உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ்வியற் களஞ்சியம் 2.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆசிரியர்-பெற்றோர் கழகம்

280

ஆசிரியர் மாணவர் உறவு

பெற்றோர் பள்ளிக்கு வந்து பள்ளியின் பணிகளையும் நடைமுறைகளையும் நேரில் காண வாய்ப்பளிக்கப்படுகிறது. பள்ளிகளில் பெற்றோர்களுக்கும் பொறுப்புண்டு என்பதனை உணர்த்துவது மட்டுமன்றி ஆசிரியருக்கும் சமூகத்தில் பங்குண்டு என்பதை அறிவிக்கும் வகையில் ஆசிரியருக்குச் சமூக ஊழியப் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன.

பிளொடன் (Plowdone) அறிக்கையில் (1967-இல் வந்தது) ஆசிரியர்-பெற்றோர் கழகங்களின் குறைந்த அளவுச் செயல்திட்டங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அவையாவன: 1. பெற்றோர்களுக்குப் பள்ளியில் நல்வரவு தருதல், 2. பள்ளியில் சேர்ந்த ஆறு திங்களுக்குப்பின், பெற்றோர் தவறாது வருகை தந்து. வகுப்பாசிரியருடன் தங்கள் பிள்ளைகளின் கல்வி நிலையைப் பற்றி ஆய்தல், 3. ஒரு நாளைக் குறிப்பிட்டு, அந்நாளில் பெற்றோர்களை வரவழைத்துப் பள்ளிப் பணிகளைப் பார்வையிட வாய்ப்பளித்தல், ஆகியவை பெற்றோர் ஆசிரியர் கழகம் மேற்கொள்ள வேண்டிய இன்றியமையாப் பணிகளாகும்.

இந்தியாவில்: இந்திய நாட்டில், தேசிய அளவில் 1952-இல் இந்தியத் தேசிய ஆசிரியர்-பெற்றோர் கழகம், தில்லியில் நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் மாநாடுகள் ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்தப் பெறுகின்றன. 1975-ஆம் ஆண்டில் இந்தியத் தேசிய ஆசிரியர் பெற்றோர் கழகத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற மாநாடு குறிப்பிடத்தக்கதாகும். இக்கழகம், மூன்று திங்களுக்குரிய இதழை நடத்திக் கருத்துப் பொதிந்த செய்திகளை வெளியிட்டு வருகிறது.

தமிழ் நாட்டில் 1964 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஆசிரியர் - பெற்றோர் கழகம். தோற்றுவிக்கப் பெற்றது. இக்கழகம், சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் செயற்படுகிறது. தமிழக அரசின் கல்வி அமைச்சர் இக்கழகத்தின் பதவி வழித் தலைவராவர். இக்கழகம், பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்தம் பெற்றோர்கள் பணியாற்றும் ஆசிரியர்கள் இவர்களிடையே நட்புறவையும் கூட்டுறவையும் தோற்றுவித்துக் கல்வி வளர்ச்சியில் தனிக் கவனத்துடன் செயலாற்றி வருகிறது. சாதி, சமய, மொழி வேறுபாடுகளைக் கடந்து, தக்க விதிமுறைகளை வகுத்துப் பணியாற்றுகிறது. மேலும் மாவட்ட அளவிலும் பள்ளி அளவிலும் அமைத்துக் கொண்டுள்ளது.

இக்கழகம், 1964-63-ஆம் ஆண்டுகளில் 22 கிளைக் கழகங்களைக் கொண்டு தன் பணியைத் தொடங்கிற்று. இப்போது 27,632 கிளைக் கழகங்களைத் தோற்றுவித்து. அவற்றின் தலைமைக் கழகமாக விளங்குகிறது. சமூகம், பொருளாதாரம், கலை, கல்வி முதலிய துறைகளில், இனம் தலைமுறையினர் முன்னேற்றம் பெறுதல்; வாழ்வில் உறுதியான முதலிடம் பெறவும் தலைமைப் பொறுப்பு ஏற்கவும் சிறந்த குடிமக்களாகத் திகழவும் தொண்டாற்றுதல்; பள்ளிக்கும் வீட்டுக்கும் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்திச் சிறுவர்களின் நல்வளர்ச்சிக்கு ஆசிரியர் பெற்றோர் ஒத்துழைப்பின் வாயிலாக வாய்ப்புகளைத் தோற்றுவித்தளித்தல்; பெற்றோர், ஆசிரியர், மாணவர் ஆகியவர்களிடையே தேசிய ஒருமைப் பாட்டுணர்ச்சி ஓங்கவும், தங்களுக்குள் தடையின்றிக் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளவும் உரிய வாய்ப்புகளைத் தருதல் போன்ற பல்வேறு நோக்கங்களில் இக்கழகம் பணியாற்றிவருகிறது.

மாவட்டங்கள்தோறும், உள்ள மாவட்டப் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள், பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கும், மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கும் இணைப்புப் பாலமாக அமைந்து மேற் கூறிய நோக்கங்கள் ஈடேறும் வகையில் செயற்படுகின்றன. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இக்கழகத்தின் பதவி வழித் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார், பொதுக்குழு, நிருவாகக்குழு, நிதிக்குழு குறிப்பிட்ட பணிகளுக்காக அமைக்கப்படும் குழு என நான்கு உட்பிரிவுகளைக் கொண்டு இக்கழகம் செயலாற்றுகிறது.

பள்ளி ஆசிரியர்-பெற்றோர் கழகம், அவ்வப் பள்ளிக் கட்டிடத்தில், தனக்கென ஓர் அலுவலகம் பெற்று இயங்குகிறது. பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் அடங்கிய பொதுக்குழு அமைக்கப்பட்டு, அதிலிருந்து பத்துப் பெற்றோர்களும் ஐந்து ஆசிரியர்களும் கொண்ட நிருவாகக் குழ தேர்ந்தெடுக்கப்பெற்று இயங்குகிறது, பெற்றோரே தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். பள்ளியின் தேவைகள், கட்டிட வசதிகள், நூலகம் நிறுவுதல் முதலிய பணிகளுக்குத் தேவையான நிதிவசதிகளைப் பெற ஆசிரியர்-பெற்றோர் சுழகங்கள் பெரிதும் துணை புரிகின்றன. சமுதாயத்தில் ஆசிரியர்களின் மதிப்பு நிலையினை உயர்த்தவும் இக்கழகங்கள் உதவுகின்றன.

சி.பொ.

ஆசிரியர் மாணவர் உறவு : ஆசிரியர் திறம்படக் கற்பிக்கவும் மாணவர்கள் செம்மையுறக் கற்றிடவும் வகுப்பறையில் மாணவர்களுக்கும் ஆசிரியருக்கும் இடையே நிலவும் நல்லிணக்கச் சூழலே ஆசிரியர், மாணவர் உறவு (Teacher Student Relationship) எனச் சொல்லப்படும்.

பண்டைக் காலத்தில் கல்வி வாழ்வோடு இயைந்து கற்பிக்கப்பட்டு வந்தது. செய்து கற்றல்,