரு துறை ஏற்படுத்திப் பல்வேறு செயல்களை மேற்கொள்ள ஊக்குவித்தல். புதிய கல்விக் கருத்துகளை ஆசிரியர்களிடையே பரப்ப உதவும் கல்விக் கழகங்களை நிறுவுதல் போன்றன இவற்றுள் சிலவாம். ஒவ்வொரு கல்வியியல் கல்லூரியிலும் பல்வேறு நிலைகளுக்கான ஆசிரிய பயிற்சிப் பிரிவுகள் ஒருங்கிணைந்திருத்தலைக் (Comprehensive College) கோத்தாரிக் கல்விக்குழு ஆதரித்தது.

ஆசிரியப் பயிற்சியின் தரம் உயர மேலும் பல வழிகளையும் இக்கல்விக் குழு பரிந்துரை செய்துள்ளது. கற்பித்தல் பயிற்சியை மேலும் சிறப்பாக்குதல், பட்டப்படிப்பு ஆசிரியக் கல்வி ஆகிய இரண்டும் இணைந்த வகுப்புக்கு ஏற்பாடு செய்தல், கல்விக் குறிக்கோள்களுக்கேற்ப ஆசிரியக் கல்விக்கான பாடத் திட்டங்களை உருவாக்குதல், சிறந்த பட்டதாரிகளை ஆசிரியப் பயிற்சி பெற ஊக்குவித்தல். கல்லூரி ஆசிரியர்க்கான பயிற்சித் திட்டங்களை உருவாக்குதல் போன்றன இவற்றுள் அடங்கும். கற்பித்தல் முறைகளை மேலும் சிறப்பானவையாக உயர்த்தவும் பல கருத்துகள் கோத்தாரிக் கல்விக் குழுவினால் குறிப்பிடப்பட்டுள்ளன. நெகிழ்ச்சி, தேவைக்கேற்ப மாற்றம் பெறுதல் ஆகிய அடிப்படையில் கற்பித்தல்முறைகள் அமைதல் வேண்டும்; சிறந்த ஆசிரியர்கள் புதிய முறைகளை உருவாக்கிச் செயற்படுத்த ஊக்குவிக்கப் படவேண்டும்: கற்பித்தலுக்குரிய புதிய துணைக் கருவிகள் பொருள்கள் போன்றவற்றை ஆக்கித் தருதல் ஆகியன பயிற்சிக் கல்லூரிகளின் பொறுப்பாக அமைதல் வேண்டும்; இவை, எளிதில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு மிகக் குறைந்த செலவில் உருவாக்கக் கூடியவையாக இருத்தல் நல்லது என்றெல்லாம் கோத்தாரிக் கல்விக்குழு பரிந்துரைத்தது.

ஆசிரியர்களின் பொருளாதார, சமூக, பணி நிலைகளை உயர்த்துவதற்கான பரிந்துரைகளையும் கோத்தாரிக் கல்விக்குழு அளித்துள்ளது. ஆசிரியர்களது ஊதிய உயர்வுக்கு அரசு முன்னுரிமை அளிப்பதன் இன்றியமையாமையையும், பல்வேறு நிலை ஆசிரியர்களுக்குக் குறைந்த அளவு ஊதிய விகிதத்தை அரசு அமைக்க வேண்டியதன் முதன்மையையும் இக்கல்விக் குழு வலியுறுத்தியுள்ளது. ஆசிரியர்களது ஊதிய அமைப்பு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டுமென்றும், பதவி உயர்வளிப்பதில் தகுதி, திறமை ஆகியவற்றுக்குப் போதிய இடம் அளிக்கப்பட வேண்டுமென்றும் இக்குழு குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆசிரியர்களது நலனைப் பாதுகாக்க ஓர் அமைப்புத் தேவை. சிறந்த ஆசிரியர்களுக்குத் தேசிய அளவில் விருதுகள் அளிக்கும் திட்டத்தை மேலும் பரவலாக்கிச் சமுதாயம் அவர்களது தொண்டிற்குக் மதிப்பளிக்கிறது என்பதனை ஆசிரியர்கள் நன்கு உணரச் செய்வது இன்றியமையாதது என்பதும் கோத்தாரி கல்விக் குழுவின் கருத்தாகும்.

அண்யிைல் மைய அரசு இரு தேசிய ஆய்வுக் குழுக்களை அமைத்துள்ளது. முதற் குழு, பள்ளி ஆசிரியர்களின் சிக்கல்களையும், இரண்டாம் குழு தொழில்நுட்பக் கல்வி உட்பட்ட உயர்கல்வி ஆசிரியர்களின் சிக்கல்களையும் ஆராயும். பேராசிரியர் டி.பி. சட்டோபாத்யாயா முதல் கல்விக் குழுவின் தலைவராகவும். பேராசிரியர், இரயிசு அகமது இரண்டாம் குழுவின் தலைவராகவும் அமர்த்தப்பட்டுள்ளனர். இருகுழுக்களும் 1984 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தங்கள் அறிக்கைகளை அரசுக்கு அனுப்ப வேண்டும். (ஆனால், 1985 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இறுதி வரை அறிக்கை வெளிவரவில்லை). இக்குழுக்கள், நாட்டின் குறிக்கோள்களுக்கு ஏற்று ஆசிரியக் கல்வி இலக்குகளை வரையறுத்தல். ஆசிரியர்களுக்குச் சமுதாயத்தில் ஏற்ற ஒரு நிலையினை அளித்தற்கான வழிகளைச் சுட்டிக் காட்டுதல், ஆசிரியப் பணிக்குச் சிறந்த இளைஞர்களை, குறிப்பாகப் பெண்களைத் தேர்ந்தெடுத்து இப்பணியில் ஆர்வத்துடன் செயலாற்ற ஊக்குவிக்கும் வழிகளைக் குறிப்பிடுதல். ஆசிரியப் பயிற்சி ஆசிரியர்க்கான பணியிடைப் பயிற்சி ஆகியவற்றுக்கான உயர் முறைகளை ஆராய்தல். முறைசாராக் கல்வியில் பள்ளி ஆசிரியர்களது பணியினை வரையறுத்தல். ஆசிரியர்க்கான ஒரு பொது நடத்தை நெறித் தொகுப்பை உருவாக்குதல். ஆசிரிய நலத்-